வரலாறு: ரவீந்திரநாத் தாகூர் 'ஜன கண மன' எழுதி பேரரசர் ஐந்தாம் ஜார்ஜை சிறப்பித்தாரா? - ஓர் அலசல்

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 39வது கட்டுரை இது.)

இரு நாடுகளுக்கு தேசிய கீதங்களை எழுதிய உலகின் ஒரே கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இந்தியாவின் 'ஜன கண மன' மற்றும் வங்கதேசத்தின் 'அமர் சோனார் பங்களா' என்ற தேசிய கீதங்கள் அவர் இயற்றியவை. அதே சமயம், இலங்கையின் தேசிய கீதத்திலும் அவரது தாக்கம் தெரியும்.

1939-40ல் விஸ்வபாரதியில் தாகூரின் சீடராக ஆனந்த் சமர்கூன் இருந்த போது, இலங்கையின் தேசிய கீதம் அவரால் எழுதப்பட்டது. 'ஜன கண மன' பாடல் 1911 இல் இயற்றப்பட்டது, அதே ஆண்டில் காங்கிரஸின் 27 வது அமர்வில் முதல் முறையாக அந்தப்பாடல் இசைக்கப்பட்டது.

நித்யப்ரியா கோஷ் தனது 'ரவீந்திரநாத் தாகூர் எ பிக்டோரியல் பயோகிராஃபி' புத்தகத்தில் "ரவீந்திரநாத்தின் நண்பர் ஒருவர், பேரரசர் ஐந்தாம் ஜார்ஜின் டெல்லி தர்பார் விழாவை முன்னிட்டு அவரை சிறப்பித்து ஒரு பாடலை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கையை நிராகரித்த தாகூர் , ஒரு ஆங்கிலேய ராஜாவுக்காக அல்லாமல், எல்லா மக்களின் இதயங்களையும் ஆளும் சக்தியின் நினைவாக இதை எழுதினார்,"என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் ஜார்ஜ் பேரரசரின் வரவேற்புப் பாடல் இது என்று ஆங்கிலோ-இந்திய ஊடகம் மூலம் பிறந்த இந்த வதந்திக்கு நீண்ட வரலாறு உண்டு என்று அவர் எழுதுகிறார்.

"ஆங்கிலக் கவிஞர் எஸ்ரா பவுண்ட், தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், டபிள்யூ.பி. யீட்ஸ் இந்த வதந்தியை உண்மை என்று ஏற்றுக்கொண்டதை நினைத்து சிரித்தார். இன்றும் தாகூரின் தேசபக்தியை பற்றி மக்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம்,இந்த வரவேற்புப் பாடல் பற்றி குறிப்பிடுகிறார்கள்," என்று நித்ய ப்ரியா கோஷ் எழுதியுள்ளார்.

இளம் வயதிலேயே புகழ்

ரவீந்திரநாத் தாகூர் 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பிறந்த காலகட்டத்தில் கல்கத்தாவில் மின்சாரம் இல்லை, பெட்ரோல் இல்லை, பாதாள சாக்கடை அமைப்பு இல்லை, குடிநீர் குழாய்களும் இல்லை.

அவர் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி ஒரு பிரகடனத்தின் மூலம் இந்தியாவின் நிர்வாகத்தை கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து பறித்துக்கொண்டார்.

தாகூரின் மூதாதையர்கள் தற்போதைய பங்களாதேஷில் உள்ள ஜெஷோரைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள மக்கள் அவரை மிகவும் மதித்து தாகூர் என்று அழைத்தனர். இந்த தாகூர், பின்னர் ஆங்கில மொழியில் தாகூர் ஆனது.

தாகூரின் ஆரம்பக் கல்வி வீட்டிலேயே நடந்தது. 17 வயதில், சட்டம் படிக்க அவர் பிரிட்டனுக்குச் சென்றார். ஆனால் பட்டம் பெறாமல் இந்தியா திரும்பினார்.

இருபது வயதிற்குள், ரவீந்திரநாத்தின் புகழ் நாலாபுறமும் பரவத் தொடங்கியது.

தாகூர் தனது சுயசரிதையான 'ஜீவன் ஸ்மிருதி'யில் , "ரமேஷ் சந்திர தத்தின் மூத்த பெண்ணின் திருமண விழாவில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் வந்தபோது, ரமேஷ் சந்திரா முன்னால் சென்று அவருக்கு மாலை அணிவித்தார். அதே நேரத்தில் நானும் அங்கு சென்றேன். பங்கிம் சந்திரா தனது கழுத்தில் இருந்த மாலையை எடுத்து என் கழுத்தில் அணிவித்தார். என்னைக்காட்டிலும் இந்த மாலைக்கு தகுதியானவர் இவர்தான் என்று கூறினார்."என்று எழுதுகிறார்.

"பின்னர் அவர் ரமேஷ் தத்திடம், இவர் எழுதிய 'சந்தியா சங்கீத்' புத்தகத்தைப் படித்தீர்களா இல்லையா என்று கேட்டார். தத், "இல்லை" என்று சொன்னார். அந்த புத்தகத்திற்காக பங்கிம் சந்திரா என்னைப் பாராட்டினார். இதைவிட பெரிய வெகுமதி எனக்கு என்ன இருந்திருக்கமுடியும்."

அண்ணி காதம்பரி மரணத்தால் பெரும் அதிர்ச்சி

23 வயதில் ரவீந்திரநாத், 10 வயது கிராமத்துப் பெண்ணான மிருணாளினியை மணந்தார். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில், அவர்களது குடும்பத்தில் ஒரு சோக சம்பவம் நடந்தது. அவரது சகோதரர் ஜோதிரிந்திரநாத்தின் மனைவி காதம்பரி 25 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

சுனில் கில்னானி தனது 'இன்கார்னேஷன்ஸ் இந்தியா இன் 50 லைவ்ஸ்' என்ற புத்தகத்தில், " கோடை மதியங்களில் தானும் காதம்பரியும் ஒன்றாக அமர்ந்து கல்கத்தாவில் இருந்து வரும் புதிய இலக்கிய விமர்சனங்களை படித்ததையும், அப்போது காதம்பரி தமக்கு மெதுவாக விசிறி வீசுவார் என்பதையும் பல தசாப்தங்களுக்குப்பிறகு தாகூர் தமது 80 களில் இருந்தபோது நினைவு கூர்ந்தார்," என்று எழுதியுள்ளார்.

"தாகூரின் திருமணத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு காதம்பரி , அளவுக்கு அதிகமாக ஓப்பியம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்" என்று தாகூரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆண்ட்ரூ ராபின்சன் குறிப்பிடுகிறார்.

காதம்பரி தனது தற்கொலையின் போது ஒரு கடிதத்தை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது, அது குடும்பத் தலைவரான தேவேந்திரநாத்தின் அறிவுறுத்தலின் பேரில் அழிக்கப்பட்டது.

"காதம்பரியின் தற்கொலை பற்றிய ஊகங்கள் தொடர்கின்றன, அவர் விசித்திரமானவர் , நரம்பியல் பிரச்சனை உள்ளவர், அவரது கணவர் அவரைப் புறக்கணித்தார், தன் கணவருக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ஒரு நடிகை மீது ஆழ்ந்த பொறாமை கொண்டிருந்தார், ரவீந்திரநாத்தின் திருமணத்தால் மனதளவில் காயப்பட்டார். ஏனென்றால் அவரை மிகவும் நேசித்தார் என்பவை இவற்றில் அடங்கும்," என்று நித்யப்ரியா கோஷ் குறிப்பிடுகிறார்.

டப்ள்யூ பி யீட்ஸ் கீதாஞ்சலிக்கு முன்னுரை எழுதினார்

ரவீந்திரநாத் தாகூர் 1907 மற்றும் 1910 க்கு இடையில் கீதாஞ்சலி கவிதைகளை எழுதினார். சீல்டாவில் பத்மா நதிக்கரையில் கீதாஞ்சலியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

1912 மே 27 ஆம் தேதி அவர் இங்கிலாந்துக்கு கப்பலில் சென்றபோது, தனது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்.

ரவீந்திரநாத் தனது சுயசரிதையான 'மை லைஃப் இன் மை வேர்ட்ஸ்' இல் ,"லண்டன் சென்றடைந்த பிறகு, நான் 1911 இல் கல்கத்தாவில் சந்தித்த ஆங்கில ஓவியர் வில்லியம் ரோதன்ஸ்டைனிடம் இந்தக் கவிதைகளைக் கொடுத்தேன்." என்று எழுதுகிறார்,

"ரோதன்ஸ்டைன் அந்தக் கவிதைகளை பிரபல கவிஞர் டபிள்யூ.பி. யீட்ஸிடம் படிக்கக் கொடுத்தார். ஒரு மாலையில் தனக்குத் தெரிந்த கவிஞர்கள் மத்தியில் அந்தக் கவிதைகளைப் அவர் படித்தார். இந்தக் கவிதைத் தொகுப்பை லண்டன் இந்தியன் சொசைட்டி வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இந்தக் கவிதைகளின் முன்னுரையை யீட்ஸ் எழுதினார்."

"இப்படித்தான் கீதாஞ்சலி முதன்முதலில் லண்டனில் 1912 இல் வெளியிடப்பட்டது. நோபல் பரிசு பெற்ற செய்தி 1913 நவம்பர் 14 ஆம் தேதி சாந்திநிகேதனில் எனக்குக் கிடைத்தது."

சரோஜினி நாயுடு 1961 ஆம் ஆண்டு தாகூரின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட நினைவுக்கட்டுரையில், "கீதாஞ்சலி வெளியானபோது நான் இங்கிலாந்தில் தற்செயலாக இருந்தேன். அங்கு, சிறந்த ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தபோது, அவருக்கு மகிழ்ச்சியில் பைத்தியம் பிடித்தது போல ஆனது,"என்று குறிப்பிட்டுள்ளார்.

"1913-ல் தாகூர் மிகவும் அழகான தாடி, நீண்ட அலை அலையான முடி மற்றும் நீண்ட அங்கியுடன் இங்கிலாந்துக்கு வந்தபோது, அவரது பாடல்கள் சூரியனைப் போல இங்கிலாந்து முழுவதையும் உயிர்ப்பித்தன. வயதான ஐந்து பெண்கள் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து கீதாஞ்சலியை படிக்கும் காட்சியையும் நான் கண்டேன்."

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பற்றிய செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டது . கல்கத்தா செய்தித்தாள் 'எம்பயர்' அதை 1913 நவம்பர் 14 ஆம் தேதி பிரசுரித்தது.

அந்த செய்தி இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அலையை பரப்பி, வங்க மொழியினர் மத்தியில் பண்டிகை சூழலை உருவாக்கியது.

கல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு நாளிதழான 'இந்தியன் டெய்லி நியூஸ்' இதைப் பற்றி சுவாரசியமான ஒரு விஷயத்தை எழுதியது. "தாகூருக்கு எந்தப் பல்கலைக் கழகத்துடனும் தொடர்பு இல்லை என்றும், லார்ட் மெக்காலே மற்றும் பிரிட்டிஷ் அரசின் கல்வி அமைப்பில் இருந்து அவர் வரவில்லை என்றும், அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் கிடைத்த இந்த சமயத்தில் சொல்லமுடியும்." என்று தெரிவித்தது.

'சர்' பட்டத்தை திருப்பி கொடுத்தார்

1919 ஏப்ரல் 13 அன்று, ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் அதிகாரப்பூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பிறகு ரவீந்திரநாத் தாகூர் வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்டுக்கு கடிதம் எழுதி, 1915-ல் பிரிட்டிஷ் பேரரசர் தனக்கு வழங்கிய 'சர்' பட்டத்தை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பை எப்படி சமாளிப்பது என்று செல்ம்ஸ்ஃபோர்டுக்கு தெரியவில்லை. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் பத்திரிகைகள், தாகூரின் முன்மொழிவு பேரரசரை அவமதிப்பதாகக்கூறி ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டன. அதே நேரத்தில் பிராந்திய மொழி செய்தித்தாள்களின் அணுகுமுறையும் அவருக்கு சாதகமாக இருக்கவில்லை.

"காங்கிரஸ் கூட அந்த ஆண்டு நடைபெற்ற அமர்வில், தாகூர் தனது நைட்வுட் பட்டத்தை திருப்பித் தருவதாகக்கூறியதை கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயம் விவாதிக்கப்படவில்லை . மாநாட்டில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை,"என்று நித்யப்ரியா கோஷ் எழுதுகிறார்,

"சில ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி தனது 'யங் இந்தியா' நாளிதழில் 'The Poet and the Charkha' என்ற கட்டுரையில் தாகூருக்கு 'Sir Rabindranath Tagore' என்று எழுதினார். பின்னர் தாகூர் 'The Modern Review' க்கு ஒரு திறந்த கடிதம் எழுதினார். "நான் நைட்வுட்டை மதிக்கிறேன். தலைவர்கள் போதிய எதிர்ப்பை தெரிவிக்க இயலாமையை வெளிப்படுத்திய போது அதை திருப்பித்தருவது பற்றி நான் பேசினேன். 'பாபு' , 'ஷ்ரேயுத், 'சர்', ' 'டாக்டர்' அல்லது 'சஹாப்' என்ற எந்த அடைமொழியும் எனக்குத் தேவையில்லை," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்."

தாகூரின் தேசியவாதம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது

நாடு கடவுளாக வணங்கப்படுவதை தாகூர் கடுமையாக விமர்சித்தார். நவீன நாடுகள் செய்த குற்றங்களால் அவர் மிகவும் கோபமடைந்தார். இருந்தபோதிலும், பிறந்த மண்ணின் மீதான அவரது அன்புக்கு குறைவில்லை.

தேசபக்திக்கும் தேசியவாதத்திற்கும் இடையே தெளிவான வேறுபாட்டை அவர் காட்டினார். தனது நாட்டை நேசிப்பதைப் பற்றி அவர் பேசியிருந்தார். ஆனால் அவர் வேறு எந்த நாட்டையும் எதிரியாகக் கருதவில்லை.

முதல் உலகப் போரானது, தாகூரை ஆக்கிரமிப்பு தேசியவாதத்திற்கு எதிராக வலுவாக நிற்க வைத்தது. மேலும் இந்த விஷயத்தில் அவரது பேச்சுகள் அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஹங்கேரியில் உள்ள அவரது நண்பர்களைக் கூட அவருக்கு விரோதிகளாக மாற்றியது.

காலனித்துவத்தை எப்போதும் எதிர்த்தவர் அவர். அவரது சகாக்கள் பலர் சுதந்திரத்திற்காக போராடிய நேரத்தில், தாகூர் சிந்தனை சுதந்திரம் பற்றி பேசினார்.

"மக்கள் மன அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் வரை அரசியல் சுதந்திரத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை தாகூர் காட்ட விரும்பினார்" என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுப்ரியா சௌத்ரி கூறினார்.

அர்ஜென்டினாவின் விக்டோரியா ஒகாம்போவுடன் நட்பு

1924 ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூர் அர்ஜென்டினாவுக்குச் சென்றார். அங்கு விக்டோரியா ஒகாம்போவின் விருந்தினராக இரண்டு மாதங்கள் இருந்தார். தன் நண்பர் ஒருவரின் இடத்தில் தாகூர் தங்குவதற்கு அவர் ஏற்பாடு செய்தார்.

இந்த காலகட்டத்தில் தாகூர் 22 கவிதைகளை எழுதினார். இது சற்று அசாதாரணமாக இருந்தது. தாகூர் ஒருமுறை அஜித் சக்ரவர்த்தியிடம் , தான் மேற்கத்திய ஆடைகளை அணியும்போதெல்லாம் சரஸ்வதி தன்னை விட்டு விலகிவிடுகிறார், அன்னிய உடையில் தாய்மொழியில் எழுத முடியாத நிலையில் உள்ளேன் என்று கூறினார். ஒகாம்போ தாகூருடனான உறவின் பல நிலைகளைக் கடந்தார்.

பின்னர் ஒகாம்போ தனது 'தாகூர் ஆன் தி பேக்ஸ் ஆஃப் ரிவர் பிளேட்' புத்தகத்தில் ,"சிறிது சிறிதாக இளைய பிராணியை சாந்தப்படுத்தினேன். சில சமயங்களில் கோபமாகவும், சில சமயங்களில் மிகவும் அமைதியாகவும், அவரது கதவுக்கு வெளியே தூங்காத நாய் போல இருந்தேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓகாம்போவுக்கு எழுதிய கடிதத்தில், தாகூர் அவருக்கு நன்றி தெரிவித்து, "எனது சந்தை விலை அதிகமாகிவிட்டது. எனது தனிப்பட்ட மதிப்பு பின்தங்கியுள்ளது. இந்த தனிப்பட்ட மதிப்பைக் கண்டறிய எனக்கு வலுவான விருப்பம் உள்ளது. இதை ஒரு பெண்ணின் அன்பு மூலம்தான் அடைய முடியும். நான் அதற்குத் தகுதியானவன் என்று நீண்ட நாட்களாக நம்பிக் கொண்டிருக்கிறேன்."என்று எழுதினார்.

"கவிஞரின் ஓய்வு மற்றும் வசதியை கவனித்துக் கொண்ட ஓகாம்போ, அர்ஜென்டினாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும்போது கவிஞரின் அறையில் ஒரு சோபாவை போடுவதற்காக கேபின் கதவை அகற்றும்படி கப்பலின் கேப்டனை வற்புறுத்தினார். இந்த சோபா பின்னர் சாந்திநிகேதனுக்கு கொண்டு வரப்பட்டது. கவிஞர் அதை தனது கடைசி நாட்கள் வரை பயன்படுத்தினார்," என்று நித்யப்ரியா கோஷ் எழுதுகிறார்.

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா மற்றும் தாகூர்

முசோலினியை ஒருமுறையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவை பலமுறைகளும் சந்திக்கும் வாய்ப்பு தாகூருக்கு கிடைத்தது.

ஆரம்பத்தில் தாகூர் பற்றிய ஷாவின் கருத்து சிறப்பாக இல்லை என்று தோன்றுகிறது. 1919 ஆம் ஆண்டில், அவர் தனது நாடகங்களில் ஒன்றின் கவிஞர் கதாபாத்திரத்திற்கு 'ஸ்துபேந்திரநாத் பேகோர்' என்று பெயரிட்டார்.

தாகூரின் மகன் ரதீந்திரநாத், 'ஆன் தி ஏஜஸ் ஆஃப் டைம்' இல் பெர்னார்ட் ஷாவுடனான சந்திப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், "ஒரு மாலை வேளையில் நாங்கள் அனைவரும் சின்க்ளேர் நடத்திய விருந்துக்கு அழைக்கப்பட்டோம். அப்பா பெர்னார்ட் ஷாவின் அருகில் அமர்ந்திருந்தார். ஷா மிகவும் அமைதியாக அமர்ந்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாப் பேச்சையும் அப்பாவே செய்ய வேண்டியிருந்தது. அவருடனான அடுத்த சந்திப்பு குயின்ஸ் ஹாலில் இருந்தது. கச்சேரி முடிந்து நாங்கள் கிளம்பும் போது. யாரோ திடீரென்று அப்பாவின் கையைப் பிடித்து, அவர் பக்கம் திரும்பி, "என்னை நினைவிருக்கிறதா? நான் பெர்னார்ட் ஷா,"என்று கூறினார்.

இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு ஷா, தாகூருடன் நட்பை வளர்த்துக்கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர்.

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காந்தி

தாகூரும் காந்தியும் ஒரே தசாப்தத்தில் பிறந்தவர்கள். தாகூர் 1861ஆம் ஆண்டிலும், காந்தி 1869ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

காந்திக்கு 'மகாத்மா' என்று பெயர் வைத்தவர் தாகூர். காந்தி எப்போதும் தாகூரை 'குருதேவ்' என்று அழைத்தார். பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடன் இருந்தனர்.

1921ல் காந்தியின் கிலாபத் உத்தியை தாகூர் கடுமையாகக் கண்டித்திருந்தார். நாட்டில் உள்ள அனைவரும் நூற்பு சக்கரத்தில் நூல் நூற்க ஆரம்பித்தால், ஓராண்டுக்குள் நாட்டில் சுயராஜ்ஜியத்தை நிலைநாட்டுவேன் என்று காந்தி கூறியதையும் தாகூர் கேலி செய்தார்.

ஒருமுறை காந்தி, பிகார் பூகம்பத்தை தீண்டாமை பாவிகளுக்கான தெய்வத்தின் தண்டனை என்று கூறியபோது, தாகூர் ஒரு பொது அறிக்கை வெளியிட்டார். "காந்தி கூறுவதை பெரும்பான்மையான இந்தியர்கள் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் நிலையில் இயற்கை பேரிடரை தெய்வீக அதிருப்தியின் வெளிப்பாடாக அவர் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது," என்று கூறினார்.

காந்தியும் தாகூரும் இருவேறு துருவங்களாக இருந்தனர். அவர்களின் அன்றாட வாழ்க்கைமுறையில் மட்டுமல்ல, அவர்களது சமூக மற்றும் அரசியல் நம்பிக்கைகளிலும் வேறுபாடு இருந்தது. ஆனால் தாகூரின் வார்த்தைகளை பக்தியுடன் கேட்பதை காந்தி நிறுத்தவே இல்லை.

தாகூர் விஸ்வ பாரதி மற்றும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட 'மனிதநேயம்' மற்றும் 'சர்வதேச வாதம்' ஆகியவற்றை நம்பியதால், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வளர்ந்தன.

1937 அக்டோபரில் மருத்துவப் பரிசோதனைக்காக கல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பிரசாந்த் மஹாலனோபிஸின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து சரத் சந்திர போஸின் வீட்டிற்குச் சென்றபோது, காந்தி அவரைச் சந்திக்க காரில் இருந்து இறங்கினார்.

வழியில் காந்தி காரிலேயே மயங்கி விழுந்தார். தாகூர் இந்தச் செய்தியை அறிந்ததும், காந்தியைப் பார்க்க துடித்தார்.

காந்தி ஷரத் சந்திர போஸின் வீட்டின் மேல் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 49 வயதான ஜவஹர்லால் நேரு, 40 வயதான சுபாஷ் போஸ், 48 வயதான ஷரத் மற்றும் 45 வயதான மகாதேவ் தேசாய் ஆகியோர் தாகூரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து காந்தியைச் சந்திக்க அவரைத் தூக்கிச்சென்றனர்.

குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் நீண்ட காலம் நோயுற்றிருந்த பிறகு 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: