You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடரும் விசாரணை: குற்றம் என்ன? எஃப்.ஐ.ஆர். எங்கே? - ப.சிதம்பரம் கேள்வி
நேஷனல் ஹெரால்ட் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை, திங்கள் கிழமையன்று 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகிறார்.
திங்கள்கிழமை காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்காக மதியம் 2.15 மணியளவில் முதல் கட்ட விசாரணை முடிந்தது. பிறகு இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனைக்குச் சென்று அங்கு கோவிட் தொற்றுக்காக சேர்க்கப்பட்டுள்ள அவரது தாயும், கட்சி இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினார்.
திங்கள்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில், இரண்டாவது சுற்று விசாரணை மீண்டும் தொடங்கியது.
இந்த விவகாரம் குறித்து பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,, "இது போன்ற நடத்தை நல்லதல்ல. மக்கள் இதை விரும்ப மாட்டார்கள். சட்டப்படி நடந்தால் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்." என்று கூறினார்.
`'நாம் சட்டத்தை பின்பற்றவேண்டும், அப்போதுதான் நாடு செயல்படும். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சிலரை குறிவைத்து சோதனைகள் நடத்துகின்றன. அது தவறு" என்று அவர் மேலும் கூறினார்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லி வந்துள்ளார்.
முன்னதாக, திங்களன்று ராகுல் காந்தி தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்ட தொண்டர்கள் அணி வகுக்க, தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் வந்தார்.
ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட சம்மனைக் கண்டித்து, புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், அக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது, டெல்லி போலீஸ் தள்ளியதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் இந்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு இடது விலா எலும்பு முறிந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியது.
மூன்று திடகாத்திரமான போலீஸ்காரர்கள் மோதியபோது மயிரிழை அளவிலான எலும்பு முறிவு என சந்தேகிக்கப்படும் பாதிப்போடு தப்பியது அதிருஷ்டம் என்று கூறிய சிதம்பரம், உண்மையில் மயிரிழை அளவிலான முறிவு ஏற்பட்டிருந்தால் அது தானாக சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதாக ட்வீட் செய்திருந்தார்.
தன் வழக்கமான பணிக்குத் திரும்பவிருப்பதாகவும் அவர் அந்த ட்வீட்டில் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருப்பதை நாடு இப்போது அறிந்துகொண்டதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார்.
"காங்கிரஸின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராகுல் காந்தி ஏன் பயப்படுகிறார்? அவர் தவறு செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை தனது வேலையைச் செய்யட்டும். 1 கட்சி மற்றும் 1 குடும்பத்திற்காக சட்டம் மாறுமா? காங்கிரஸ் கட்சி ஊழலை ஆதரிக்கிறது என்பது இப்போது நாட்டிற்குத் தெரியும்." என்று அவர் கூறினார்.
இரண்டு கேள்விகளுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பதில் அளிக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் சவால் விடுத்துள்ளார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட எந்த குற்றதுக்காக இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது?
எந்த போலீஸ் முகமை குறிப்பிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது?
இந்த இரண்டு கேள்விகளைக் கேட்டதுடன்
பட்டியலிடப்பட்ட குற்றம் ஏதும் குறிப்பிடப்படாமல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்பது தெரியுமா என்றும் சிதம்பரம் கேட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்