You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜெகதீப் தன்கரை என்டிஏ வேட்பாளராக அறிவித்த பாஜக - யார் இவர்?
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான என்டிஏ வேட்பாளர் ஆக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் பெயரை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை ஜெகதீப் தன்கர் சந்தித்துப் பேசினார். ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் ஆளும் முதல்வர் மமதா பானர்ஜிக்கும் பல்வேறு நிர்வாகம் மற்றும் அரசியல் விவகாரங்களில் தலைவலியை கொடுத்து வந்தவராக ஜெகதீப் தன்கரை அம்மாநில ஆளும் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
பல்கலைக்கழகங்கள் முதல் மாநிலத்தில் அரசியல் வன்முறை வரையிலான பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அடிக்கடி இவர் நேரிலும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மோதல் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், இவரது பெயரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக ஜே.பி. நட்டா அறிவித்தபோது, "தன்கர் ஒரு "விவசாயியின் மகன்" என்றும் அவர் தன்னை "மக்கள் ஆளுநராக" நிலைநிறுத்திக் கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
ஜெகதீப் தன்கரை கட்சி மேலிடம் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தவுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு தமது ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"ஜெகதீப் தன்கருக்கு நமது அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றிய சிறந்த ஞானம் உள்ளது. அவர் நாடாளுமன்ற விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். மாநிலங்களவையில் அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவையின் நடவடிக்கைகளை அவர் வழிநடத்துவார் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எப்போது?
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய வேட்புமனுவை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க ஆணையம் அனுமதித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 19ஆம் தேதி ஆகும்.
களத்தில் உள்ளவர்கள் யார், யார்?
2017ஆம் ஆண்டில், இந்திய குடியரசு தலைவர் போட்டிக்கு அப்போதைய பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை பாஜக மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவித்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் முதல் குடிமகனுக்கான தேர்தலில் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதியாக ராம்நாத் கோவிந்த்தை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்புவோம் என்று கூறி தேர்தல் பரப்புரை செய்தது தேசிய ஜனநாயக கூட்டணி.
அதே போல குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் பிறகு மத்திய அமைச்சராகவும் இருந்த மூத்த நாடாளுமன்றவாதியான எம். வெங்கய்ய நாயுடுவை பாஜக மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவித்தது.
ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு ஆகிய இருவரும் நாட்டின் மிக உயரிய அரசியலமைப்பு பதவிகளை வகிப்பதற்காக நடந்த தேர்தல்களில் எளிதாகவே வெற்றி பெற்றனர்.
எதிர்வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரெளபதி முர்மூவை பாஜக மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
இதற்கிடையே, மத்திய அமைச்சரவையில் ஒரே சிறுபான்மை சமூக அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தபோது, அவருக்கு வேறு மாநிலத்தில் இருந்து எம்.பி ஆகும் வாய்ப்பு தரப்படவில்லை. அதனால், அவரை பாஜக மேலிடம் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக முன்னிறுத்தி முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவர முயலலாம் என அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஜெகதீப் தன்கரை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.
குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவர். அதேபோல, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் தற்போதைய பலமான 780இல், பாஜகவுக்கு மட்டும் 394 எம்பிக்கள் உள்ளனர். இது பெரும்பான்மையான 390ஐ விட அதிகமாகும்.
தற்போது குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
யார் இந்த ஜெகதீப் தன்கர்?
மேற்கு வங்க மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானா கிராமத்தில் கோகல் சந்த், கேசரி தேவி தம்பதிக்கு 1951ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மகனாகப் பிறந்தார் ஜெகதீப் தன்கர்.
குடும்பம்: இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. மூத்த சகோதரர் குல்தீப் தன்கர், இளைய சகோதரர் ரந்தீப் தன்கர், சகோதரி இந்திரா. ஜெகதீப் தன்கர் மனைவியின் பெயர் சுதேஷ் தன்கர். இந்த தம்பதியின் மகள் காம்னா, ராஜஸ்தானில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்தவர். இவர், மறைந்த விஜய் சங்கர் வாஜ்பேயியின் மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கார்த்திகேய வாஜ்பேயியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கவியேஷ் என்ற மகன் இருக்கிறார்.
கல்வி: முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, கிதானா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார் ஜெகதீப். ஆறாம் வகுப்புக்காக 4-5 கிமீ தொலைவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு நடந்தே சென்று படித்தார். 1962ஆம் ஆண்டில், சைனிக் பள்ளியில் உயர்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.எஸ்சி ஹானர்ஸ் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு அதே பல்கலைக்கழகத்தில் 1978-79ஆம் ஆண்டில் சட்டப்படிப்பை முடித்தார்.
தொழில்முறை வாழ்க்கை: பிறகு ராஜஸ்தான் வழக்கறிஞர் சங்கத்தில் 1979ஆம் ஆண்டில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு தொழில்முறை வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1987ஆம் ஆண்டில் ராஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரானார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 1990ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார். பிறகு உச்ச நீதிமன்றத்தில் எஃகு துறை, நிலக்கரி, சுரங்கம், சர்வதேச வணிக வழக்குகளுக்காகவும், சர்வதேச நீதிமன்றங்களிலும் ஆஜராகி வழக்காடினார்.
1988ஆம் ஆண்டில் இவர் ராஜஸ்தான் பார் கவுன்சில் உறுப்பினரானார். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல் தொடர்புகள் காரணமாக, 1989ஆம் ஆண்டில் ஜுன்ஜுனு மக்களவை தொகுதியில் இருந்து ஜெகதீப் தன்கர் உறுப்பினராக தேர்வானார். அப்போது அவர் ஜனதா தளம் கட்சியில் இருந்தார். 1990ஆம் ஆண்டில் மத்தியில் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருந்தார்.
பிறகு 1993-1998ஆம் ஆண்டுவரை ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷண்கர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார்.
2003ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்