"மாதவிடாய் அசுத்தம் அல்ல" - 21 நாட்கள் பாத யாத்திரை செல்லும் பண்டர்பூர் பெண்களின் அனுபவம்

வழிபாடு
    • எழுதியவர், மான்ஸி தேஷ்பாண்டே
    • பதவி, பிபிசி மராத்தி, பண்டர்பூரில் இருந்து

மகாராஷ்டிராவில் வார்கரி பிரிவைச் சேர்ந்த பக்தைகள், விஷ்ணுவின் அவதாரமான விட்டலை வழிபடுவதற்காக பண்டர்பூரில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்கிறார்கள். இந்தப் பயணம் தேஹுவில் உள்ள துக்காராம் மகாராஜின் கோயிலில் இருந்து தொடங்குகிறது.

இந்த 21 நாள் நீண்ட யாத்திரையில் நடைபயணமாக செல்லும் பெண்கள் மாதவிடாய் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முயற்சித்தோம்.

பண்டர்பூர் வாரி பயணம்

பட மூலாதாரம், Getty Images

இந்த 'பயணத்தின்' போது மாதவிடாய் என்பது முக்கியமானதாக கருதப்படுவதில்லை. வார்கரி பெண்கள் மாதவிடாயை இயற்கையின் ஒரு பகுதி என்று நம்புகிறார்கள்.

மகாராஷ்டிராவில் வார்கரி குழுவின் வரலாறு 10 நூற்றாண்டுகள் அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் வார்கரி பெண்களின் பங்கேற்பு தவிர, பெண் புனிதர்களின் முக்கிய பங்களிப்பும் உள்ளது.

இந்த துறவிகளின் பாடல்கள் விட்டல்-ரகுமாயி பக்தியை மட்டுமன்றி தீண்டாமை, சுரண்டல், அடக்குமுறை பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் சாதிப் பாகுபாடு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

மாதவிடாய் அசுத்தம் அல்ல

'அவ்கா ரங் ஏக் ஜாலா' என்ற அபங்கை(பக்தி பாடல்) இயற்றிய சாந்த் சோயாரபாய், 'மாதவிடாய் அசுத்தமாக கருதப்பட்டால், உலகில் எந்த உடலும் பிறக்காது. எல்லாமே இந்த அசுத்தத்திலிருந்து பிறந்தவை."என்று ஒரு பாடலில் கூறியுள்ளார்.

வார்கரி புனிதர்களின் இந்த எண்ணம் நடைமுறையுடன் பொருந்துகிறதா என்று பார்க்க முயற்சித்தோம்.

கடந்த வாரம் ஒரு நாள் காலை, பிபிசியின் குழு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் சென்றடைந்தது. சந்த் துக்காராமின் பல்லக்கை சுமந்தபடி சில வார்கரிகள் கைதட்டி பாடியபடி சென்றுகொண்டிருந்தனர்.

சிலர் தலையில் பைகளை பேலன்ஸ் செய்து கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தனர். சில கலசங்கள் திறந்த வெளியில் சிதறிக் கிடந்தன.

அக்லூஜ் அருகே ஒரு டேங்கர் நின்று கொண்டிருந்தது. அங்கே சில வார்கரி பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். சில முதிய வார்கரிப் பெண்கள் உடம்பில் புடவையுடன் நீராடிக்கொண்டிருந்தனர். பின்னர் டாங்கரின் பின்புறம் உடைகளை மாற்றிக்கொண்டனர்.

என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. ஆண்கள் எவ்வளவு எளிதாக இதைச்செய்ய முடியுமோ பெண்களுக்கு இது அவ்வளவு சுலபமா? மேலும், மாதவிடாய் நடுவில் வந்துவிட்டால் பெண்கள் என்ன செய்வார்கள்? நீங்கள் விரைவாக குளிக்க வேண்டியிருந்தால் சானிட்டரி பேட்களை மாற்றுவது எப்படி?

பெண்களால் வீட்டில் இருப்பதுபோல சுத்தத்தை பராமரிக்க முடியுமா? வாரி யாத்திரையின்போது அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அதைப் பற்றிய அவளுடைய அணுகுமுறை என்னவாக இருக்கும்?

பயணத்தின் போது
படக்குறிப்பு, பயணத்தின் போது

வாரி யாத்திரையின் போது...

வாரியிலிருந்து பண்டர்பூர் வரை செய்திகளை திரட்டும்போது நான் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்தேன். மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் அதுபற்றிப்பேச வெட்கப்பட்டனர். சிலர் மாதவிடாய் நின்ற பிறகு வாரியில் கலந்து கொண்டனர்.

தேஹுவில் இருந்து துக்காராம் மகாராஜின் பல்லக்கில் கலந்து கொண்ட புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயமாலா பச்சன், தனது அனுபவத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.

"பெண்கள் 'பேட்'களை பயன்படுத்துகிறார்கள். அவற்றை துணி அல்லது காகிதத்தில் சுற்றி கொண்டுவருவார்கள். வாரி நடக்கும்போது அவர்களுக்கு உடல் வலி ஏற்படாது. பண்டர்பூர் செல்வதில் மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் உள்ளது. ஆடுவதும் பாடுவதும் நடக்கிறது." என்றார் அவர்.

பல வீடுகளில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் அறை அல்லது பூஜை அறைக்கு செல்வதற்கு தடை உள்ளது, அவர்கள் தனியிடத்தில் வைக்கப்படுகிறார்கள். வீட்டில் அவர்கள் நடமாட அனுமதிக்கப்படுவதில்ல்லை. வாரி பயணத்தில் என்ன நடக்கும் என்று அவரிடம் கேட்டோம்.

இதற்கு ஜெயமாலா பச்சன், "எல்லாம் பாண்டுரங்கனின் திருவடியில் உள்ளது.அந்த நடைமுறைகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. சில தெய்வங்களுக்கு அருகே செல்ல அனுமதி இல்லை. இவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். எனவே நான்கு நாட்கள் ஓய்வும் கிடைக்கிறது," என்றார்.

"இந்த உயிர் புனிதமானது. ஆனால் பாரம்பரிய மரபுப்படி நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும். ஆனால் வாரியில் அது அவ்வாறு கருதப்படுவதில்லை. நீங்கள் பாண்டுரங்கனின் பாதத்தில் சரண் அடைகிறீர்கள். அந்த நேரத்தில் இது முக்கியமானதாக கருதப்படுவதில்லை."

யவத்மால் மாவட்டத்தில் பல்லக்கில் பங்கேற்ற ஷோபதாயிடம் மாதவிடாய் குறித்து கேட்டபோது, "சில பெண்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தங்கள் கிராமத்தை விட்டு செல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிலை இருந்தால், மதம் சார்ந்த நிகழ்வுகள் நடந்தால், நேரடியாக அங்கு செல்ல வேண்டாம்,"என்று கூறுகிறார்.

ஆனால் அர்ச்சனா கதம் மாறுபட்ட ஒரு கருத்தை தெரிவித்தார்.

அர்ச்சனா கதம்
படக்குறிப்பு, அர்ச்சனா கதம்

'எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை'

" மாதவிடாய் விவகாரத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. மாதவிடாய் வந்தாலும் தூரத்தில் இருந்து கடவுளை பார்க்க சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது இயற்கையிலிருந்து வருகிறது. இதுவும் கடவுளால் கொடுக்கப்பட்டதுதான். பெண்களுக்கு இது அவசியம். அனைத்தும் அவரிடமிருந்து வந்தவை,"என்று அவர் கூறுகிறார்.

மற்றொரு முக்கியமான விஷயம், மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். இது நபருக்கு நபர் வேறுபடலாம். ஆனால் பொதுவாக பெண்களுக்கு உடலில் வலி, வயிற்று வலி, கால் வலி போன்ற உணர்வுகள் ஏற்படுவதால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் நடை பயணத்தைத் தொடர்கிறார்களா?

"எனக்கு அப்படி எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நடந்ததால் கால்களில் காயம் ஏற்பட்டது. அதற்கு மாத்திரைகள் மட்டுமே கொண்டு வந்தேன். ஆனால் அதையும் சாப்பிடுவதில்லை. சில சமயங்களில் அசிடிட்டி வரும். மாத்திரை சாப்பிடுவேன். நான் தொடர்ந்து நடக்கிறேன். நடந்ததால் காயத்திலிருந்து அதிக ரத்தம் வெளியேறியது. ஆனாலும் நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்," என்று அர்ச்சனா கதம் பதிலளித்தார்.

"எனக்கு மாதவிடாய் 4ம் தேதி வரவேண்டியிருந்தது. நடைபயணம் காரணமாக 28ம் தேதி வந்துவிட்டது. நான் பேட்களை வைத்திருந்தேன். அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. சாலையில் இருந்ததால் நானும் அதே நிலையை எதிர்கொண்டேன். வீட்டில் இருந்தால் துணியைப் பயன்படுத்தமுடியும், அதை துவைக்கமுடியும். இப்போது பெண்கள் பேட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள், அதை எளிதில் மாற்றலாம்."

"சரியான இடம் கிடைத்தால் பேட்களை மாற்றி விடுவோம். பிறகு குளிப்பதற்கு இடம் கிடைத்தவுடன் குளிப்போம். இங்கு வீடு போல் இல்லை.. ஆண்களிடம் எதுவும் சொல்ல முடியாது. அதனால் நாங்கள் பெண்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்வோம்." என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மாதவிடாயுடன் தொடர்புடைய சமூக மற்றும் மத கட்டுப்பாடுகள், வாரி யாத்திரையில் தளர்ந்து வருவதை இந்தப் பெண்கள் உணர்கின்றனர்.

பயணத்தின் போது

பட மூலாதாரம், Getty Images

இலவச சானிட்டரி பேடுகள்

அக்லூஜில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் மூலமாகவும் இலவச சானிட்டரி பேடுகள் விநியோகிக்கப்பட்டன. மாதவிடாய் சுகாதாரம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் சானிட்டரி பேட்கள் வழக்கத்தில் இல்லாத காலகட்டத்தில் இந்த யாத்திரையின்போது பெண்கள் என்ன செய்தார்கள்?

நாசிக் மாவட்டத்தின் நிஃபாட் தாலுகாவில் இருந்து பல்லக்கு கொண்டு வந்த கமால்பாய் ஜாக்தேவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். "அப்போதும் கூட பெண்கள் யாத்திரையில் வருவார்கள். மாதவிடாய் வரும்போது இதேபோன்ற சூழ்நிலைகளை சந்தித்தார்கள்,"என்று கூறினார்.

"அப்போதெல்லாம் துணி பயன்படுத்துவோம். எதுவாக இருந்தாலும் நடந்து செல்வோம். மதிய உணவு இடைவேளை இருக்கும் இடத்தில் துணிகளை துவைத்து காய வைப்போம். மதிய உணவு இடைவேளை மூன்று மணி நேரம் இருக்கும். துணிகள் நன்றாக உலர்வதை உறுதிசெய்வோம். வீட்டில் எவ்வளவு உலர்ந்த துணிகளை வைத்திருக்க முடியுமோ அவ்வளவு துணிகளை வீட்டில் வைத்திருப்போம்."

"இப்போதெல்லாம் பெண்கள் பேட் பயன்படுத்துகிறார்கள். இப்போதும் மாதவிடாய் உள்ள பெண்கள் பலர் யாத்திரையில் ஈடுபட்டுள்ளனர். மாதவிடாய் காலத்தில் மழை பெய்தால் துணி நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் சாக்கு துணியை கொண்டு மூடி உலரவைப்போம்."என்கிறார் கமலா பாய்.

சானிட்டரி நாப்கின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சானிட்டரி நாப்கின் (கோப்புப்படம்)

வாரி யாத்திரையின்போது மாதவிலக்கு ஏற்பட்டால், பல்லக்கிற்கு அருகே செல்லமாட்டேன் என்று நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்துதாய் ஷேகே என்ற 70 வயது மூதாட்டி கூறினார்.

"மாதவிடாய் வரும்போது பாதுகைகளுக்கு அருகில் போகக் கூடாது. நானும் அதைத்தான் செய்வேன். வீட்டைப் போல தனியே உட்கார முடியாது. ஆனால் நாங்கள் பாதுகைகளுக்குச் அருகில் செல்வதில்லை. எங்கள் வீட்டில் மாதவிடாய் நேரத்தில் எல்லா பெண்களும் தனியாகத்தான் உட்காருவார்கள்."என்று அவர் குறிப்பிட்டார்.

அதே குழுவைச்சேர்ந்த ஒரு வயதான பாட்டி மாதவிடாய் நின்ற பிறகு தான் யாத்திரைக்கு வரத் தொடங்கியதாகக்கூறினார்.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பெண்கள் மாதவிடாய் தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தெரிந்தது. மாதவிடாய் காரணமாக யாத்திரையை நிறுத்தலாமா வேண்டாமா என்று பொதுவாக அவர்கள் யோசிப்பதில்லை.

மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கான மாத்திரைகளையும் பெண்கள் அடிக்கடி சாப்பிடுவதையும் பார்க்கமுடிகிறது.

மொத்தத்தில் இந்த யாத்திரையை பொறுத்தவரை, மாதவிடாய் ஒரு பொருட்டே அல்ல, இறைவன் இயற்கை என்றால், இதுவும் இயற்கைதான் என்ற எண்ணத்தில் வழிபாட்டை தொடர்கின்றனர் பெண்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: