You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி விபரீத முடிவு- நடந்தது என்ன?
- எழுதியவர், ஆர்.அருண்குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நீட் தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
அரியலூர் ரயில்வே நிலையம் அருகே நடராஜன், உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் கடந்த ஆண்டு பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். இதையடுத்து இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார்.
இன்று அதிகாலை மாணவி தூக்கில் தொங்குவதை அவரது தாய் உமா பார்த்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட அரியலூர் நகர போலீசார் மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர்.
அதில், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தை, அங்கிருந்து வந்து ஊரிலேயே தங்கி இருக்க வேண்டும் எனவும் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து பேசிய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, "நிஷாந்தி 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்துள்ளார். பிறகு நீட் தேர்வு கோச்சிங் செண்டருக்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நாளை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், நேற்று இரவு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், மாணவி எழுதி ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது," என்றார்.
மாணவி நிஷாந்தி கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும், நீட் தேர்வு பயத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
தற்கொலை எண்ணமும் பார்வையும்
மன நல மருத்துவர் ரம்யா சம்பத், தற்கொலை எண்ணம் பற்றிய தமது பார்வையை சில ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருந்தார். அதில் சிலவற்றை இங்கே வழங்குகிறோம்.
நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை.
பொதுவாக, அந்த நபர் தனது தற்கொலை உணர்வுகளை யாரேனும் ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்கிறார். அது நிராகரிக்கப்படும்போதே, நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'எனக்கு வாழப் பிடிக்கவில்லை", "நான் பாரமாகி விட்டேன்", "நான் இறப்பதே மேல்" என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை 'சும்மா சொல்கிறார்கள்", 'தானாகவே சரியாகிவிடும்" என்று எண்ணிவிடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் இருக்கலாம்.
நீங்களும் தற்கொலையை தடுக்கலாம்
ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.
சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.
இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.
என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார் மன நல மருத்துவர் ரம்யா சம்பத்.
தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104'
அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.
`இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்