நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் பின்னணி என்ன?

    • எழுதியவர், சோயா மதீன்
    • பதவி, பிபிசி செய்திகள், டெல்லி

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று, திங்கள்கிழமை அரசு முகமையான அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார்.

இதனையொட்டி, நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரித்துவரும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

'நேஷனல் ஹெரால்டு' வழக்கு குறித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கும் அவருடைய தாயாரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்திக்கும் அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தது.

சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை முன்பு ஆஜராவதற்கு மூன்று வார கால அவகாசம் கோரியுள்ளார்.

இந்தியாவின் ஆளும்கட்சியான பாஜக தலைவர் ஒருவரால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் தற்போது செயல்படாத நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனத்தை வாங்குவதற்கு கட்சி நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எவ்வித நிதி முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என, காந்தி குடும்பம் மறுத்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவால் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1937ஆம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. ஏ.ஜே.எல். நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இந்நிறுவனத்தின் மூலம் உருது மொழியில் குவாமி ஆவாஸ் (Qaumi Awaz) என்ற பத்திரிகையும் இந்தி மொழியில் நவ்ஜீவன் என்ற தினசரி பத்திரிகையும் தொடங்கப்பட்டது.

அந்த காலத்தின் மிகவும் செல்வாக்குமிக்க தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தால் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் சிறந்த தேசியவாத பத்திரிகை என்ற புகழை அடைந்தது நேஷனல் ஹெரால்டு.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் கடுமையான மற்றும் கூர்மையான தலையங்க பாணி மற்றும் நேருவின் கடும் வார்த்தைகளைக் கொண்ட பத்திகள் காரணமாக, பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பத்திரிகையை 1942 ஆம் ஆண்டில் தடை செய்தது. இதனால், அந்த தினசரி பத்திரிகை தற்காலிகமாக செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பத்திரிகை செயல்படத் தொடங்கியது.

1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று, நாட்டின் பிரதமராக நேரு பதவியேற்றபின்னர், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இயக்குனர் குழு தலைவர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்தார்.

ஆனால், அப்பத்திரிகையின் கொள்கையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிப்பதில் காங்கிரஸ் தொடர்ந்து செயலாற்றி வந்தது. 1963ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அப்பத்திரிகை குறித்து ஜவஹர்லால் நேரு பேசுகையில், "பொதுவாக காங்கிரஸ் கொள்கையை ஆதரிக்கும் அதேவேளையில் சுயாதீனமான கண்ணோட்டத்தை நேஷனல் ஹெரால்டு பேணுகிறது" என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் நிதியின் மூலமாக செயல்பட்ட போதும், இந்தியாவின் சிறந்த பத்திரிகையாளர்களின் அரவணைப்பின் மூலம், முன்னணி ஆங்கில செய்தித்தாளாக உருவெடுத்தது.

ஆனால், 2008ஆம் ஆண்டில் பொருளாதார காரணங்களுக்காக மீண்டும் அப்பத்திரிகை நிறுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டில் அப்பத்திரிகை இணைய பதிப்பாக மீண்டும் தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியால் 2012ஆம் ஆண்டில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியை பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தை கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டதாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஏ.ஜே.எல். நிறுவனம் 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது.

2010ஆம் ஆண்டில், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் இந்த கடனை வழங்கியது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினர்களாக இருந்தனர். அந்நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை இருவரும் கொண்டிருந்தனர்.

மீதமுள்ள 24% பங்குகள், காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெயர்களும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் "தீங்கிழைக்கும்" நோக்கில், கோடிக்கணக்கிலான சொத்துக்களை "கைப்பற்ற" சூழ்ச்சி செய்ததாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஏ.ஜே.எல். மற்றும் டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் மற்ற நகரங்களில் உள்ள அதன் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீது யங் இந்தியா நிறுவனம் முழு கட்டுப்பாட்டையும் பெற்றுள்ளது என்று பாஜக தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் என்ன சொல்கிறது?

"பணம் இல்லாமல் பண மோசடி செய்ததாக கூறப்படும் விசித்திரமான வழக்கு" என விவரித்துள்ள காங்கிரஸ், இது பாஜகவின் "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என குற்றம்சாட்டியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் அதிக ஆண்டுகாலத்திற்கு ஆட்சி செய்த காங்கிரஸ், இவ்வழக்கை "பயப்படாமல் எதிர்த்துப் போராடும்" என தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான ஏ.ஜே.எல். நிதி நெருக்கடிகளில் சிக்கியபோதும், அதன் வரலாற்று பாரம்பரியம் மீது நம்பிக்கை வைத்திருந்ததால், காங்கிரஸ் அதனை கைவிடாமல் இருந்ததாக அக்கட்சி கூறியுள்ளது. பல்வேறு சமயங்களில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு 90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல். நிறுவனம் கடனில் இருந்து விடுபட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகளை ஒதுக்கியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

யங் இந்தியா நிறுவனம் "லாப நோக்கமற்றது" என தெரிவித்துள்ள காங்கிரஸ், அதன் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு எந்த ஈவுத்தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

"நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் உரிமையாளர், அச்சு நிறுவனம், வெளியீட்டாளராக ஏ.ஜே.எல் நிறுவனம் தொடர்ந்து இருக்கிறது. அதன் சொத்துக்களில் எவ்வித மாற்றமோ பரிமாற்றமோ இல்லை" என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டை குறிவைப்பதன் மூலம் பாஜக "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களையும் சுதந்திர போராட்டத்திற்கான அவர்களின் பங்கையும் அவமரியாதை செய்கிறது" என, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

மேலும், அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து சட்ட முகமைகளையும் அதன் அரசியல் எதிரிகளை துன்புறுத்த பாஜக அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக அரசாங்கம் தங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அரசு முகமைகளை பயன்படுத்துவதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: