You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளையராஜாவை 'தலித்' என்று ஜாதி குறித்து அடையாளப்படுத்துவது சரியா?: இணையத்தில் எழும் கண்டனங்கள்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன உறுப்பினராக பரிந்துரைக்கும் அறிவிப்பில் அவரைத் தலித் எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இதற்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர்.
இது தொடர்பான அறிவிப்பு ஒன்றில், "பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள பல்வேறு குழுக்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெறுவதை மோதி அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. ஒரு பெண், ஒரு தலித், சிறுபான்மைச் சமூகமான ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட நான்கு பேர் நியமன எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திக் குறிப்பு அரசின் வழக்கமான செய்தித் தொடர்பு ஊடகங்கள் வழியாக வெளியாகவில்லை. டெல்லி செய்தியாளர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியானது.
இதில் இளையராஜாவை தலித் எனக் குறிப்பிட்டிருப்பதைக் கண்டித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
அரவிந்த் ராஜா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், "தன்னை தலித் என்று தலித் முரசு தொடரில் அடையாளப்படுத்தி எழுதியதற்காக முனைவர் கே.ஏ.குணசேரன் மீது வழக்கு தொடுத்தவர் இளையராஜா. ஆனால், இன்று அதே அடையாளத்தை பாஜக தன் மீது சுமத்தும்போது மகிழ்ச்சியடைகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் செந்தில்குமார் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், "இசை உலகத்துக்கே ஜாம்பவான இருந்தாலும் அவர்கள் அடையாளப்படுத்த விரும்புவது 'தலித்' இளையராஜா" என்று கூறியிருக்கிறார்.
"இளையராஜாவின் இசை ஞானத்திற்கு இந்த நியமனப் பதவி ஏற்புடையது. மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தன்னை தலித் என்று ஒப்புக் கொண்டுள்ளாரா ? அவருக்கு தலித் பிரிதிநிதித்துவத்தின் அடிப்படையில் நியமனப் பதவியை தருவதை ராஜா ஏற்பாரா ?" என்கிறது மணிகண்டன் ராஜேந்திரன் என்பவரது ட்விட்டர் பதிவு.
"அவர்கள் தலித் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், இளையராஜா அந்த வார்த்தையை ஏற்கிறாரா? இளையராஜாவை தலித் என்ற அடையாளத்தோடு யாரும் பார்க்கவில்லை. இதற்குப் பின்னால் ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது. அதன் மூலம் என்ன லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பா.ஜ.க. பார்க்கிறது. அதை வைத்து ஓட்டு வாங்க முடியுமா என்று பார்க்கிறார்கள். இது குறுகிய நோக்கம் கொண்ட அரசியல். நியமன எம்பி பதவி என்பது ஒன்றும் இளையராஜாவுக்கு பெரிய அங்கீகாரம் கிடையாது" என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார்.
இளையராஜா தலித் என்பதை ஏன் ஓர் ஆவணமாக வெளியிடுகிறார்கள் என்பதுதான் கேள்வி என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "இளையராஜா மக்களின் அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றது ஒரு இசைக் கலைஞராக. ஆனால், இப்போது அவரது தலித் அடையாளத்திற்காகத்தான் நியமன எம்.பி. பதவி வழங்குகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அதை ஏன் ஆவணப்படுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி" என்கிறார் அவர்.
"தலித் என்ற அடையாளத்தில் எந்த அவமானமும் இல்லை. ஆனால், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்தில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், மாநிலங்களவையில் ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். காங்கிரஸ் செய்யாததை நாங்கள் செய்கிறோம் என்கிறார்களே, இதைச் செய்ய வேண்டியதுதானே" என்கிறார் ரவிக்குமார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்