குடியரசு தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் - யார் இவர்?

முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்திய குடியரசு தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பொது வேட்பாளராக போட்டியிட காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் மறுத்து விட்டனர்,

இந்நிலையில், இன்றைய தினம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக'' அறிவித்தார்.

கடந்த ஆண்டு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, துணைத் தலைவராக இருந்தார். அக்கட்சியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா இன்று காலை விலகினார். இதையடுத்து அவர் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?

1937ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி பிகார் மாநிலம் பட்னாவில் பிறந்த இவருக்கு வயது 84.

1998 முதல் 2004 வரையிலான அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் முதலில் நிதி அமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சின்ஹா.

அதற்கு முன்னதாக 1990-91ஆம் ஆண்டுகளில் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய யஸ்வந்த் சின்கா 2018ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.

அதன்பின்பு 2021ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்த பின்பு அவரை தமது கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக நியமித்தார் மமதா பானர்ஜி.

விரிவுரையாளர், ஐ.ஏ.எஸ். அதிகாரி

1980களில் ஜனதா கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்த யஷ்வந்த் சின்ஹா அதற்கு முன்னதாக 1958-60 காலகட்டத்தில் பட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் விரிவுரையாளராகவும், பின்னர் சுமார் கால் நூற்றாண்டு காலம் ஐஏஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

1960ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த யஷ்வந்த் சின்கா 1984ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகி அரசியலில் நுழைந்தார்.

தமது அரசியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து 1988இல் மாநிலங்களவை உறுப்பினரானார் யஷ்வந்த் சின்ஹா. 1989இல் நிறுவப்பட்ட ஜனதா தளத்திலும் இவர் இருந்தார். பின்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் 1998, 1999, 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.

இவற்றில் 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை தவிர மற்ற மூன்று தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். தேர்தலில் தோல்வியடைந்தபின் 2004இல் பாஜக சார்பில் மாநிலங்களைவுக்கு தேர்வானார் யஷ்வந்த் சின்ஹா.

1995-96 காலகட்டத்தில் பிகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.

யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா 2014-2019 ஆண்டுகளில் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராகவும், உள்நாட்டு விமானபோக்குவரத்துத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: