காவடி யாத்திரை செல்ல பாதுகாப்பு கேட்கும் இஸ்லாமிய சிவபக்தர்

    • எழுதியவர், ஷாபாஸ் அன்வர்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

"நான் நமாஸ் செய்கிறேன். அதேவேளை, நான் ஒரு சிவபக்தனும் கூட. ஹரித்வார் காவடி யாத்திரைக்கு ஐந்து முறை சென்றுள்ளேன். தற்போது ஆறாவது முறையாக காவடி யாத்திரை செல்ல ஆசை. சில விஷமிகளால் என் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு பிரச்னை வந்துவிடுமோ என்று நான் பயப்படுகிறேன். எனவே, ஷாம்லி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்து பாதுகாப்பு கோரியுள்ளேன்."

மேற்கு உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பைன்ஸ்வால் கிராமத்தில் வசிக்கும் வக்கீல் மல்லிக் தன் ஹரித்வார் பயணம் குறித்து கூறிய வார்த்தைகள் இவை.

இதுவரை ஐந்து முறை காவடி யாத்திரைக்கு சென்றுள்ள அவர், இந்த முறை ஜூலை 22 ஆம் தேதி அவர் மீண்டும் ஹரித்வார் செல்கிறார். ஆனால், இம்முறை தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கோரி ஷாம்லி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது "இந்தமுறை யாத்திரையின்போது தனக்கோ,கிராமத்தில் உள்ள தனது குடும்பத்திற்கோ எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கோரி அவர் கடிதம் கொடுத்துள்ளார்," என்று ஷாம்லி துணைகோட்ட ஆட்சியர் விஷூ ராஜா பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

"மல்லிக்கின் பாதுகாப்பு குறித்து எங்கள் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அவரின் இந்த காவடி யாத்திரை தொடர்பாக கிராமத்தில் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை என்றாலும், பயணத்தின் போது அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன,"என்றும் அவர் மேலும் கூறினார்.

நமாஸும் சிவ பக்தியும்

வக்கீல் மல்லிக் என்பது அவரது பெயர். அவர் ஒரு கூலித் தொழிலாளி. இதுவரை ஐந்து முறை ஹரித்வாரில் இருந்து கங்கைநீரைக்கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் செய்துள்ளார்.

"இது நான் செல்லவிருக்கும் ஆறாவது யாத்திரை. நான் எப்போதும் தனியாகச் சென்று தனியாக வருவேன். நான் வீட்டிலிருந்து ஹரித்வாருக்கு ஜூலை 22 ஆம் தேதி வாகனத்தில் புறப்படுவேன். 23 ஆம் தேதி ஹரித்வாரிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு மீரட்டில் பாக்பத் சாலையில் உள்ள புராமகாதேவை அடைந்து, சிவனுக்கு ஜலாபிஷேகம் செய்வேன். அதன் பிறகு அங்கிருந்து வாகனம் மூலம் வீடு திரும்புவேன்," என்று வக்கீல் மல்லிக் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் "நான் லாக்டவுனுக்கு முன் ஐந்து முறை யாத்திரை செய்துள்ளேன். ஆனால் இடையில் இரண்டு ஆண்டுகள் லாக்டவுன் இருந்ததால், இதை செய்யமுடியவில்லை,"என்றும் அவர் கூறினார்.

"நான் காவடி கொண்டு வருவதில் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. நான் ஐந்து ஆண்டுகளாக இதை செய்கிறேன். இன்று வரை யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது ஏதேனும் விஷமிகளால் என் குடும்பத்திற்கு பிரச்னை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தின் பாதுகாப்பை கோரியுள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

"நான் காவடி யாத்திரைக்கு செல்வதில் என் மனைவிக்கோ, என் கிராமத்தில் உள்ளவர்களுக்கோ எந்த ஆட்சேபமும் இல்லை. இது எனது பக்தி பற்றிய விஷயம். எனக்கு நேரம் கிடைக்கும்போது நான் நாமாஸும் படிக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை ஹரித்வாரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, சிவனுக்கு ஜலாபிஷேகமும் செய்கிறேன்." என்று அவர் தெரிவித்தார்.

நினைத்தது நடந்ததால் நம்பிக்கை

எங்கிருந்து சிவ பக்தி வந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த வக்கீல் மல்லிக், " நான் ஒரு கஷ்டத்தில் இருந்தேன். திடீரென்று ஹரித்வாருக்கு காவடி யாத்திரை செல்ல வேண்டும் என்று தோன்றியது. நான் புறப்பட்டுவிட்டேன். பிறகு ஜலாபிஷேகம் செய்துவிட்டு கிராமத்திற்கு திரும்பினேன். அதற்குள் என் பிரச்னைகள் ஏறக்குறைய முடிந்திருந்தன. இப்போது நான் ஒவ்வொரு வருடமும் காவடி யாத்திரை செல்கிறேன்" என்றார்.

வக்கீலின் நம்பிக்கை மீது மக்களின் கருத்து என்ன?

வக்கீல் மல்லிக்கிற்கு, நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஏழாம் வகுப்பு படிக்கும் மூத்த மகளின் வயது 16. மல்லிக்கிற்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர். இரண்டு சகோதரர்கள் வெளியில் வசிக்கிறார்கள். வக்கீல் மல்லிக்கும், மற்றொரு சகோதரரும் ஒரே கிராமத்திலேயே வசிக்கிறார்கள்.

வக்கீல் மல்லிக்கின் தொலைபேசி மூலமாக அவரது மனைவியுடன் பேசியபோது,"ஆமாம், இவர் காவடி யாத்திரைக்கு செல்வார். அவருக்கு பிடித்திருந்தால் போகட்டும். யார் என்ன சொன்னாலும் கவலையில்லை," என்று கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக வக்கீல் மல்லிக் காவடி யாத்திரை சென்று வருகிறார். அவரைப்பற்றிய விவாதங்கள் இங்கு நடக்கும். அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பற்றி பேசினாலும், யாரும் வெளிப்படையாக இதை எதிர்க்கவில்லை என்று உள்ளூர் செய்தியாளர் அன்வர் அன்சாரி கூறுகிறார்.

இதற்கிடையில், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் கீழ் பேசிய கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபர், "அவருக்கு தவறான சகவாசம் ஏற்பட்டுள்ளது. அவர் அத்தகைய நபர்களுடன்தான் பழகுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், எங்களுக்கு அது பற்றிக்கவலையில்லை" என்றார்.

வக்கீல் மல்லிக்கின் மூத்த சகோதரர் ஜமீல் மல்லிக்கின் வீடு, அவரது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ளது. வக்கீலின் காவடி யாத்திரை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்," நான் அவருடன் பேசுவதில்லை. எங்களுக்கு அவருடன் எந்த தொடர்பும் இல்லை. என் அம்மா என்னுடன்தான் இருக்கிறார். வக்கீல் சிறுவனாக இருந்தபோதே தந்தை காலமாகிவிட்டார். ஒருமுறை பாகப்பிரிவினை பற்றி வக்கீலிடம் பேசினோம். காவடி யாத்திரை செல்வதை நாங்கள் தடுக்கிறோம் என்று அப்போது அவர் குற்றம் சாட்டினார்." என்று கூறினார்.

500 முஸ்லிம் வாக்காளர்கள்

ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பைன்ஸ்வால் கிராமத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், ஜாட்கள், தலித்துகள் உட்பட பல இனத்தவர்கள் வாழ்கின்றனர். தனது கிராமத்தில் சுமார் 7,600 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அதில் 500 பேர் முஸ்லிம்கள் என்றும் கிராமத் தலைவர் பிரஹலாத் கூறுகிறார்.

"இன்றுதான் வக்கீல் என்னிடம் வந்தார். உங்கள் உதவி தேவை என்று அவர் கூறினார். காவடி யாத்திரையிலிருந்து திரும்பி வந்து பண்டாரா(உணவு விநியோகம்) நடத்த விரும்புகிறேன் என்று அவர் சொன்னார். என்னால் முடிந்த உதவிகளை செய்வதாக நான் அவருக்கு உறுதியளித்துள்ளேன்,"என்று கிராமத் தலைவர் கூறினார்.

"வக்கீல் எங்களுடைய முஸ்லிம் சகோதரர். அவர் பல வருடங்களாக காவடி எடுத்து வருகிறார். அவருடைய பொருளாதார நிலை சரியில்லை என்றாலும், பண்டாரா ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை எங்களால் புறக்கணிக்கமுடியாது. சாத்தியமான எல்லா உதவிகளையும் நாங்கள் அவருக்கு அளிப்போம்,"என்று கிராமத்தலைவர் பிரஹலாத் மேலும் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: