இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மூன்று பிரிட்டிஷ் பெண்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    • எழுதியவர், பத்மா மீனாட்சி
    • பதவி, பிபிசி தெலுங்கு சேவை

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 42வது கட்டுரை இது.)

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுடன் கூடவே பல பெண்களும் மும்முரமாக பங்கு பெற்றனர். இந்த பெண்களில், மூன்று பிரிட்டிஷ் பெண்களும் அடங்குவர். அவர்கள் தங்கள் நாட்டின் அரசுக்கு எதிராகச் சென்று இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினர்.

இந்த மூன்று பெண்களில் முதன்மை இடத்தில் இருப்பவர் அன்னி பெசன்ட். அவர் ஒரு நாத்திகவாதியாகவும், சோஷியலிஸ்ட் சித்தாந்தத்தை பின்பற்றுபவருமாக இருந்தார். ஆனால், பின்னர் அவர் ஒரு இறையியலாளராக ஆனார்.

இதற்குப் பிறகு ஆங்கிலேயருக்கு எதிரான இயக்கத்தில் இணைந்த மேட்லைன் ஸ்லேட் (மீரா பென்) மற்றும் கேத்ரின் ஹெல்மேன் (சர்ளா பென்) ஆகியோரின் பெயர்கள் வருகின்றன.

பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா இந்த மூன்று பெண்களைப் பற்றி தனது 'ரிபெல்ஸ் அகெயின்ஸ்ட் ராஜ்' என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

அன்னி பெசன்ட் ஒரு சிறிய பயணமாக இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்தார். ஆனால், இந்த சிறிய பயணம் 40 ஆண்டுகள் நீடிக்கும் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

யார் இந்த அன்னி பெசன்ட்?

ஐரிஷ் நாட்டில் பிறந்த பெண்ணான அன்னி பெசன்ட், மேடம் பிளாவட்ஸ்கியுடன் தொடர்பு கொண்ட பின்னர் இறையியலுக்கு திரும்பினார். இந்து மற்றும் புத்த இலக்கியங்களை மிகவும் கவனமாகப் படித்தார்.

அவர் சைவம் மற்றும் சமயம் பற்றிய விரிவுரைகளை வழங்கினார். இதன் காரணமாக லண்டன் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் வழங்க மறுத்தது. இந்தச் சம்பவம் அவரை இந்தியக் கல்வித் துறையில் நுழையச் செய்தது.

அன்னி பெசன்ட் காஷ்மீர் மற்றும் பனாரஸ் மன்னரின் உதவியுடன் 1904 இல் பனாரஸில் சென்ட்ரல் ஹிந்து கல்லூரி மற்றும் குடியிருப்பு இந்து பெண்கள் பள்ளியை நிறுவினார்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காந்திய ஆய்வு மையத்தின் தலைவரும், நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பால்மோகன் தாஸ், அந்தக் காலத்தின் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்று கூறுகிறார்.

அன்னி பெசன்ட் நவீன கல்வியை பாரம்பரிய இந்திய முறைகளுடன் கலப்பதை வலியுறுத்தினார். அவர் பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக இருந்தார். ஆனால், ஆண்களின் நிலை, பெண்களை விட மேலானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தி மீது வெறுப்பு

அவர் மகாத்மா காந்தியின் மீது வெறுப்பு உணர்வு கொண்டிருந்தார். ஆனால் மகாத்மா காந்தி எப்போதும் அவரை மரியாதையுடன் பார்த்தார் என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கூறுகிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், மகாத்மா காந்தியை அன்னி பெசன்ட் உரையாற்றவிடாமல் தடுத்து நிறுத்தியபோது, இருவருக்கும் இடையிலான இந்த சிறப்பு உறவு அதில் பிரதிபலித்தது.

காந்தி தனது உரையின் போது, பல்கலைக்கழக புரவலர்களை கடுமையாக சாடினார். "இந்த நிகழ்ச்சிக்கு இதுபோன்ற ஆடம்பர உடை அணிய வேண்டிய அவசியம் உள்ளதா? நமது ராஜா மற்றும் பேரரசர் மீது உண்மையான விசுவாசத்தைக் காட்ட நகைப் பெட்டிகளைக் காலி செய்து, தலை முதல் கால் வரை அலங்கரிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? நம்மால் சுயராஜ்யம் பெற முடியாதா?" என்றார்.

அன்னி பெசன்ட் அம்மையார், பிரிட்டிஷ் அரசின் அதிருப்தியை சந்திக்க விரும்பவில்லை. மகாத்மா காந்தியின் பேச்சை அவர் இடையிலேயே நிறுத்தினார். இருப்பினும், மாணவர்கள் மகாத்மா காந்தியிடம் உரையைத் தொடருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதற்குப் பிறகு, தர்பங்கா ராஜா தலையிட்டு காந்தியை உடனடியாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டார்.

அன்னி பெசன்டின் அரசியல் பயணம்

ஆத்திரமூட்டும் வகையில் பேசியதற்காக அன்னி பெசன்ட் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். ஆனால், மக்கள் அவர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 1917 இல் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, அன்னி பெசன்ட் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராக 1917 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"இந்தியா சுதந்திரம் பெறுவதில் உறுதியாக இருப்பதாக அன்னி பெசன்ட் பிரிட்டிஷ் அரசிடம் தெளிவாகக் கூறினார்," என்று பேராசிரியர் பால்மோகன் தாஸ் கூறுகிறார்.

"அவர் சுதேசி இயக்கத்தில் பங்கேற்கவில்லை. இந்து கல்லூரி மாணவர்களை இந்த மக்கள் இயக்கத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவருக்கு இந்து மதத்தின் மீது மிகுந்த பக்தி இருந்தது. கூடவே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீது மிகுந்த அர்ப்பணிப்பு கொண்டிருந்தார். தனது சீடர்களிடையே வெளிப்படையாக பிரிவினை மற்றும் சுதந்திர உணர்வை வளர்க்காமல் இருப்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்" என்கிறார் அவர்.

பெண்களுக்கு வாக்குரிமை

அன்னி பெசன்ட் அம்மையார், இந்தியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு ஆதரவாக இருந்தார். பெண்களின் வாக்குரிமையை ரத்து செய்வது இந்தியாவின் லட்சியங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று இங்கிலாந்தில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு முன்பு அவர் கூறியிருந்தார்.

ஆங்கிலேய பெண்களை ஒப்பிடும்போது இந்திய பெண்களுக்கு வாக்குரிமை அதிக அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார். ஊடகங்கள் அவரது இந்த நிலைப்பாட்டை விமர்சித்தன.

காந்தியின் மீதான அவரது வெறுப்பு தொடர்ந்தது. கிராமக் கமிட்டி முதல் காங்கிரஸ் பிரதிநிதிகள் வரை மற்றும் கதரை பயன்படுத்துவது தொடர்பாகவும் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவரது நிலைப்பாடு காந்திய கொள்கைகளுக்கு எதிரானது.

ஒருமுறை தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, "காந்தி அரசியலில் குழந்தை. தனக்குப் புரியாத உலகில் திரிந்து, அதே உலகில் கனவு காண்கிறார்" என்றார்.

இருப்பினும், காந்தியின் வயது மற்றும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவர் மீது எப்போதும் மரியாதையை வைத்திருந்தார். ஒரு சிறுவன் தன் தாய் முன் வைப்பது போல் என் வேண்டுகோள்களை அவர் முன் வைத்துள்ளேன் என்று ஒருமுறை கூறினார்.

அன்னி பெசன்ட் அம்மையார், 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

"அன்னி பெசன்ட் இந்த நாட்டுக்கு சேவை செய்த விதம், இந்த நாடு இருக்கும் வரை இந்திய வரலாற்றில் குறிப்பிடப்படும். அவரது நினைவுகள் மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும். அவர் இந்த நாட்டை தன்னுடையதாக ஏற்றுக்கொண்டு, அதற்காக தன்னை அர்ப்பணித்தார்," என்று அவரது மரணம் குறித்து மகாத்மா காந்தி எழுதினார்.

மீரா பென் என்ற மேட்லைன் ஸ்லேட்

இங்கிலாந்தில் ஒரு உயர்குடி குடும்பத்தில் பிறந்த மேட்லைன் ஸ்லேட், குதிரை சவாரி மற்றும் பீத்தோவனின் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் தனது குடும்பத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு இந்தியாவை தனது வீடாக மாற்றிக்கொண்டார். காந்தி அவரை தனது மகளாக ஏற்றுக்கொண்டு அவரது பெயரை மீரா பென் என்று மாற்றினார்.

மீரா பென் மகாத்மா காந்தியைப் பற்றி பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்டிடம் இருந்து தெரிந்து கொண்டார். இதற்குப் பிறகு அவர் காந்தியக் கொள்கைகள் மற்றும் இந்தியா தொடர்பான இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார்.

இந்தியா வர முடிவு செய்த தருணத்தில் அசைவ உணவு சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் நிறுத்தினார். தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து ஹிந்தி கற்க ஆரம்பித்தார்.

இந்தியா வர விருப்பம் தெரிவித்து காந்திக்கு கடிதம் எழுதிய அவர், 20 பவுண்ட் காசோலையையும் அனுப்பினார். ஆனால், காந்தி அவரை உடனடியாக இந்தியா வருமாறு அழைக்கவில்லை.

காந்தி அந்த கடிதத்திற்கு பதிலளித்து, "இன்னும் ஒரு ஆண்டு கழித்தும், நீங்கள் இந்தியாவுக்கு வர விரும்பினால், நீங்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அதுவே சரியான நேரம்" என்று எழுதினார்.

இதன் பிறகு மீரா பென் 1925 ஆம் ஆண்டு தனது 33 வயதில் இந்தியா வந்தார்.

"ஒரு நாளில் 3-4 கடிதங்கள் எழுதுவார்"

மகாத்மா காந்தி பயணம் தொடர்பாக வெளியில் செல்லும்போது, அவரது பிரிவு மீரா பென்னை வருத்தியது. அவர் ஒரு நாளைக்கு 3-4 முறை மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதுவார். அவர் காந்தியின் புத்தகங்களுக்கு,"பிழை சரிபார்ப்பு" செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் புடவை உடுத்த ஆரம்பித்தவுடன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதாக சபதம் செய்து தலையை மழித்துக்கொண்டார்.

ஆனால், அவர் நாற்பது வயதை எட்டியபோது, ஆசிரமத்திற்கு வந்திருந்த புரட்சியாளர் பிருத்வி சிங்கின் பால் ஈர்க்கப்பட்டார்.

மீரா பென் விரும்பினால் பிருத்வி சிங்கைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று காந்தி கூறினார். ஆனால், மீரா பென் அதற்கு மறுத்துவிட்டார்.

மகாத்மா காந்தியின் உடல்நிலையை கவனித்துக்கொண்ட மீரா பென் அவருக்கு பழங்கள் மற்றும் ஆட்டுப்பால் கொடுப்பதோடு கூடவே அவரது ரத்த அழுத்தத்தையும் பரிசோதித்து வந்தார். இதனுடன் அவரது ராட்டையையும் கவனித்துக் கொண்டார்.

"அவர் ஒரு கணம் கூட காந்தியை தனியாக விடமாட்டார். அவர் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவார். இருவருக்கும் இடையே ஒரு வகையான தன்னலமற்ற உறவு இருந்தது," என்று பால்மோகன் தாஸ் கூறுகிறார்.

மீராபென் தன் மீது காட்டும் உரிமையுள்ள நடத்தையைப் பார்த்த காந்தி, காதியின் விளம்பரத்திற்காக அவரை நாடு முழுவதும் பயணம் செய்ய அனுப்பினார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது மீரா பென் சிறைக்குச் சென்றார்.

காந்தியின் வாதங்கள், சித்தாந்தத்தின் அடிப்படையிலானவை அல்ல, தர்க்கத்தின் அடிப்படையிலானவை என்று நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் மீரா பென் கூறியிருந்தார். "அவர் மகாத்மா கிடையாது" என்றும் அவர் கூறினார்.

திருமணமான தம்பதிகள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது குறித்தும், அவருக்கும் காந்திக்கும் இடையே நிறைய விவாதங்கள் நடந்தன.

திருமணமான தம்பதிகள் கூட ஆசிரமத்தில் வசிக்கும் போது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது காந்தியின் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களில் ஒன்றாகும். இருப்பினும் குழந்தைகளைப் பெற அனுமதி இருந்தது. மகாத்மா காந்தி பல ஆண்டுகளாக அதைப் பின்பற்றி வந்தார்.

ஊழல் அதிகரிப்பதாக நேருவுக்கு கடிதம்

ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, காந்தியைப் பின்தொடர்வதை ஆங்கிலேயர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரால் இந்தியாவில் இருக்க முடியவில்லை. நேருவுக்கும் கடிதம் எழுதி, இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல் பற்றிக்குறிப்பிட்டார். 1959 இல் அவர் வியன்னாவுக்கு குடிபெயர்ந்தார்.

இந்திய அரசு இவருக்கு 1982 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. அதே ஆண்டில் அவர் காலமானார்.

அகில இந்திய வானொலியின் முன்னாள் நிலைய இயக்குநர் நாகாசூரி வேணுகோபால், அவரை இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் பெண்ணியவாதி என்று விவரிக்கிறார்.

கேத்ரின் மேரி ஹெல்மேன் என்ற சர்ளா பென்

"மனித நேயத்திற்கு நிறம், இனம் மற்றும் அரசியல் இல்லை. சரியான காரணத்திற்காக போராடுபவர்களை அரசு தண்டிக்க நினைத்தால், என்னால் எதுவும் சொல்ல முடியாது. கடினமான காலங்களில் போராட்டம் நடத்துபவர்களும் பின்விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். என்னைச் சுற்றியுள்ள மக்கள் நோயினாலும் வறுமையினாலும் அவதிப்படும்போது, என்னால் ஆசிரமத்தில் உட்கார முடியாது. பிரிட்டிஷ் அரசு சொல்வதைக் கேட்பதை விட நான் என் மனசாட்சியைத்தான் கேட்பேன்," என்று சர்ளா பென் ஒருமுறை சொன்னார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு உதவியபோது அந்த ஆங்கிலேயப் பெண்மணி இந்த அறிக்கையை அரசுக்கு எதிராக விடுத்தார்.

இந்தப் பெண்மணி, கேத்ரின் மேரி ஹெல்மேன். அவர் சர்ளா பென் என்று அழைக்கப்பட்டார். கேத்தரின் 1901 இல் லண்டனில் பிறந்தார், அவர் வரலாறு, புவியியல், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகியவற்றைப் படித்தார்.

பிரிட்டனில் பணிபுரியும் இந்திய அதிகாரி மோகன் சிங் மேத்தாவிடம் இருந்து காந்தியைப் பற்றி கேள்விப்பட்ட சர்ளா பென் அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார். அவரும் இந்தியாவை தனது தாயகமாக்கிக்கொண்டார். காந்தியையும் அவரது கொள்கைகளையும் புரிந்து கொண்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து, வார்தா ஆசிரமத்தை அடைந்தார். அங்கு அவர் ஆச்சார்ய வினோபா பாவேயை சந்தித்தார்.

அவர் இந்தி மொழியைக் கற்று 1941 ஆம் ஆண்டு சனோதா ஆசிரமத்தை அடைந்தார். கதர் நெசவு செய்யக் கற்றுக்கொண்ட பிறகு, அவர் மலைகளில் வாழ முடிவு செய்தார்.

காந்தி 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில், காங்கிரஸுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்தது.

சர்ளா பென் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உதவி செய்தார். உணவுடன், மருந்து மற்றும் செய்திகளை வழங்குதல் மற்றும் சட்ட ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளையும் செய்து வந்தார்.

ஆனால், அவர் ஆங்கிலேய பெண்மணி என்பதால், பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்யவில்லை. ஆனால், அரசு அவரை கண்காணித்து வந்தது. மேலும் அரசின் உத்தரவை ஏற்காததால் அவரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தனது முழு ஆற்றலையும் கிராமப்புற பெண்களின் நலனுக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் அவர் அர்ப்பணித்ததாக வேணுகோபால் கூறுகிறார். பாலின பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் திசையிலும், விநோபா பாவேயின் 'பூமிதான இயக்கத்திலும்' அவர் பங்கேற்றார்.

சுந்தர்லால் பகுகுணா, விமலா பகுகுணா, ராதா பட் போன்றவர்களுக்கு உதவி செய்த சர்ளா பென், அவர்களை சமூக சேவகர்களாக ஆக்கினார்" என்கிறார் வேணுகோபால்.

"இந்த உலகத்திற்கு சுற்றுச்சூழலைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருந்தபோது, காந்தியும் குமாரப்பாவும் அதை முன்மொழிந்தனர். சர்ளாவும் மீனா பென்னும் இந்த லட்சியங்களைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி உலகுக்குக் காட்டினார்கள்" என்று அவர் கூறுகிறார்.

சர்ளா பென் 1982 ஜூலை 6ஆம் தேதி இயற்கை எய்தினார்.

எழுத்தாளர் பி. கொண்டலா ராவ் தனது, ' ஃபாரின் ப்ரெண்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் ஃப்ரீடம்' என்ற புத்தகத்தில், "தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராட வேண்டிய பொறுப்பு இந்தியர்களுக்கு இருந்தது. ஆனால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மக்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் உழைத்த பல வெளிநாட்டவர்கள் உள்ளனர். இந்திய மக்கள் அவர்கள் மீது நன்றியுடன் இருக்கவேண்டும்,"என்று எழுதியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: