You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தருமபுரி: திராவிட மாடல் ஆட்சியில் இந்து மத சடங்கா? புரோகிதரை விரட்டிய திமுக எம்.பி
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியின்போது இந்து முறைப்படி பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்திருந்தால், பொதுப்பணித்துறை அதிகாரியிடம் அரசு விழாவில் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்த பூஜைக்கு ஏற்பாடு செய்தது ஏன் என தருமபுரி எம்.பி.செந்தில்குமார் காட்டமாக பேசிய காணொளி வைரல் ஆகியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன் என எம்.பி செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரியை சரமாரியாக கேள்வி கேட்கிறார். இந்த காட்சிகள் காணொளியாக பதிவு செய்யப்பட்டது. தமது சமூக வலைதள பக்கத்தில் இந்த காணொளியை செந்தில் குமார் பகிர்ந்துள்ளார். அவரது செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த காணொளியில், இந்து மத முறைப்படி பூஜை செய்வதை சுட்டிக்காட்டும் செந்தில்குமார், கிறிஸ்துவர்கள், இஸ்லாமிய மதத்தினர், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என எல்லா தரப்பினரையும் ஏன் அழைக்கவில்லை என கோபமாக பேசுகிறார். அத்துடன், அரசு நிகழ்ச்சிகளுக்கு என வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா, தெரியாதா என அவர் கேள்வி எழுப்பியதும், அந்த அதிகாரி, அமைச்சரின் ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறுகிறார்.
எந்த அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டது என்று வினவும் எம்.பி, முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், இது போல பூஜைக்கு ஏற்பாடு செய்கிறார்களா என கேட்கிறார். பிறகு கூட்டத்தை விலக்கிக் கொண்டு செல்லும் அவர், பூஜை பொருட்களை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகற்றுங்கள் என்று கூறுகிறார்.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது இப்படி காட்டமாக பேசியது ஏன் என செந்தில் குமார் எம்.பியை தொடர்பு கொண்டு கேட்டோம்.
''அரசு நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட ஒரு மதத்தை முன்னிறுத்தும் பூஜைகளை செய்யக்கூடாது என பலமுறை வலியுறுத்தி விட்டேன். இதுபோன்ற பூஜை ஏற்பாடு செய்த விழாக்களில் இருந்து வெளியேறி இருக்கிறேன். இந்த முறை காணொளியாக ட்விட்டரில் வந்துள்ளது என்பதால் இது கவனத்தை பெறுகிறது. ஒவ்வொருமுறையும், ஏன் பிற மதத்தினரை அழைக்கவில்லை, ஏன் குறிப்பிட்ட ஒரு மதத்தைத் தழுவி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கேட்டிருக்கிறேன்,''என பிபிசி தமிழிடம் செந்தில்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர், ''எல்லா மதத்தினரையும் அழைத்து வழிபாடு செய்யுங்கள், அல்லது இதுபோன்ற வழிபாடே தேவை இல்லை. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பூஜை என்பது அரசு நிகழ்வில் தேவையற்றது. அவ்வாறு செய்யவேண்டும் என விரும்பினால், அனைவரையும் இணைத்து நடத்துங்கள். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி, இங்கு ஒரு மதத்திற்கான ஆட்சி நடைபெறவில்லை,''என்கிறார்.
திமுக கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து கொண்டேதான் ஒவ்வொரு முறையும் தேர்தலில் வென்றுள்ளது என்று கூறும் அவர், ''பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் ஆட்சிக்காலத்தில், அரசு அலுவலகங்களில் கூட, மதரீதியான புகைப்படங்களை வைப்பதற்கு யோசிப்பார்கள். தற்போது, இதுபோல ஒரு மதம் சார்ந்த பூஜை நடப்பதை எப்படி ஏற்கமுடியும்? எங்கள் கட்சியில் இருப்பவர்கள் பலர் மதநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கலாம். எங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் பலரும் மத நம்பிக்கை கொண்டவர்கள்தான். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அரசு நிகழ்வில் ஒரு மதத்தை முன்னிறுத்துவது தவறு என நான் சுட்டிக்காட்டுகிறேன்,''என்கிறார் எம்.பி.செந்தில்குமார்.
திமுக எம்.எல்.ஏகள் மற்றும் அமைச்சர்கள் மத ரீதியான விழாக்களில் முன்னிற்பது பற்றி கேட்டபோது, ''ஒவ்வொருவரின் நம்பிக்கை அவர்களின் வீட்டு பூஜை அறையில் இருப்பது பற்றி கவலை இல்லை. பொது நிகழ்வில் ஒரு மதத்தை முன்நிறுத்துவது தவறு. எங்கள் கட்சியில் உள்ள எம்எம்ஏல்க்கள் மற்றும் அமைச்சர்கள் இதுபற்றி யோசிக்க வேண்டும். ஒரு சிலர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்திருக்கலாம் அல்லது திமுகவில் தொடர்ந்து இருந்தவர்கள் என்றாலும், நம் கட்சியின் கொள்கை என்ன, அந்த கொள்கை ரீதியாக நடந்துகொள்கிறோமா என யோசிக்க வேண்டும். பலரும் இது பற்றி வெளிப்படையாக பேச தயக்கம் காட்டுகிறார்கள். எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை அதனால் வெளிப்படையாக பேசுகிறேன்,''என்கிறார் அவர்.
பூஜைக்கான சம்பிரதாய பொருட்களையும் அகற்றிய பின்னர், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ஆலாபுரம் ஏரியில் 1.38 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை எம்.பி. செல்தில்குமார் துவக்கி வைத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்