You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை கோவில் சொத்துகள் பற்றி பேசியது என்ன? - 10 தகவல்கள்
திருவண்ணாமலை கோவில் தமிழ்நாட்டின் சொத்து என்றும் அதன் சொத்தை கட்டிக்காத்து திமுகதான் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு விழா ஒன்றில் பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.340.21கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதே நிகழ்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அந்த கூட்டத்தில் முதல்வர் பேசிய 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. திமுகவுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட கால உறவு உள்ளது.
2. அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் சொத்து. அந்த கோவிலின் சொத்துக்களை கட்டிக்காத்தது திமுகதான்.
3. திருவண்ணாமலையில் ஒரே ஆண்டில் 13 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
4. அண்ணாமலையார் கோவிலை தொல்லியல்துறை கைப்பற்ற முயன்றபோது அதனை தடுத்து, மீட்டு, கட்டிக்காத்தது திமுகதான். காங்கிரஸ் அரசுடன் பேசி, பக்தர்களின் கோரிக்கையை எடுத்துச்சொல்லி, தொல்லியல் துறையிடம் இருந்து காப்பாற்றியது திமுகதான்.
5. மதத்தின் பெயரால் அரசியல் நடத்துவப்பவர்களுக்கு திமுக எவ்வாறு கோவில் சொத்துக்களை கட்டிக்காத்தது என்ற வரலாறு தெரியாது. அவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல, ஆன்மிக வியாதிகள், ஆன்மிக போலிகள்.
6. பொய்யர்கள், புரட்டுகளைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடாது.
7. ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை சாதி, மதம் என பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்.
8. திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல ஊர்கள், மாநிலங்களில் இருந்து வருகிறார்கள். கிரிவலம் செல்லும்போது அவர்களுக்கு தேவையான மின்விளக்கு வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை எப்போதும் செயல்படும்வண்ணம் பழுப்பார்ப்பது மற்றும் மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்த செலவினங்கள் தொடர் செலவினங்களாகக் கருதப்படும்.
9. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களின் நலன் கருதி முறையான சாலைகள் அமைக்கவும், பேருந்து வசதிகள் ஏற்படுத்தவும் ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறையிடம் தேவையான அனுமதிகளை பெற்று இந்த சாலைகள் அமைக்கப்படும்.
10. வெறும் 30 நாட்களில், 1,121 பண்ணை குட்டைகளை அமைத்து சாதனை படைத்த மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. நீர் மேலாண்மையை ஒரு பேரியக்கமாக திருவண்ணாமலை மாவட்டம் நடத்திக்காட்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்