You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குல்தரா வரலாறு: 200 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடக்கும் ஒரு ராஜஸ்தான் கிராமத்தின் கதை
- எழுதியவர், ஷகீல் அக்தர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர் நகரம் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. நகரத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மைல்களுக்கு பாலைவனம் நீண்டுள்ளது. அங்கு எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் திட்டுகள் காட்சியளிக்கின்றன.
கடந்த 200 ஆண்டுகளாக வெறிச்சோடிக்கிடக்கும் 'குல்தரா' என்ற அழகிய கிராமம், நகரத்திலிருந்து சில மைல் தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தில் வசித்த மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன் இரவோடு இரவாகத் தங்கள் கிராமத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவே இல்லை.
குல்தரா கிராமம் இப்போது தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெய்சல்மேர் ஒரு சிறிய சமஸ்தானமாக இருந்தபோது, குல்தரா கிராமம் அந்த சமஸ்தானத்தின் மகிழ்ச்சியான கிராமமாக இருந்தது என்றும் பெரும்பாலான வருவாய் இங்கிருந்துதான் வந்தது என்றும் நம்பப்படுகிறது.
இங்கு விழாக்கள், பாரம்பரிய நடனம் மற்றும் இசை விழாக்கள் நடந்தன.
இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்தனர். கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்தது. அந்த பெண் மிகவும் அழகாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெய்சல்மேர் சமஸ்தானத்தின் திவான் சலீம் சிங், அந்தப் பெண்ணைக் கண்டு அவளது அழகில் மயங்கி, திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தினார்.
உள்ளூர் கதைகளின்படி, சலீம் சிங் ஒரு கொடுங்கோல் மனிதராக இருந்தார். அவருடைய கொடுமையின் கதைகள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவை. ஆனால், இதையும் மீறி குல்தரா மக்கள் அந்த சிறுமியை சலீம் சிங்குக்கு திருமணம் செய்துகொடுக்க மறுத்துவிட்டனர்.
சலீம் சிங் கிராம மக்கள் இதுகுறித்து யோசிக்க சில நாட்கள் அவகாசம் கொடுத்தார். சலீம் சிங் சொல்வதைக் கேட்காவிட்டால், கிராமத்தில் அவர் படுகொலைகளைச் செய்வார் என்று கிராம மக்களுக்குத் தெரியும்.
குல்தரா மக்கள் கிராமக் கோயிலுக்கு அருகில் நாற்சந்தியில் பஞ்சாயத்து நடத்தி, தங்கள் மகள் மற்றும் கிராமத்தின் கொளரவத்தை காப்பாற்றுவதற்காக கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
கிராம மக்கள் அனைவரும் தங்கள் உடமைகள், கால்நடைகள், தானியங்கள், துணிமணிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு இரவு வேளையில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் இங்கு திரும்பி வரவே இல்லை.
சலீம் சிங்கின் மாளிகை இன்றும் ஜெய்சல்மேரில் உள்ளது. ஆனால் யாரும் அதைப் பார்க்கச் செல்வதில்லை.
ஜெய்சல்மேர் அருகே அமைந்துள்ள குல்தரா கிராமத்தில், வரிசையாக கட்டப்பட்ட கல் வீடுகள் தற்போது படிப்படியாக சிதிலமடைந்துவருகின்றன. ஆனால், இந்த இடிபாடுகள், இந்த கிராமத்தின் கடந்த காலச் செழிப்பை வெளிப்படுத்துகின்றன.
சில வீடுகளில் அடுப்பு, அமரும் பகுதிகள், குடங்கள் வைக்கப்படும் பகுதிகள் காணப்படுகின்றன. யாரோ இங்கிருந்து இப்போதுதான் சென்றது போல் அவை காட்சியளிக்கின்றன. இங்கே சுவர்களில் ஒரு சோக உணர்வு உள்ளது. திறந்தவெளியில் இருப்பதால், அமைதியில் சலசலக்கும் காற்றின் சத்தம் சூழலை இன்னும் சோகமாக்குகிறது.
குல்தராவின் இடிபாடுகளில் இரவின் நிசப்தத்தில் யாரோ நடக்கும் காலடிச் சத்தம் கேட்கிறது என்று உள்ளூர் மக்கள் தங்கள் பெரியவர்களிடம் இருந்து கேட்ட விஷயங்களைக் கூறுகிறார்கள்.
குல்தரா மக்களின் ஆன்மாக்கள் இன்னும் இங்கு அலைகின்றன என்ற நம்பிக்கை உள்ளூர் மக்களிடையே நிலவுகிறது.
இந்த கிராமத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ராஜஸ்தான் அரசு இங்குள்ள சில வீடுகளை பழையபடி மீட்டெடுத்துள்ளது. பழைய காலத்தின் சாட்சியாக இன்றும் அந்த கிராமத்தில் கோயில் நிற்கிறது.
இந்த கிராமத்தை காண ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். இங்குள்ள மக்கள் இந்த கிராமத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
குல்தரா மக்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியேறும்போது, 'இந்த கிராமத்தில் ஒருபோதும் யாரும் குடியேறமாட்டார்கள்; என்று சாபம் கொடுத்ததாகச்' சொல்லும் மற்றொரு நம்பிக்கையும் மக்களிடையே பிரபலமானது.
அவர்கள் சென்று இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த கிராமம், ஜெய்சல்மேர் பாலைவனத்தில் இப்போதும் வெறிச்சோடிக்கிடக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்