You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'உத்தவ் தாக்கரே எங்களை அழைத்தார், ஆனால்...' - ஏக்நாத் ஷிண்டே பேட்டி
- எழுதியவர், பிரஜக்தா போல்
- பதவி, பிபிசி மராத்தி சேவைக்காக
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்புக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30ஆம் தேதியன்று முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பிபிசி மராத்தி சேவை நேர்காணல் செய்தது. அதில் இருந்து சில முக்கிய கேள்விகளை இங்கே தொகுத்துள்ளோம்.
நீங்கள் முதலமைச்சராக பதவியேற்கப் போகிறீர்கள் என்றவுடன் உங்களின் எண்ண ஓட்டம் எவ்வாறு இருந்தது?
சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் ஆளும் கட்சி ஒன்றிலிருந்து பிரிந்தது இதுவே முதல்முறை. பொதுவாக எதிர்கட்சியிலிருந்து தான் ஆளும் கட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பார்கள். நாங்கள் பாலாசாஹேப் தாக்கரேவின் இந்துத்துவாவை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அநீதிக்கு எதிராக போராட அவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
அதைதான் நாங்கள் செய்தோம். முதலமைச்சர் பதவிக்காக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. முதலில் உத்தவ் தாக்கரே எனக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக சொன்னார் ஆனால் அது நடக்கவில்லை என்றதும் நான் மனமுடைந்து போகவில்லை.
பாஜகவிடம் எங்களை காட்டிலும் அதிக எம் எல் ஏக்கள் உள்ளனர் இருப்பினும் முதலமைச்சர் பதவியை எனக்கு வழங்கியுள்ளனர். எனவே பாஜக தலைவர்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
உத்தவ் தாக்கரே அரசிலிருந்து பிரிந்து வர வேண்டும் என்று எப்போது உங்களுக்கு தோன்றியது?
மஹா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரச்னை தொடங்கியது.
எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதற்காக மட்டும் நான் இந்த முடிவை எடுக்கவில்லை. இதே சூழலை 25 - 30 எம்எல்ஏக்கள் தினமும் எதிர்கொண்டனர். அதனால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.
தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்கள், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு ஆதரவு வழங்கினர். இது சிவசேனை தொண்டர்களை பாதித்தது. அவர்களால் சிவசேனையை சேர்ந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
எனவே இந்த அரசை உருவாக்கியதன் மூலம் சிவசேனைக்கு என்ன கிடைத்தது? இதுகுறித்து நாங்கள் கட்சி தலைவரிடம் பலமுறை பேசினோம்.
உள்ளாட்சி தேர்தலில் சிவசேனை கட்சி நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது. எனவே இந்த எம்எல்ஏக்கள் என்னிடம் ஒரு முடிவை எடுக்கச் சொன்னார்கள். இல்லையென்றால் அவர்களாக ஏதேனும் முடிவை எடுத்திருப்பார்கள்.
இது திடீரென ஒரு நாள் நடந்த நிகழ்வு இல்லை. இது குறித்து நாங்கள் பல முறை பேசியுள்ளோம். ஆனால் அதில் நாங்கள் வெற்றியடையவில்லை. எனவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நீங்கள் இப்போதும் சிவசேனையில் இருப்பதாக கூறுகிறீர்கள். உத்தவ் தாக்கரே தான் கட்சித் தலைவர் என்கிறார். எனவே சிவசேனைக்கு யார் தலைவர்?
இப்போது சொல்வதற்கு எதுவும் இல்லை. எந்த பக்கம் அதிகம் பேர் உள்ளனரோ அந்த பக்கத்தை ஜனநாயகம் மதிக்கிறது. அது எங்களிடம் உள்ளது.
வில் அம்பு சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளீர்களா?
நேற்றுதான் நாங்கள் எங்கள் பெரும்பான்மையை நிரூபித்தோம். எனவே எங்கள் எம்எல்ஏக்களிடம் ஆலோசித்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்போம்.
உத்தவ் தாக்கரேவுக்கு உங்களின் அதிருப்தி குறித்து தெரிந்திருந்ததா?
அவருக்கு இது குறித்து ஏதோ ஒரு உணர்வு இருந்ததாக கூறுகிறார், நீங்களும் உங்களை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினீர்கள்.
நான் அவரிடம் பேசினேன். நான் விலகி செல்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் திரும்பி வருமாறு என்னிடம் சொன்னார். நான் திரும்பி வருவேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று சொன்னேன். அவர் அப்போதே சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் விஷயம் இப்போது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
தேர்தலுக்காக இணைய உத்தவ் தாக்கரே விருப்பம் தெரிவித்தால் நீங்கள் செல்வீர்களா?
எங்கள் மீது அவர்கள் (உத்தவ் தாக்கரே தரப்பு) குற்றம்சுமத்துவதையும், விமர்சிப்பதையும் பார்க்கிறோம். நான் சட்டமன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன். எங்களின் உருவ பொம்மைகள் கொளுத்தப்பட்டன. எனவே யாருக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
இந்த அரசின் ரிமோட் யாரிடம் இருக்கும்? உங்கள்வசமா, ஃபட்னாவிஸ் வசமா?
தேவேந்திர ஃப்டனாவிஸும் நானும் நல்ல நண்பர்கள். இதில் இருவருக்குமே தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. மாநிலத்தின் வளர்ச்சியே எங்களின் நோக்கம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்