இந்திய வேளாண் சட்டம்: விவசாயிகள் புதிய போராட்டங்களுக்கு தயாராக திட்டம் - என்ன நடக்கிறது?

    • எழுதியவர், அரவிந்த் சாப்ரா
    • பதவி, பிபிசி பஞ்சாபி, சண்டீகர்

"அச்சம், கோபம், நிச்சயமற்ற எதிர்காலம்."

இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாபில் உள்ள தமது சொந்த கிராமத்தில் பச்சித்தர் கவுரும் மற்ற பெண்களும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதன் முதலில் எதிர்ப்பைத் தொடங்கியபோது இப்படித்தான் உணர்ந்ததாகக் கூறினார்கள்.

2020இல் இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான கூட்டணி அரசு, வேளாண் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டு வந்த புதிய சட்டங்களை இயற்றியது. அதற்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லைகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான விவசாயிகளில் இந்த பஞ்சாபி பெண்களும் அடங்குவர்.

போராட்டக்காரர்கள் நகரின் எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டிருந்தனர். மழை, வெப்பம், கடும் பனி, போலீஸ் கட்டுப்பாடுகள், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளையும் கடந்து போராட்டக் களத்திலேயே அவர்கள் உண்டு, உறங்கி தங்கியிருந்தனர். இத்துடன் கொரோனா பரவலும் விவசாயிகள் போராட்டத்துக்குத் தடையாக இருந்தன.

"எனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இந்தப் போராட்டத்தின்போது நான் இறந்து விடலாம். ஆனால் இந்த வேளாண் சட்டங்களைச் செயல்படுத்த விடமாட்டேன் எனக் கூறினேன்," என்கிறார் பச்சித்தர் கவுர்.

ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை இவர்.

"வசதியான வீட்டை விட்டு வெளியேறி டிராக்டர் தள்ளுவண்டியில் வீதிகளில் சுமார் ஓராண்டு காலம் வாழ்ந்தது எளிதான விஷயமல்ல. ஆனால் எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அந்த வேளாண் சட்டங்கள் எங்களுடைய மரண அழைப்பாணை போல இருந்தன," என்கிறார் அவர்.

பல மாதங்களாக, புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என்றும் அவற்றைத் திரும்பப் பெறுவது பற்றிய கேள்வியே இல்லை என்றும் மத்திய அரசு கூறி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் தரப்பிலும் பின்னர் அதிகாரிகள் மற்றும் விவசாயத் தலைவர்கள் இடையேயும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

ஆனால், அவை சமூக முடிவுகள் எட்டப்படாமல் நிறைவுற்றன. ஆர்ப்பாட்டங்களின்போது காவல்துறை பல முறை பலப்பிரோயகம் செய்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. போராட்டக் களத்தில் பல விவசாயிகள் இறந்தனர், பலர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் நவம்பர் 19ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஒரு வரலாற்றுபூர்வ நடவடிக்கையை அறிவித்தார். தமது அரசின் லட்சியமிகு அறிவிப்பாக அதுநாள் வரை பிரதமரால் கூறப்பட்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர் அறிவித்தார். அதே ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வகை செய்யும் ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகள் உடனடியாகக் கலைந்து செல்லவில்லை. முக்கிய பயிர்களுக்குக் குறைந்தபட்ச உத்தரவாத விலை உள்ளிட்ட தங்களது இதர கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு, அரசாங்கம் அந்தக் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டது. அதன் மூலம் அவர்களின் ஒரு வருட போராட்டம் முடிவுக்கு வந்தது.

பச்சித்தர் கவுர், போராட்டம் நிறைவுற்ற நாளை தமது வாழ்வின் "மிகவும் சிறப்பான" தருணமாக நினைவு கூர்ந்தார்.

இப்போது விவசாயிகள் வீடு திரும்பி ஏழு மாதங்கள் ஆகி விட்டன. ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக ஜூலை 3ஆம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்துக்கு விவசாய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லிக்கு அருகே காஸியாபாத் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முந்தைய போராட்டங்களை முன்னின்று நடத்திய ராகேஷ் திகெய்த் உள்ளிட்ட முக்கிய விவசாயத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த வேளையில், மற்றொரு போராட்டத்திற்கான வாய்ப்பை விவசாயிகள் நிராகரிக்கவில்லை.

"தலைவர்கள் நேரத்தையும் இடத்தையும் தீர்மானிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்று பச்சித்தர் கவுர் கூறுகிறார். "அடுத்து டெல்லி வருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்."

​​வேளாண் பொருட்கள் விற்பனை, விலை நிர்ணயம், பண்ணை பொருட்களை சேமிப்புக்கிடங்கில் பராமரித்தல் போன்றவற்றில் தங்களின் உரிமையைப் பாதுகாக்க உதவிய விதிகளில் தளர்வு ஏற்படுத்தி புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நவம்பரில் விவசாயிகள் போராட்டத்தில் முதல் முறையாக ஈடுபட்டனர்.

போராடிய விவசாயிகளின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, தங்கள் பொருட்களை நேரடியாக சந்தை விலையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்க புதிய சட்டங்களை அனுமதித்தது தான். அந்த தனியார் தொழில் முதலாளிகள் வேளாண் தொழில் நிறுவனங்களாகவும் பெரு வணிக தொடர் நிறுவனங்களாகவும் ஆன்லைன் காய்கறி விற்பனை நிறுவனங்களாகவும் இருக்க அனுமதிக்கப்பட்டது. அதுநாள் வரை தங்களுடைய விளை பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலை எனப்படும் எம்எஸ்பி விலையில் அரசு கட்டுப்படுத்திய மொத்த விலை சந்தைகள் அல்லது மண்டிகளிலேயே விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் என்று அரசாங்கம் வாதிட்டது. ஆனால் அதை விவசாயிகள் ஏற்கவில்லை. அரசின் சட்டங்கள் விலையை நிர்ணயிக்கும் பெரிய நிறுவனங்களின் தயவில் இருக்க தங்களைக் கட்டாயப்படுத்தும் என்று அவர்கள் முறையிட்டனர்.

அரசாங்கம் இறுதியாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது, ​​மத்திய, மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதாக உறுதியளித்தது.

இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்களவையில் பேசும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை ஆராய உத்தேசிக்கப்பட்ட குழுவை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. உத்தேசிக்கப்பட்ட குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளாக யார் இருக்க வேண்டும் என்பதை விவசாயிகள் தெரிவிக்க வேண்டும் என்று விவசாயத் தலைவர்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டது. ஆனால், இந்த விஷயத்தில் அரசின் நோக்கம் தெளிவாக இல்லை என்று கூறி பிரதிநிதிகளின் பெயரை வழங்க விவசாயிகள் மறுத்து விட்டனர்.

"அரசு சில பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது, ஆனால் அது அனைத்து மாநிலங்களிலும் கிடைக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். முதலில் ஆய்வுக் குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் எம்எஸ்பி தொடர்பான கொள்கையை எவ்வாறு வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் அரசாங்கம்தான் எங்களிடம் கூற வேண்டும்," என்கிறார் பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான்.

எம்எஸ்பி மட்டுமின்றி மேலும் சில கோரிக்கைகளையும் விவசாய தலைவர்கள் அரசிடம் முன்வைத்துள்ளனர். போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், நெல் வைக்கோலை எரித்ததற்காக சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளைக் கைவிடுதல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுதல் போன்றவை அதில் அடங்கும்.

2020ஆம் ஆண்டு நவம்பரில், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, விவசாய சங்கங்களின் போராட்டங்களை ஒரே குடையின் கீழ் வழிநடத்திய அமைப்பான பாரதிய கிசான் மோர்ச்சாவுக்கு இந்திய விவசாயத்துறை செயலர் சம்யுக்த கிசான் மோர்ச்சாவுக்கு (SKM) கடிதம் எழுதினார். அதில், உங்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்குவதாக செயலர் உறுதியளித்தார் என்கிறார் ஜோகிந்தர் சிங் உக்ரஹான்.

இது குறித்து விவரித்த அவர், "சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் விவசாயிகளுக்கு பண இழப்பீடு வழங்கியுள்ளன. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான கிரிமினல் வழக்குகள் சர்ச்சைக்குரிய பிரச்னையாகத் தொடர்கின்றன," என்கிறார்.

போராட்டம் நடந்த தளங்களில் பல ஹரியாணா மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால், பெரும்பாலான வழக்குகள் அந்த மாநிலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜிடம் பிபிசி கேட்டபோது, "விவசாயிகளுக்கு எதிரான பெரும்பாலான வழக்குகளை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. போராட்டத்தின் போது மொத்தம் 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 82 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன," என்று பதிலளித்தார்.

ஆனாலும் விவசாயிகள் சமாதானம் ஆகவில்லை.

"இது ஒரு மாநிலம் மட்டுமே. பல்வேறு மாநிலங்களில் இதுபோல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் எத்தனை திரும்பப் பெறப்பட்டன போன்ற விவரங்களுக்காக [மத்திய அரசாங்கத்திடமிருந்து] நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்," என்று உக்ரஹான் கூறுகிறார்.

ஆனால், மற்றொரு எதிர்ப்புக்குத் தயாராகி விட்டதாக விவசாயிகள் கூறினாலும், முன்பு காணப்பட்ட அதே போராட்ட உணர்வு இப்போது வலுவிழந்து விட்டதோ என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

பஞ்சாபில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சில தலைவர்கள் போட்டியிட்டனர். ஆனால், ஓரிடத்தில் கூட அவர்கள் வெற்றி பெறவில்லை.

தங்களுடைய பிரதிநிதிகளாக இருந்தவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டதால் சங்கங்களுக்குள்ளாகவே அதிருப்தி நிலவுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப் தேர்தல் முடிவுகள் வெளி வந்த நிலையில், தங்களுடன் பதிவு செய்திருந்த 32 விவசாய சங்கங்களில் 22 சங்கங்களை சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியேற்றி விட்டது.

"இந்த நடவடிக்கை விவசாயிகளின் ஒற்றுமைக்கு நிச்சயமாக கடுமையான அடியைக் கொடுத்துள்ளது" என்கிறார் உக்ரஹான்.

ஆனால் இன்னும் தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்று கூறும் அவர், "ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும், நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடுவோம் என்று நான் நம்புகிறேன்," என்கிறார்.

"இது பாதி அளவு மட்டுமே வெற்றியடைந்துள்ள போர். சண்டை முடிய நெடுநாள் ஆகும்," என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: