இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்?

இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு, எம்.எம். அப்துல்லா (திமுக), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), எம்.தம்பிதுரை (அதிமுக), வைகோ (மதிமுக), கேசவ ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ் கட்சி) விஜய்சாய் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர், இலங்கை தற்போது மிகவும் தீவிர நெருக்கடியை எதிர்கொண்டு வருதால் அங்குள்ள அசாதாரண சூழலை இந்திய எம்பிக்களிடம் விளக்குவதற்காக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வெகு அருகே உள்ள நாடு இலங்கை என்பதால் அங்கு ஏற்படும் விளைவு குறித்து இயல்பாகவே இந்தியா கவலை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இலங்கையில் உள்ள நெருக்கடி, இந்தியாவிலும் ஏற்படுமா என்று அவரிடம் சில கட்சிகளின் தலைவர்கள் கேட்டபோது, அத்தகைய ஒப்பீடுகள் தவறான தகவல் அடிப்படையில் வருபவை என்று பதிலளித்தார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80க்கும் கீழே சரிந்த நாளில் இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எம்.பிக்கள் சிலர் அந்நாட்டின் நிலை தங்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து இந்திய அரசு சார்பில் இரு வகை செயல்முறை விளக்க காட்சி காண்பிக்கப்பட்டது. ஒன்று, அண்டை நாட்டுடனான இந்தியாவின் நல்லுறவு கொள்கை அடிப்படையிலும் மற்றொன்று இலங்கைக்கு இந்தியா செய்யும் அரசியல் ரீதியிலான உதவிகளை உள்ளடக்கியதாகவும் இருந்தன.

இலங்கைக்கு அசாதாரண உதவி

இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உதவி வழங்கியுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர், வேறு எந்தவொரு நாடும் இந்தியா செய்து வருவது போன்ற உதவியை இலங்கைக்கு வழங்கியதில்லை என்று தெரிவித்தார். இலங்கைக்கு கடன் தரும் சர்வதேச செலாவணி நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் அந்நாட்டுக்காக இந்தியா பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அதன் நெருக்கடி தீவிரமாகியிருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு அந்த நாட்டில் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை நெருக்கடி தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இந்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணியில் உள்ள மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு ஏற்ப இந்த கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கிறது மத்திய அரசு.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர். பாலு பேசும்போது தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் உதவி குறித்து விளக்கினார்.

18-05-2022 அன்று சென்னை துறைமுகத்தில் இருந்து முதல் பேட்ச் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. அக்கப்பல் 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர், 25 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் என 45 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது. நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க இலங்கை அரசு கால அவகாசம் கோரியதால், இரண்டாம் பேட்ச் கப்பல் 22-06-2022 அன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 14,700 மெட்ரிக் டன் அரிசியும், 250 மெட்ரிக் டன் பால் பவுடரும் 39 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்களும் என 65 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தற்போது, கடைசி பேட்ச் ஆக 16,300 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 45 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் ஜூலை 23ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். அதன் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் ஆகும். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழியாக இப்பொருட்கள் இலங்கை அரசிடம் விநியோகத்திற்காக ஒப்படைக்கப்படும் என்று டி.ஆர். பாலு கூறினார்.

இதேபோல, இலங்கை நெருக்கடியால் அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய வரும் இலங்கையர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாநில அரசு உதவி வருவதாகவும் அவர்களை மண்டபம் தற்காலி முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாலு கூறினார்.

1983 முதல் 2009 வரை இலங்கையில் நீடித்த போர்ச்சூழலில் இருந்து பாதுகாப்பு வேண்டி வந்த இலங்கைத் தமிழர்கள் சுமார் 1 இலட்சம் பேர் தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 39 ஆண்டுகளாக அவர்களுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளித்துத் தமிழ்நாடு விருந்தோம்பி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர் பிரச்னை

கடந்த 11 ஆண்டுகளில், 3,743 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,725 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 18 மீனவர்கள் இன்னமும் நாடு திரும்புவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்படுவதாலும், இயற்கைச் சூழல்களாலும் சீரமைக்க முடியாத அளவுக்குப் படகுகள் சேதமடைந்து நிரந்த வாழ்வாதார இழப்பு ஏற்படுகிறது.

இன்றைய தேதி வரை, 91 தமிழ்நாட்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையில் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இந்தப் படகுகளை மீட்பதற்குத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சித்ரவதை/தாக்குதல்/கைது ஆகியவற்றை அனுபவிப்பதைக் குறைக்க இரு தரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. மீன்வளத் துறை, மீனவர்கள் குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு கைதின்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

இவ்வகையில், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பல சிக்கல்களையும் சரிசெய்ய 25-03-2022 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டப்பட்டது.

அரசுத் துறைகள் மூலமாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் மீறி, இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பிடிக்கப்படுவது தொடரவே செய்கிறது. இது மீனவர்களின் பெருங்கவலையாக உள்ளது. ஆகையால், இந்திய பிரதமர் இலங்கை அரசிடம் பேசி நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும் படகுகள் கைப்பற்றப்படுவதற்கும் முடிவு காணவேண்டும் என்றும் டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டார்.

கச்சத்தீவை மீட்க கோரிக்கை

இந்திய அரசு 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்பதே இந்தப் பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீரவாக அமையும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் பாலு கூறினார்.

13ஆவது திருத்தம்

இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திடும் அதே வேளையில், அங்கு நிலவும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக தன்னாட்சியையும் அதிகாரப் பகிர்வையும் வழங்கும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கையை உண்மையான அக்கறையுடன் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டார்.

தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசும்போது, "இலங்கை இறந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். நமது நிலைமை மோசமாக இல்லை, கையிருப்பு சிறப்பாக உள்ளது என்று நிதிச் செயலாளர் கூறினார். சீனாவின் கடன் திட்டம் மூலமாக மட்டுமின்றி பல இடங்களில் இலங்கை கடன் பெற்றுள்ளது. எனவே, சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) தலையீடின்றி அந்நாட்டுக்கு உதவ வேறு வழியில்லை. அந்த வகையில் இந்தியா உரிய வகையில் உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

ஆனால், இலங்கை நெருக்கடி பிரச்னை நீங்கலாக திமுக முன்வைத்த பிற பிரச்னைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த கருத்தும் கூட்டத்தில் பகிரப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :