உலக ரத்த கொடையாளர் தினம்: 'பாம்பே ஓ' ரத்தப் பிரிவை தானம் செய்யும் கொடை உள்ளங்கள்

பாம்பே ஓ ரத்தப்பிரிவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பி. சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே, ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, 'உயிர்காக்க' உதிரம் (ரத்தம்) கொடுக்க வேண்டுமென்பதே.

ரத்த தானம் வழங்க ஆண், பெண் இருபாலரும் முன்வரும்போதும் அதற்கான தேவை என்னமோ அதிகரிக்கவே செய்கிறது. ரத்தம் இல்லாமல் நிறைய அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போயிருக்கின்றன.

உங்களுடைய ரத்த வகை, அரிய வகையாக இருந்தால், அது கிடைக்க தாமதம் ஏற்படும். அதனால் தமது ரத்தம் எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என மருத்துவர்களும், ரத்ததான ஒருங்கிணைப்பாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

ரத்தப் பிரிவுகள் கண்டுபிடிப்பு

1900ஆம் ஆண்டு டாக்டர் கார்ல் லாண்ட்ஸ்டீனர் என்பவர் தான் ரத்தத்தில் உள்ள ஓ, ஏ, பி, ஏபி என ரத்த வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். அதில் A' பிரிவு, A1', `B2' என மேலும் இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கப்பட்டது.

பாசிட்டிவ் வகை உள்ளவர்களுக்கு நெகடிவ்வோ அல்லது நெகடிவ் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் ரத்தமோ ஏற்றுவதால், உயிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன.

1940ஆம் ஆண்டு`ரேசஸ்'(Rhesus)' என்ற குரங்கிலிருந்து வேறு ஒரு புதிய வகை ரத்தப் பிரிவு கண்டறியப்பட்டது. அந்தப் பிரிவுக்கு 'Rh' என்று பெயர் சூட்டப்பட்டது. `Rh'-ல் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டன.

ஒரே ரத்த வகையாக இருந்தாலும், `Rh'ம் சரியாக இருக்கிறதா, என பரிசோதிக்கப்பட்ட பிறகே பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.

பொதுவாக 'O' பிரிவு ரத்தத்தை யுனிவர்சல் டோனர்' என்பார்கள். ஆனால்,பாம்பே ஓ' ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இதைக்கூட ஏற்ற முடியாது.

பாம்பே ஓ ரத்த வகையா? என ஆச்சரியத்தோடும், கேள்வியோடும் கேட்பவர்கள் அதிகம்.

இந்த பாம்பே ஓ ரத்த வகையுள்ள கொடையாளர்கள் செல்வராஜ், முகம்மது சாஜீப், சரவணபவன், ஒருங்கிணைப்பாளர் மணி பிரகாஷ், ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி தலைமை மருத்துவர் ரவீந்திரன் சமீபத்தில் பாராட்டி வாழ்த்தினார்.

அந்த கொடையாளர்களை நாம் சந்தித்தபோது 'பாம்பே ஓ' குறித்தும், அவர்களது அனுபவங்கள் குறித்தும், பிபிசி தமிழடம் பகிர்ந்துகொண்டனர்.

மருத்துவர் ரவீந்திரன் நம்மிடம் பேசும்போது, 1952ஆம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே என்பவர் தான் முதன் முதலில் இந்த அரிய வகை ரத்தம் பற்றி கண்டறிந்தார். இது பம்பாயில் கண்டறியப்பட்டதால் 'பாம்பே ஓ குரூப்' என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் எத்தனை பேர்?

இந்தியாவில் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு பாம்பே ஓ பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாம்பே ஓ பாசிட்டிவ் கொடையாளர்கள் 300 பேர்தான் தகுதியானவர்கள். அவர்களில் 180 பேர் மட்டுமே தற்போது ரத்த தானம் செய்து வருகின்றனர்.

மேலும் நெகட்டிவ் பிரிவில் 33 பேர் குருதி கொடையாளித்து வருகின்றனர். மும்பைக்கு அடுத்து தமிழகத்தில் பாம்பே ஒ பாசிட்டிவ் ரத்த வகை இருப்பவர்கள் அதிகம். சேலத்தில் மட்டுமே 15 பேர் இருக்கின்றனர் என்று மருத்துவர் ரவீந்திரன் கூறினார்.

பாம்பே ரத்தம்
படக்குறிப்பு, மருத்துவர் ரவீந்திரன்

மரபணுக்கள்தான் ரத்தப் பிரிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பவர்களிடம் மட்டும்தான் இந்த அரிய ரத்தவகை இருக்கும்.

நம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜென்களும் (Antigens), பிளாஸ்மாவில் ஆன்டி பாடீஸும் (Anti bodies) இருக்கும். இதை வைத்துதான் ரத்தம் எந்த வகை என்பதை கண்டறிய முடியும்.

'ஏ' குரூப் ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு ' ஏ' மற்றும் ஹெச்' ஆகிய இரண்டு ஆன்டிஜென்களும், 'பி' ஆன்டிபாடீஸும் இருக்கும். 'பி' பிரிவில் `பி' மற்றும் 'ஹெச் ' ஆன்டிஜென்கள் இருக்கும். 'ஏ'ஆன்டிபாடீஸும் இருக்கும்.

ஏபி' பிரிவில் ஏ', பி' மற்றும் ஹெச்' வகை ஆன்டிஜன்கள் இருக்கும்.

பாம்பே பிளட் குரூப்பில் ஆன்டிஜென்கள் இருக்காது. ஏ', பி', `ஹெச்' ஆன்டிபாடீஸ் மட்டுமே இருக்கும்.

'ஹெச்' ஆன்டிஜென்னில் இருந்துதான் 'ஏ', பி', ஓ' ஆகிய மூன்று பிரிவுகளும் பிறக்கின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் 'ஹெச்' ஆன்டிஜென் 'பாம்பே ஓ' பிரிவில் மட்டும் இருக்காது. பிளாஸ்மா சோதனையில் மட்டுமே என்ன வகை என்பதைக் கண்டறிய முடியும்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக பாம்பே நெகட்டிவ் இரத்த வகை தேவைப்பட்டது. இதனை கண்டறிவதற்கு சிரமமாக இருந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து ஒருவர் ரயில் மூலம் வந்து கொடுத்து சென்றார். மேலும் பாம்பேவில் இருந்து கொடையாளர் மூலம் ரத்தம் பெறப்பட்டு ,விமான மூலம் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு இரத்தம் செலுத்தப்பட்டு , தாயும், சேயும் காப்பாற்றப்பட்டனர்.

அனைவரும் இரத்த வகையை தெரிந்துகொள்ளவும், மற்றவர்களுக்கு தானம் வழங்கவுமே கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

அரிய வகை ரத்தத்தை தானமாக வழங்கி வரும் செல்வராஜ் சேலத்தில் நோட்டரி அட்வகேட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் தமது 26 வயதில் தனக்கு பாம்பே ஓ பாஸிட்டிவ் ரத்த வகை இருந்ததாக கூறினார். அப்போது முதல் இன்று வரை 37 முறை இவர் ரத்த தானம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

ரத்ததானம் செய்ய கடல் கடந்தவர்

இணையத்தில் தனக்கு பாம்பே ஓ பாசிட்டிவ் ரத்த வகை இருப்பதை இவர் பதிவு செய்து வைத்துள்ளார். அதைப்பார்த்து லண்டனிலிருந்து கடந்த 2010ஆம் ஆண்டு ஒருவர் அழைத்து, தமது சகோதரர் மகனுக்கு ரத்தம் கொடுக்க வங்கதேசம் வரை வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வங்கதேசம் சென்று ரத்தம் கொடுத்துவிட்டு 20 மணி நேரத்திற்குள் சேலம் திரும்பியதாகக் கூறுகிறார் செல்வராஜ்.

பாம்பே ரத்தம்
படக்குறிப்பு, செல்வராஜ்

மற்றொரு சம்பவத்தை நினைவுகூர்ந்த செல்வராஜ், முல்லை பெரியாறு அணை பிரச்சனையின் இருந்த சமயம். திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப்பெண்ணின் பிரசவத்திற்காக ரத்தம் தேவைப்படுவதாக தொலைபேசி மூலம் தகவல் சொன்னார்கள். அந்த பிரச்னைக்கு இடையிலும், ரத்தம் கொடுத்து வந்தேன். அந்த தாயிற்கு மூன்று குழந்தைகள் பிறந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள் கேரளாவின் பிரபல தினசரி பத்திரிகை,முல்லை பெரியாறு பிரச்னைக்கு மத்தியிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ரத்த தானம் வழங்கியதால், கேரள பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததாக செய்தி வெளியிட்டது எனக்கு பெருமையாக இருந்தது என்கிறார்.

ரத்த கொடையாளரை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்

பாம்பே ரத்தம்
படக்குறிப்பு, மணி பிரகாஷ், ரத்தம் தான ஒருங்கிணைப்பாளர், கொடையாளர்

அரிய வகை ரத்த ஒருங்கிணைப்பாளர் மணி பிரகாஷ் இது குறித்து பிபிசியிடம் பேசும்போது, 102 முறை ரத்த தானம் செய்துள்ளதாகவும், 15 ஆண்டுகளாக ரத்த தானம் வழங்குபவர்களை, ஒருங்கிணைந்து நோயாளிகளுக்கு உதவி வருவதாக கூறுகிறார்.

அரிதான ரத்த வகையான பாம்பே ஓ பாஸிடிவ் ரத்த வகை தானத்தை தமிழகத்தில் மணி பிரகாஷ் , ஸ்ரீ வட்சாவேமா மற்றும் சந்தோஷ் ஆகிய மூவரும் ஒருங்கிணைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 'பாம்பே ஓ' பாசிடிவ் உள்ளவர்கள் 30 பேரும், பாம்பே ஓ நெகட்டிவ் 2 பேருக்கும் இருக்கிறது. அதில் ஒருவர் ரத்தம் தானம் தர முடியாத நிலையில் இருக்கிறார்.

பாம்பே ரத்த வகை

பட மூலாதாரம், Getty Images

அரிய வகை ரத்தம் சரியான முறையில் தேவைப்படுவோருக்கு வழங்க வசதிகள் இருந்தால் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து வழங்க முடியும் என்று இந்த தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

சேலத்தில் பாம்பே ஓ பாசிட்டிவ் ரத்த வகை உள்ளவரிடமிருந்து, ரத்தம் பெற்று ஹைதராபாதிலுள்ள ஒருவருக்கு, ரயிலில் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தன்னார்வலர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இடையில் ஆறு முறை ரத்தம் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வெப்ப அளவு குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தம் மருத்துவமனைக்கு சேர்ந்தவுடன், அவர்கள் ரத்தம் நன்றாக வந்திருக்கிறது என்ற சொல்லும்போதுதான் 'போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருக்கும்' என்று மணி பிரகாஷ் கூறுகிறார்.

ஒரு சில தனியார் மருத்துவமனைகள், அவர்களது ரத்த வங்கியில்தான் ரத்தம் தானம் தரப்பட வேண்டும் என்று கூறும். கோவையில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு சென்னையில் இருந்து கொடையாளர் மூலம் அரிய ரத்த வகையை வாங்கிக் கொடுக்க இவர்கள் தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.

தமிழக அரசு நாங்கள் சேகரித்து கொடுக்கும் ரத்தத்தை, விரயம் செய்யாமல் பயன்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பாம்பே ரத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்ட அரிய வகை ரத்தத்தை எங்கு தேவைப்படுகிறதோ, அந்த மருத்துவமனைக்கு, தன்னார்வலர்களின் உதவியுடனே, மிகவும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைப்பது அவசியமானது என்று ரத்தம் வழங்கும் பணியின் மேன்மையை இவர்கள் விவரிக்கின்றனர்.

மேட்டூரைச் சேர்ந்த பெண்ணுக்கு பிரவசத்திற்காக பாம்பே ஒ பாஸிட்டிவ் ரத்த வகையை சென்னையிலிருந்து ரயில் மூலம் கொண்டு வந்து கொடுத்தோம். அவருக்குப் பிறந்த குழந்தையை பார்த்ததும் எல்லை இல்லா சந்தோஷம் அடைந்ததாக தெரிவித்தார்.

பாம்பே பிளட்
படக்குறிப்பு, பார்வதி

பெரிய சோலையை சேர்ந்த பயனாளி பார்வதி நம்மிடம் பேசுகையில், மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த போது ஹீமோகுளோபின் குறைவாக இருந்ததால், ரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்கள். மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒ பாஸிட்டிவ் இரத்தத்தை செலுத்தினார்கள். மயக்கம் வாந்தி வந்தது. சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்துவிட்டு பாம்பே ஒ பாஸிட்டிவ் என சொன்னார்கள். 'பாம்பே ஓ' என்ரால், என்னவென்றே எனக்கு தெரியாது என்று கூறினார்.

அரிய வகை ரத்தம் நமக்கு கிடைக்குமா என ஒரு வித பயமாக இருந்தது. இன்னொரு பக்கம் யாருக்கும் இல்லாதது நமக்கு இருக்குன்னு பெருமையாகவும் இருந்தது என்று பார்வதி தெரிவித்தார்.

அப்போது இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றனும் என்று மருத்துவர்கள் சொன்னபோது, மணி பிரகாஷ் உதவியுடன் இரண்டு யூனிட் பெறப்பட்டு, ரத்தம் ஏற்றப்பட்டதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தது என்று தமது பழைய மருத்துவ நினைவுகளை பார்வதி நினைவுகூர்ந்தார்.

பின்னர் பிரசவத்திற்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் இரண்டு யூனிட் ரத்தம் இருந்தால்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் எனக்கூறிவிட்டனர். பெங்களூரில் இருந்து மீண்டும் மணி பிரகாஷ் ரத்தம் பெற ஏற்பாடு செய்து கொடுத்தார். பிரசவம் நல்லபடியாக நடந்து ரத்தம் ஏற்றினார்கள்.

"இப்போது எனது குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது. அவனுக்கும் பாம்பே ஓ பாஸிட்டிவ் குரூப் இருந்தா, நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அவனுக்கு பி பாஸிட்டிவ். அவனையும் ஒரு கொடையாளனாக வளர்ப்பேன்," என்கிறார் பார்வதி.

எந்த ரத்தத்தையும் 35 நாட்களுக்கு மேல் சேமித்து வைத்திருக்க முடியாது. அதன் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுவது பாம்பே ஓ' வகை ரத்தப் பிரிவினர்தான்.

'உயிர் காக்கும்' கடவுள் போல மனிதன் மாறும் தருணம், அவன் ரத்தத்தை தானம் செய்யும்போதுதான் தெரிய வரும் என்பதை இறை நம்பிக்கை கொண்ட கொடையாளர்களும், ஒருங்கிணைப்பாளரும் உணர்ந்திருக்கிறார்கள். மதம், மொழி இனம், கடந்து இவர்கள் ஆற்றும் தங்களைப் போன்றோரின் சேவை மேலும் விரிவடைய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: