You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கள்ளக்குறிச்சி வன்முறை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் கூடாது - அரசு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடந்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக மாறியது. இந்த விவகாரத்தில் மாணவி படித்த பள்ளியை வன்முறையாளர்கள் சூறையாடினர். அங்கிருந்த பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனால், அத்தகைய அறிவிப்பை செயல்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. வேலைநிறுத்த்தில் ஈடுபடும் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரக இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வன்முறை நடந்த பள்ளி மற்றும் அதன் வளாகத்தை தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். நடந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழ் நேரில் பதிவு செய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், அந்த அறிக்கை தவறானது என்று கூறி அவரது உறவினர்கள் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனாலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன சேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் அருகே 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முற்பட்ட போது காவல் துறையினர் தடுப்பை மீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறுமுனையில் இருந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை கொண்டு தாக்க தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதில் போலீசார் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தை கற்களை கொண்டு போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்," என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பிற மாணவர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
பள்ளியின் உள்ளே போராட்டக்காரர்கள் புகுந்து பள்ளியின் கண்ணாடிகள் மற்றும் பள்ளி வாகன கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்ட காவலர்கள் பாதுகாப்பாக அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போலீஸார் தடியடி மற்றும் மற்றும் போராட்டக்காரர்கள் தாக்குதலால் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் இதுவரை காவல் துறை தரப்பில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தின் போது காவல் துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து பள்ளி பேருந்துகளையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கலவரம் தீவிரமடையும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை கூடுதல் பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
டிஜிபி எச்சரிக்கை
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, "போராடுபவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்றில்லை என்றாலும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் உளவுத்துறை செயல் இழந்துள்ளது என்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கால் கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையும் வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் மர்மமான மரணம் என இறந்த மாணவியின் தாயார் கூறிய பிறகும் கூட, முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும் அவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
மேலும், இறந்த மாணவியின் தாயாரை எந்த அரசு அதிகாரியும் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்ற நிலையில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால், மாணவியின் உற்றார், உறவினர் கொத்திதெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
''சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னரும், நியாயம் கிடைக்கவில்லை என்பதால், தாயாருக்கு நீதி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை புரிந்துகொள்ளலாமல், நிலைமை கட்டுக்கு அடங்காமல் போன நிலையில் வன்முறை ஏற்பட்டது. அரசின் இயலாமைதான் இந்த வன்முறைக்கு காரணம்,'' என்றார் அவர்.
மேலும், ''கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் ஒரு மாணவி இறந்துள்ளார். கடலூரில் பள்ளி மாணவி ஒருவர் நான்கு பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். இதுபோல மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது,''என்றும் பழனிசாமி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்