You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலுக்கு ஆதரவான போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகப் புகார்
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் நடைபெறும் விசாரணையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் எம்.பி ஜோதிமணியை ஆடையைக் கிழித்து போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது ? விரிவாக பார்க்கலாம்.
நேஷ்னல் ஹெரால்டு பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இயக்குரகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜுன் 13ம் தேதி ஆஜரானார். தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், தொண்டர்களுடன் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் சென்றார். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
முதல் நாளில் இருந்து மூன்றாவது நாளான இன்றும் காங்கிரஸ் எம்.பிக்கள், தொண்டர்கள் டெல்லியின் பல்வேறு இடங்களில் பேரணியாக செல்ல முயன்றனர். ராகுல் காந்தியிடம் நடைபெறும் விசாரணையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
ப.சிதம்பரத்திற்கு காயம்
ராகுல் காந்திக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது, டெல்லி போலீஸ் தள்ளியதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் இந்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு இடது விலா எலும்பு முறிந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியது.
மூன்று திடகாத்திரமான போலீஸ்காரர்கள் மோதியபோது மயிரிழை அளவிலான எலும்பு முறிவு என சந்தேகிக்கப்படும் பாதிப்போடு தப்பியது அதிருஷ்டம் என்று கூறிய சிதம்பரம், உண்மையில் மயிரிழை அளவிலான முறிவு ஏற்பட்டிருந்தால் அது தானாக சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதாக ட்வீட் செய்திருந்தார். தன் வழக்கமான பணிக்குத் திரும்பவிருப்பதாகவும் அவர் அந்த ட்வீட்டில் கூறியிருந்தார்.
இரண்டு கேள்விகளுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பதில் அளிக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் சவால் விடுத்துள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட எந்த குற்றதுக்காக இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது?
எந்த போலீஸ் முகமை குறிப்பிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது? மேலும், பட்டியலிடப்பட்ட குற்றம் ஏதும் குறிப்பிடப்படாமல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்பது தெரியுமா? என்றும் சிதம்பரம் கேட்டிருந்தார்.
திங்கள் கிழமை காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் செல்லும் காட்சிகளை காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டன. போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டது.
விசாரணை நடைபெறும் அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பிக்கள், தலைவர்கள், தொண்டர்களை போலீசார் இன்றும் கைது செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையகத்தில் போராட்டம் நடத்திய தமிழ்நாட்டின் கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் தடுப்புகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக ஜோதிமணியை போலீசார் குண்டு கட்டாக தூக்கி, வேனில் ஏற்றினார். அப்போது தனது உடைகளைக் கிழித்து, போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக ஜோதிமணி குற்றம்சாட்டினார். இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "தவறான ஒரு வழக்கில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் எங்கள் தலைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்து, எம்.பிக்கள், தொண்டர்களிடம் டெல்லி போலீசார் அத்துமீறி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
ஒரு கிரிமினல் கைதியைப் போல் எங்களை நடத்துகின்றனர். என்னோடு கைது செய்யப்பட்ட 7 பெண்கள் ஒரு வாகனத்தில் இருந்தோம் குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல், எங்கு அழைத்து செல்லப்படுகிறோம் என்பதையும் தெரிவிக்காமல் அலைக்கழித்தனர். என் காலணியை கழற்றி, உடையைக் கிழித்தனர். தற்போது ஹரியானா மாநில எல்லையில் எங்களை வைத்துள்ளனர்.
டெல்லி காவல் துறை இன்று மட்டுமல்ல நேற்றும் இப்படித்தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். மக்கள் பிரதிநியாக உள்ள எம்.பிக்களுக்கே இந்த நிலை என்றால், பொது மக்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை.
ஒரு எம்.பியாக, பெண்ணாக மட்டுமல்ல எந்த மனிதருக்கும் இது போன்ற கொடுமை நடக்க கூடாது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம். 'என்றார்.
இது குறித்து மக்களவை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எம்.பிக்கள் கண்டனம்
ஜோதிமணி மீதான போலீசாரின் அத்துமீறலை வன்மையாக கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் ஒன்றிய அரசின் அணுகுமுறைகளை எதிர்த்து போராடிய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், ஜோதிமணி ஆகியோர் மீது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி காவல்துறை கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. வன்மையான கண்டனங்கள்.'என்று தெரிவித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த தென் சென்னை எம்.பி தமிழச்ச்சி தங்க பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில், "போராட்டம் நடத்திய பெண்கள் மீதான வன்முறை மனித உரிமை மீறல். இதை வன்மையாக கண்டிப்பதாக." தெரிவித்துள்ளார்.
இதனிடையே எம்.பிக்கள் போராட்டம் நடத்த டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை. தங்களை கட்சி அலுவலகத்திற்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை என்று கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பிக்கள் திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லகுமார், மாணிக்கம் தாகூர், விஜய வசந்த் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். இந்தியாவின் பழைமையான ஒரு கட்சியின் அலுவலகத்தில் இது போல் நுழைந்து, ஜனநாயகத்தை பாஜக கொன்று விட்டது.' என்று தெரிவித்துள்ளார்.
எம்.பிக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி போலீசார், 'மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர்கள் பேரணி, போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஜந்தர் மந்தர் பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தினர். இன்றைய தினம், கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக செல்ல முயன்றனர். சிலர் டயர்களை எரித்து, தடுப்புகளை சேதப்படுத்தினர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.'' என்று தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்