குழந்தை வளர்ப்பு: குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன?

    • எழுதியவர், நதாஷா பத்வார்
    • பதவி, பிபிசி இந்திக்காக

சிறுவயதில் கொஞ்ச நேரத்திற்கு எங்கோ தொலைந்து போன கதைகள் என் வயதில் இருக்கும் பெரும்பாலானோரிடம் இருக்கும்.

பெற்றோருடன் ஒரு பொது இடத்திற்கு சென்று, பெற்றோர் இருவரும் உங்கள் கையைப் பிடித்திருக்கவில்லை என்பதை திடீரென்று உணர்ந்து, அவர்களிடமிருந்து பிரிந்து, கூட்டத்தில் தொலைந்து போன அந்த நினைவுகள் அனைவரிடமும் உள்ளன.

அப்போதைய உலகம் மிகவும் பரிச்சயமானதாகவும் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லையென்றாலும்கூட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதில்லை.

பஞ்சாபின் சிறிய நகரமான ஃபரித்கோட்டின் தெருக்களில் நான் என் சித்தி மகளுடன் தொலைந்து போன ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு ஐந்து வயது.

குடும்பத்தில் ஒரு திருமணம் இருந்தது. எல்லா பெரியவர்களும் ஏதோ சடங்குக்காக மணமகள் வீட்டிற்குச் சென்றிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த இடத்தில் சிறு குழந்தைகளாகிய நாங்கள் சிலரே இருந்தோம். என் பாட்டி மற்றும் சித்தி கொடுத்திருந்த சிறிதளவு பணம் என்னிடம் இருந்தது.

அருகில் இருக்கும் கடைக்குச்சென்று சாக்லேட் வாங்கலாம் என்றும் என்னுடன் வருமாறும் என்னைவிட சிறியவளான என் சித்தி மகளிடம் சொன்னேன். திரும்பும் வழி எனக்குத் தெரியும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

நாங்கள் டாஃபி வாங்கினோம். பிறகு ஃபரித்கோட்டின் சிறிய பாதைகளில் தொலைந்து போனோம். திரும்பிவரும் வழி தெரியவில்லை. இதில் சில தெருக்கள், சில அடி தூரம் சென்றவுடனேயே முடிந்துவிடும்.

ஆனால் நான் தைரியமாக என் தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டே சென்றேன். நீண்ட நேரமாக நாங்கள் நடந்தோம். தனது வீட்டின் முன் ஸ்கூட்டரை சர்வீஸ் செய்து கொண்டிருந்த ஒரு நபர் எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் திருமணம் நடக்கும் வீட்டிற்கு வந்துள்ளோம் என்று கூறினோம். வேறு சிலரின் உதவியுடன் அவர் கடைசியாக எங்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

தங்கையை சித்தி அடித்தார்

நாங்கள் அங்கு சென்றபோது, தெருவில் பெரியவர்கள் மிகவும் கவலையுடன் இருப்பதைக் கண்டோம். நான் இப்போது மீண்டும் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் எவ்வளவு ஆழ்ந்த நிம்மதி அடைந்தேன் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் என்னுடன் சென்ற என் தங்கையின் தாயான என் சித்தி நேராக எங்களிடம் வந்து, தனது செருப்பைக் கழற்றி, தனது நான்கு வயது மகளை பலமுறை அடித்தார்.

பெற்றோருக்கும் அவரது குழந்தைக்கும் இடையே நடந்த அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. பெரியவர்கள் எங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள், கட்டிப்பிடிப்பார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் வீட்டை விட்டுச்சென்றதற்காக என் தங்கை நிறைய அடிகள் வாங்கியதோடு கூடவே வசவுகளையும் கேட்டவேண்டியிருந்தது.

ஒரு பெற்றோர் மற்றும் பெரியவர் என்ற முறையில், என் சித்தி நடந்து கொண்ட விதம் மோசமானது என்றாலும் அது ஏன் என எனக்கு இப்போது புரிகிறது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று அவர் பயந்தார். தன் குழந்தையைக் கூட தன்னால் சரியாக கவனிக்க முடியவில்லையே என்ற அவமானம் அவரை வாட்டியது. தன் மகளுக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். எதிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் எண்ணமே ஏற்படக்கூடாது என்பதற்காக, தன் மகளின் மனதில் பயத்தை உருவாக்கி, தாயின் கோபத்தை அவள் என்றுமே நினைவில் கொள்ளும்படி செய்ய விரும்பினார். தன் கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற பெரியவர்களின் கோபத்திற்கு சித்தி மிகவும் பயந்தாள். ஏற்கனவே பயத்தில் அழுதுகொண்டிருந்த, தன் தவறை சரியாகப் புரிந்துகொள்ளக்கூட முடியாத அளவுக்கு சிறியவளாக இருந்த தன் பெண் மீது தன் மன அழுத்தத்தையெல்லாம் வெளிப்படுத்தினார்.

எந்த நெருக்கடியான தருணத்திலும் என் குழந்தையை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அந்தக் காட்சி எனக்கு ஒரு அளவுகோலாக அமைந்தது. எந்தத் தவறும் செய்யாத சிறுமியை அடித்த அதிர்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. குழந்தைக்கு அரவணைப்பு தேவைப்பட்டது, அடிகள் அல்ல.

குழந்தைகள் மீது பயம் மற்றும் பதற்றத்தை திணிக்காதீர்கள்

பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெரும்பாலும் உதவியற்றவர்களாகவே இருக்கிறோம். பெரும்பாலும் பயம் மற்றும் பீதி நிலை உள்ளது. ஆனால் நம் பயம் மற்றும் கோபத்தின் சுமையை நம் குழந்தையின் மீது சுமத்தக்கூடாது. அவர்கள் ஏற்கனவே நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர்.

நாம் மற்ற பெரியவர்களின் உதவியை நாட வேண்டும். குழந்தை நாம் இல்லாமல் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறதோ, நம்முடன் இருக்கும்போது அதைவிட அதிக பாதுகாப்பாக உணரும்படி நாம் செய்ய வேண்டும்.

வளரும்போது நம்மில் பெரும்பாலோர் நம் பெற்றோரின் கோபத்தை நம் மீது எடுத்துக்கொள்கிறோம். பல சமயங்களில் வெளியுலகில் ஏற்படும் துன்பங்களை விட பெற்றோருடன் சேர்ந்து துன்பப்படுவது அதிக சிரமமாக இருப்பதாகத்தோன்றும்.

என்னுடைய சில நண்பர்களுக்கு எதேனும் பிரச்னை இருந்தால், கல்வி நிறுவனங்களுடன் ஏதாவது சிக்கல் இருந்தால், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால், அல்லது வேறு ஏதேனும் மருத்துவ உதவி தேவையென்றால் அவர்கள் தங்கள் வீட்டில் உதவி தேடாமல், பெற்றோருக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பயப்படுகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் எல்லா ஆபத்துகளையும் தானே தாங்கிக் கொள்வது நல்லது என்று நினைக்கிறார்கள். தனது பெற்றோரை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக, இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

இது பெற்றோரின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று இல்லையென்றால் வேறு என்ன? நமக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக நம் வீடும் குடும்பமும் இருக்கவேண்டும். ஆனால் இது எப்போதும் நடப்பதில்லை. இது போன்ற சூழ்நிலைகளை நாம் தான் உருவாக்குகிறோம். அதை நாம் உணர்வதில்லை. இது மிகவும் மோசமான விஷயம்.

நம் குழந்தைகள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். ஏனென்றால் இது நமது எதிர்மறையை வெளிப்படுத்த பாதுகாப்பான இடமாகத் தெரிகிறது. என் சித்தி தான் பயப்படாமல் இருந்திருந்தால், சிறுமியை அடித்திருக்க மாட்டார். தன் சொந்த வாழ்க்கையில் தன்னைத் துன்புறுத்தும் பெரிய மனிதர்களை எதிர்த்து நிற்க அவருக்குத் துணிவில்லை. ஆனால் தனது குழந்தையின் மீது ஆத்திரத்தை, கோபத்தை காட்டமுடியும்.

அதனால்தான் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். தந்தையும் அவ்வாறே செய்கிறார். அந்த நேரத்தில் குழந்தைகளால் பதில் சொல்ல முடியாது. குழந்தைகள் பெரியவர்கள் முன் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள்.

மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், குடும்பத்தில் பெரியவர் ஒருவரின் வசவுகள், மற்றும் ஏளனம், குழந்தைக்குள் ஒரு விமர்சனக் குரலாக மாறி, அவரது வாழ்நாள் முழுவதும் அவரைத் துன்புறுத்துகிறது. உதாரணமாக, 'நான் கெட்டவன்', 'நான் எப்போதும் தவறு செய்கிறேன்', 'நான் இருப்பதே ஒரு பிரச்னை' என்ற எண்ணங்கள் ஏற்படும்.

கலாசார ரீதியாக குழந்தைகள் மீதான பெற்றோரின் அன்பைப் பற்றி நாம் நிறைய எழுதியுள்ளோம், பேசியுள்ளோம். ஆனால் பிள்ளைகள் பெற்றோர் மீது வைத்திருக்கும் அன்பு பற்றி அவ்வளவாக புரிதல் இல்லை. அதற்கு பெரிய அங்கீகாரமும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பது போல், குழந்தைகளும் தங்கள் பெற்றோரைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.

குழந்தைகள் அருகில் இருக்கும்போது இதைச் செய்யுங்கள்

குழந்தைகளின் அன்பின் மீது, சார்பு, பற்று, கோழைத்தனம் போன்ற சொற்களை இணைக்கிறோம். அவர்களை நம்புவதில்லை. அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம். குழந்தைகளின் அன்பின் வெளிப்பாட்டை வெட்கக்கேடு போல ஆக்கிவிடுகிறோம்.

பெரும்பாலான பெரியவர்கள் அன்பைப் பெறுவதில் தங்களுக்கு உள்ள இயலாமையை அடையாளம் கூடக்காண்பதில்லை. குடும்ப வட்டங்களில் நம்பிக்கை மற்றும் மரியாதை காட்டுவதில் நமக்கு மிகக் குறைவான அனுபவமே உள்ளது. நாம் வளர்ந்த பெரிய கூட்டுக்குடும்பங்களில், ஒருவரின் தவறான நடத்தையை மீண்டும் மீண்டும் விமர்சிக்கிறோம். அப்படிச்செய்வதை நாம் உணர்வது கூட இல்லை. பயம், கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் போன்ற உணர்வைப் பேணுவது பெற்றோரின் இயல்பான கட்டமைப்பாகிவிட்டது.

குழந்தைகள் தங்கள் வாயை மூடிக்கொண்டு நம்மிடம் ஒட்டாமல் இருக்கத்தொடங்கும்போது, நாம் அவர்களைப் பற்றி தன்னிச்சையான முடிவுகளை வரைய ஆரம்பிக்கிறோம். அவர்களை இந்த ஓட்டுக்குள் தள்ளியது எது என்பதை நாம் யோசிப்பதுகூட இல்லை. அவர்கள் தங்கள் கருத்தைக் கூற விரும்புகிறார்கள். ஆனால் இதற்காக அவர்களுடனான நம் உறவை மீண்டும் பாதுகாப்பான மண்டலமாக மாற்ற வேண்டும்.

இந்த வார்த்தைகளின் எதிரொலியை நீங்கள் உணர்ந்தால், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நீங்கள் அறியலாம். நச்சு வழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் அன்பு செழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டிய நேரம் இது.

உங்கள் குழந்தைகள் இப்போது உங்களைச் சுற்றி இருந்தால், அவர்களைக் கட்டித்தழுவவும். அவர்கள் தூரத்தில் இருந்தால் அவர்களை அழைக்கவும் அல்லது அவர்களுக்கு செய்தி அனுப்பவும். இரண்டு தரப்புமே பரஸ்பரம் இணையவேண்டும். இது அனைவரின் காயங்களையும் ஆற்றிவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: