You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி பற்றிய சர்ச்சை கேள்வி - பூதாகரமாகும் விவகாரம்
- எழுதியவர், ஏ.எம் சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முக்கிய அம்சங்கள்
- தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற ஒரு கேள்வி தொடர்பான தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
- சர்ச்சை கேள்வி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
- இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உறுதியளித்துள்ளார்.
- இந்த தேர்வுக்கான வினா தாள் வேறொரு பல்கலைக்கழக பேராசியர்களால் தயாரிக்கப்பட்டதாக துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வுக்கான வினா தாளில் ஜாதி தொடர்பாக இடம்பெற்றிருந்த ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உறுதியளித்துள்ளார்.
கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்றவற்றுக்காக தமது வாழ்வின் கடைசி காலம் வரை போராடியவர் தந்தை பெரியார் என அழைக்கப்படும் இ.வெ. ராமசாமி. இவரது பெயரைத்தாங்கி சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதில் எம்.ஏ வரலாறு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வு வினா தாளில், "இதில் எது தமிழ்நாட்டுக்குரிய தாழ்ந்த ஜாதி" என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான விருப்ப பதில்களாக மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் ஆகிய நான்கு ஜாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த கேள்வி பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "பெரியாரின் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகமே அவரது கொள்கைகளை இழிவுபடுத்துகிறது. சாதி ஏற்றத்தாழ்வை வளர்த்து, செமஸ்டர் தேர்வில் சாதி தொடர்பான கேள்விகளை கேட்பது திமுக அரசின் திராவிட மாதிரியா? இதுதான் திமுகவின் சமூக நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு ஜாதிதான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேள்வித்தாள்களை நாங்கள் தயாரிக்கவில்லை, வேறு கல்லூரியில் அவை தயார் செய்யப்படுகிறது என்று துணை வேந்தர் கூறுகிறார். நடைமுறையில் இப்படி இருந்தாலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேர்வுக்காக ஒரு பரிசீலனை குழு இருக்கும். அப்படிப் பார்த்தால் வரலாற்றுத் துறைக்கும் இது போல இருக்கும். அந்தக் குழு ஆய்வு செய்யாமல் அச்சுக்கு கொடுக்க மாட்டார்கள். அந்தக் குழுவில் உள்ள கெட்ட எண்ணம் கொண்டவர் தான் இந்த கேள்வியை அனுமதித்திருக்க வேண்டும்," என்று கொளத்தூர் மணி கூறினார்.
"இப்படி ஒரு கேள்வி வரலாற்றில் கேட்க வேண்டிய அவசியமே இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், ஜாதி உணர்வை ஊட்ட வேண்டும், அதன் வழியாக தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கருத்தை உள்வாங்கியவர்கள் தான் இப்படி செய்திருக்க வேண்டும். விளம்பரத்திலேயே இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாத ஒரு பல்கலைக்கழகமாகத்தான் பெரியார் பல்கலைக்கழகம் தற்போது வரை இருக்கிறது. விளம்பரத்தில் ஆதரவற்றோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் என அவர்கள் எப்போதும் அறிவித்ததே கிடையாது," என்று குறிப்பிட்டார்.
"இங்கு ஒரே ஒரு இஸ்லாமியர் தான் பேராசிரியராக இருந்தார். அவரையும் 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து வைத்திருந்தார்கள்.அதற்கும் ஏதோ காரணம் சொல்கிறார்கள். ஆனால், முஸ்லிமை அவர்கள் ஏற்றுக் கொள்ளாதது தான் காரணம்," என்று கொளத்தூர் மணி குற்றம்சாட்டினார்.
துணை வேந்தர் விளக்கம்
இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சம்பந்தப்பட்ட வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்படவில்லை. பிற பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. தேர்வு வினா தாள் வெளியே கசிந்து விடுவதை தவிர்க்கவே அதை படித்துப் பார்க்கும் வழக்கம் பல்கலைக்கழகத்தில் இல்லை," என்றார்.
"இது குறித்து எந்த புகாரும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர் கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்