You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரியலூர்: பயிர்க் காப்பீட்டுக்காக நுகர்வோர் நீதிமன்றம் சென்ற விவசாயிகள் - பின்னணி என்ன?
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
பெருவெள்ளம், வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட பேரிடர்களின் போது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைக் காக்கும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் இழப்பீட்டைப் பெறுவதற்காக நுகர்வோர் நீதிமன்றம் வரை செல்லும் நிலை இருக்கிறது.
பயிர் மற்றும் சாகுபடி காலம்வாரியாக காப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவு காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயிர் இழப்பிற்கு ஏற்ப, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுமூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2012ம் ஆண்டு பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்தனர். அப்போது ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனைத்து விவசாயிகளுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனாலும், நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் உத்தரவிப்படி. இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில், யுனைட்டடு இந்தியா காப்பீடு நிறுவன தலைவர், வேளாண் காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வீ.ராமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பயிர் காப்பீடு செய்த செய்த விவசாயிகள் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வரை சென்று உத்தவு பெற்றுள்ளது, கவனத்திற்குள்ளாகி உள்ளது.
நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்றது ஏன்?
இது குறித்து அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கடந்த 2012ம் ஆண்டு இரண்டரை ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிரிட்டிருந்தோம். இதற்கு 15 ஆயிரம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ரூ. 375 பிரியம் செலுத்தியிருந்தேன்."
"எனது தாயார் சிவானந்தம் பெயரில் உள்ள நிலத்தில் ஒரு ஏக்கர் பருத்திக்கு 10 ஆயிரம் காப்பீட்டுத் தொகைக்கு ரூ. 600 பிரிமியம் செலுத்தினோம். அப்போது, பயிர்கள் பாதிக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டது. இதற்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாந்து போனோம். இதையடுத்து, சுப்பிரமணியன் மூலம் எங்களைப் போல் பாதிக்கப்பட்ட 60 பேரை ஒருங்கிணைத்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தோம். இப்போது இழப்பீடு தரச் சொல்லி தீர்ப்பு வந்துள்ளது. காப்பீடு செய்து, பத்தாண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் தற்போது வரை எதுவும் கிடைக்கவில்லை.''என்றார்.
விவசாயிகள் தரப்பு வழக்குரைஞர் விளக்கம்
விவசாயிகள் தரப்பு வழக்குரைஞர் சினிவாச முர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகள் காப்பீடு செய்தனர். வறட்சியினால் பயிர் பாதிக்கப்பட்டு, இழப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கான காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் பல முறை இழப்பீட்டு கேட்டு முறையிட்டுள்ளனர். ஆனாலும் இழப்பீடு கிடைக்காததால், கடந்த 2014ம் ஆண்டு விவசாயிகள் தரப்பில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீட்டனர். "
"இந்த வழக்கில் 60 விவசாயிகளுக்கும் ஒட்டு மொத்தமாக ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை, அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்க கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கவில்லை. இதையடுத்து மீண்டும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, நடுவர் அமர்வு, விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளனர். இதன்படி, யுனைட்டட் இந்தியா நிறுவன சேர்மன், அதன் அரியலூர் கிளை மேலாளர், வாரண்ட் கட்டளை பிறப்பித்துள்ளனர்.'' என்றார்.
பயிர்காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. பல முறை அலைந்தும் ஏமாற்றமே மிஞ்சுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இழப்பீடு கேட்டு அலையும் விவசாயிகள்
பயிர்க் காப்பீடு திட்டத்தில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இழப்பீடு ஏற்பட்டு, கணக்கெடுப்பு நடத்தியும் இழப்பீடு கிடைப்பதில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
குழுமூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான அமுதகண்ணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கடந்த 4 ஆண்டுகளாக பருத்து, சோளம் பயிரிட்டு, அதற்கான பயிர்காப்பீடு செய்து வருகிறேன். ஒரு ஆண்டு மட்டுமே நல்ல மகசூல் கிடைத்தது. மற்ற மூன்று ஆண்டுகள் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்பட்டது. பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டது. ஆனால், இழப்பீடு மட்டும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு, கணகெடுத்துச் சென்றனர். இப்போது வரைக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை.'' என்கிறார்.
தனிநபர் பயிர்காப்பீடு கோரிக்கை
இந்தியாவில் காலநிலைக்கு ஏற்ற பயிர்காப்பீடு, மகசூல் அடிப்படையிலான பயிர் காப்பீடு என 2 வகைகள் உள்ளன. இதில், விளைச்சல் அடிப்படையிலான பயிர் காப்பீட்டு முறை தமிழ்நாட்டில் உள்ளது. தனிநபர் பாதிப்பை கணக்கில் கொள்ளாமல், பகுதிவாரியான பாதிப்புகளை கணக்கில் கொள்வதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
விவசாயிகள் உரிமை செயற்பாட்டாளர் மன்னார்குடி சேதுராமன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பயிர்க் காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. சேத மதிப்பை முன்பு பிர்கா (உள்வட்ட) அளவில் கணக்கிட்டனர். தற்போது, இது வருவாய் கிராம அளவில் கணக்கிடப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பு இருக்காது. எனவே தனி நபர் பயிர்க் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.'' என்கிறார்.
பாதிப்பை கணக்கிடுவது எப்படி ?
வருவாய் கிராம அளவில் தற்போது பயிர் காப்பீடு கணக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, வருவாய் கிராமத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 5 இடங்களில் மகசூல் கணக்கீடு செய்யப்பட்டு, சராசரி மகசூல் மதிப்பிடப்படும்.
ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை, உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈட்டு விகிதத்தோடு (60%, 80%, 90%) பெருக்கும் போது கிடைக்கும் மகசூலின் அளவாகும்.
உத்திரவாத மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களும் ஐந்து வருட சராசரி மகசூலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதிகரித்து வரும் பயிர் காப்பீடு
பயிர் இழப்பிற்கு காப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் அலைவதாக கூறும் நிலையில், உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருவதால், காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2021-22ல் பிப்ரவரி 5ம் தேதி வரை 26.06 லட்சம் விவசாயிகள், மொத்தம் 38.48 லட்சம் ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம், 2016-17ம் ஆண்டில் 18.73 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்தனர். அதில் 12.93 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 3, 630 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 2017-18ல் மொத்தம் 15.18 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்தனர்.
அதில் 10.99 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2, 073 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2018-19ல் 24 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். அதில் 18.80 லட்சம் பேருக்கு மொத்தம் ரூ. 2,649 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 -20ல் 21.64 லட்சம் பேர் பதிவு செய்ததில், 11.68 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 981 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-21ல் பதிவு செய்த 25.77 லட்சம் விவசாயிகளில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வரை, 7.92 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1, 766 கோடி இழப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 981 கோடி வழங்கப்பட்டுள்ளது என்கிறது தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையின் புள்ளி விபரம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்