திரௌபதி முர்மூ: பாஜகவின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் - யார் இவர்?

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மூ அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மூ பழங்குடியினத் தலைவர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்.

"முதன்முறையாக, பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவை அறிவிக்கிறோம்" என்று நட்டா கூறினார்.

முர்மூ தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் ஆவார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பாஜகவின் அறிவிப்பு வந்துள்ளது.

திரௌபதி முர்மூவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திரௌபதி முர்மூ யார்?

திரௌபதி முர்மூ ஒடிஷா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடிபோசி கிராமத்தில் 20 ஜூன் 1958 அன்று பிறந்தார்.

அவர் சந்தால் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

ஆசிரியையாகப் பணியைத் தொடங்கிய அவர் பின்னர் அரசியலில் இறங்கினார்.

1997-இல் ராய்நகர்பூர் நகர் பஞ்சாயத்தில் இருந்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முர்மு 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராக இருந்தார். 2015 வரை பாஜகவின் எஸ்.டி. மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இரண்டு முறை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: