You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி
ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வா ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்குகிறார்.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மார்கரெட் ஆல்வாவின் பெயர் இறுதி செய்யப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதன் வேட்பாளராக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மூவை அறிவிப்பதற்கு முன்பாகவே திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவை தங்களுடைய வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்தன.
ஆனால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தங்களுடைய வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை ஆளும் கூட்டணி அறிவித்த மறுநாள், மார்கரெட் ஆல்வாவின் பெயரை எதிர்கட்சிகள் அறிவித்திருக்கின்றன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
மார்கரெட் ஆல்வா பின்னணி என்ன?
மார்கரெட் ஆல்வா, 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். கோவாவின் 17வது ஆளுநராகவும், குஜராத்தின் 23ஆவது ஆளுநராகவும், ராஜஸ்தானின் 20ஆவது ஆளுநராகவும், உத்தராகண்டின் 4ஆவது ஆளுநராகவும் இவர் பணியாற்றியிரு்ககிறார். அதற்கு முன்பாக, மத்திய அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா இருந்திருக்கிறார்.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக அறியப்பட்டார். அந்த கட்சியின் காரிய கமிட்டி இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
இவரது குடும்பம் அரசியல் பின்புலத்தைக் கொண்டது. இவரது அவரது மாமியார் வயலட் ஆல்வா, 1960களில் மாநிலங்களவை தலைவராக இருந்தார். இவரது மாமனார் ஜோச்சிம் ஆல்வாவும் காங்கிரஸ் கட்சி எம்பி ஆக பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் கணவன், மனைவி ஒரே நேரத்தில் முதல் முறையாக எம்.பி ஆக இருந்தது இந்த தம்பதிதான்.
1974இல் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான அவர், அதன் பிறகு 1980, 1996, 1992 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்திரா காந்தி அமைச்சரவையில் 1984-85வரை இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சராகவும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா பணியாற்றினார்.
1990இல் கர்நாடகா மாநிலத்தின் உத்தரா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார் மார்கரெட். அதன் பிறகு 2004இல் மீண்டும் அவர் போட்டியிட்டபோது தோல்வியுற்றார். இந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்தார். 2008இல் கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரை பண பலம் அடிப்படையில் தேர்வு செய்வதாக மார்கரெட் ஆல்வா குற்றம்சாட்டினார். அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்து வந்த பிறகு கட்சியில் வகித்து வந்த முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், 2009இல் அவர் உத்தராகண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டு வந்த அவர் 2012இல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2014இல் அவர் குஜராத் மாநில ஆளுநராக ஒரு மாதமும் கோவா மாநில ஆளுநராக ஒரு மாதத்துக்கும் குறைவான வாரங்களுக்கும் பதவியில் இருந்தார்.
நாடாளுமன்றவாதியாக இந்திய குடியரசு தலைவர் கியானி ஜெயில் சிங்கின் மொரீஷியஸ் பயணம், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் சோவியத் யூனியன், நரசிம்ம ராவ் மற்றும் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஆகியோரது பதவிக்காலங்களில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார் மார்கரெட் ஆல்வா.
இவரது கணவர் நிரஞ்சன் ஆல்வா, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக அறியப்பட்டவர். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் நிரஞ்சன் ஆல்வா உடல் நலக்குறைவால் காலமானார். சமீபத்திய ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், பெங்களூருவில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்