அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை கொல்லும் காளான்கள் - என்ன நடக்கிறது?

    • எழுதியவர், திலீப் ஷர்மா மற்றும் சோயா மாதீன்
    • பதவி, அசாம், டெல்லி

2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ஆம் தேதி, அஞ்சலி காரியா தனது மகளுடன் இரவு உணவை உண்ண உட்காரும்போது, அதுதான் அவளுடன் உண்ண போகும் கடைசி உணவை என அவருக்கு தெரியவில்லை.

அசாம் மாநிலத்தின் சபதோலி கிராமத்தில் நீண்ட நேர வேலைக்கு பிறகு, மலைகளில் உள்ள வளைவுகளை கடந்து, தனது வீட்டிற்கு சென்றார். பின், சாப்பிட்டு, உறங்கி விட்டார்.

அன்று அதிகாலை மூன்று மணிக்கு, தனது ஆறு வயது மகள் சுஷ்மிதா வாந்தி எடுக்கும் சத்தத்தில் எழுந்தார். பிறகு, சுஷ்மிதாவுக்கு குமட்டலும், நடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

இரவு முழுவதும் இதே நிலை தொடர, காரியா மிகவும் கவலை அடைந்தார். அவரது மகனும், மாமனாருக்கும் சில மணி நேரங்கள் கழித்து வாந்தி ஏற்பட, அஞ்சலி மிகவும் பதட்டமடைந்தார்.

"அனைவரும் ஒரே சமயத்தில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தனர்," என்கிறார் 37 வயதான காரியா. "அதன் பிறகு அவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது."

அந்த இரவு, அவரது அக்கப்பக்கத்தினருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருப்பது அவருக்கு தெரியவந்தது. "அது ஒரு கெட்ட கனவு போல் இருந்தது. எல்லோரும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஏன் என்று தெரியவில்லை," என்கிறார்.

அந்த கிராமம் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்ததுள்ளது. அங்கு மறு நாள் காலை விடிந்ததும், காரியா தனது மகளை அருகிலுள்ள மருந்தகத்திற்கு விரைந்தார். அங்கு அவரது மகளுக்கு உப்பு தண்ணீரும், மருத்தும் அளிக்கப்பட்டது.

மற்ற நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஒரு ஆம்புலன்ஸை அழைத்தனர். அஞ்சலி தான் கடைசியாக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்து, மகனையும், மாமனாரையும் அனுப்பி வைத்தார்.

"நான் என் மகளை அப்போது அனுப்பவில்லை. அவளது உடல்நிலை சற்று நன்றாக இருந்தது. அவள் விரைவில் குணமடைவாள் என்று நினைத்தேன்," என்கிறார் அஞ்சலி.

ஆனால், 24 மணி நேரத்திற்குள், அவரது மகள் மீண்டும் வாந்தி எடுத்தாள். இம்முறை, மருத்துவமனைக்கு செல்ல காரியாவிடம் பணம் இல்லை. சில மணி நேரங்கள் கழித்து, சுஷ்மிதா அவரது கரங்களிலேயே உயிரிழந்தார்.

நோய்வாய்ப்பட்ட அனைவரும் அன்று காடுகளில் இருக்கும் காளான்களை சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று பின்னரே தெரிந்தது. அருகிலுள்ள காட்டில் இருந்து அஞ்சலியின் மாமனார் பறிந்துக் கொடுத்திருக்கிறார். சுஷ்மிதாவை தவிர, இந்த காளான் விஷத்தால் இருவர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் உறுதி செய்துள்ளன. மொத்தம் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது நடந்து ஒரு மாத கடந்துள்ளது. ஆனால், அந்த கிராமம் இந்த பெருந்துயரத்தில் இருந்து மீளவில்லை.

"நான் அந்த இரவை ஒருபோதும் மறக்கமாட்டேன். யாரும் பிழைக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்," என்கிறார் 36 வயதான நேஹா லாமா. அவரும் மாமனாரும் மாமியாரும் இதனால் உயிரிழந்துள்ளனர். அவரும் அவரது மகனும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் பல நாட்கள் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்துள்ளனர்.

"நாங்கள் பல ஆண்டுகளாக காளான்களை பறித்து, சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அது விஷத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று எங்களுக்கு எப்படி தெரியும்?" என்று அவர் கேட்கிறார்.

அசாமிலும் அதற்கு அருகிலுள்ள வட கிழக்கு மாநிலங்களிலும், காளான் விஷம் குறித்து தொடர்ந்து செய்திகளில் அடிப்படுகின்றன. அங்கு உள்ளூர்வாசிகள் காளான்களையும், காட்டில் விளையும் பெர்ரி வகை பழங்களையும் தேடி பறித்து, பல உணவு வகைகளில் பயன்படுத்துவார்கள். சில இடங்களில், காட்டில் விளையும் காளான்களை சுவையானவையாகவும் கருதுவார்கள். அவர் சூப் வகைகளுடனும், சமைத்த காய்கறிகளுடனும் சேர்க்கப்படுக்கின்றன.

இதுப்போன்ற மரணங்கள் குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழக்கமாக அசாமில் நடக்கின்றன. அம்மாநிலத்தின் பிரபல தேயிலை தோட்டங்களில் அப்போதுதான் நூற்றுக்கணக்கான காளான்கள் விளையும். இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலும், அந்த எஸ்டேட்களில் பணியாற்றும் ஏழை தொழிலாளர்களே.

இந்த இறப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ பதிவுகள் இல்லை. ஆனால், ஏப்ரல் மாதம் 16 பேர் இறந்ததாகவும், அவர்களூள் பெரும்பாலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அம்மாநிலத்தில் உள்ள இரண்டு சுகாதார அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

2008 ஆம் ஆண்டு, விஷத்தன்மைக்கொண்ட காளான்களை சாப்பிட்டு 20 பேர் உயிரிழந்தனர். இதுவரை நடந்த இறப்பு எண்ணிக்கையில் இது அதிகம். அதன் பிறகு, இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில அரசு ஒரு குழு அமைத்தது. அப்போதும், பாதிக்கப்பட்டவர்களூள் பெரும்பாலானவர்கள் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் என்று கூறுகிறார் அசாம் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி திலீப் குமார் சர்மா. அவரும் இந்த குழுவின் உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

"தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காளான் வகைகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு ஒரு முக்கியக் காரணம். எந்த வகையான காளான்கள் அரிதானவை, சுவையானவை, நச்சுத்தன்மை கொண்டவை என்று அவர்களுக்குத் தெரியாது," என்கிறார் டாக்டர் சர்மா. மேலும், தொழிலாளர்களைப் பாதுகாப்பது தோட்ட உரிமையாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

"இதற்கு முன், இதுபோன்ற நுகர்வுக்கு எதிராக அரசு நாளிதழ்களில் ஆலோசனைகளை வெளியிட்டது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதால், இத்தகைய செய்திகள் அவர்களுக்கு சென்றடையவில்லை," என்கிறார்.

இது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்கின்றனர் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலைகளின் தாயகமாக இருப்பது அசாமின் வளமான மலைகள்தான். இந்த பரந்து விரிந்த தோட்டங்கள் சில, பெரிய இந்தியா மற்றும் பன்நாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. அவர்கள் இங்கு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஆடம்பர தங்குமிடங்களும் உள்ளன.

ஆனால், தொழிலாளர்களின் வாழும் சூழல் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

சபதோலியிலுள்ள பல தேயிலை தொழிலாளர் குடும்பங்களுடன் பிபிசி பேசியது. அவர்கள் தாங்கள் கசியும் தகர கூரைகள், மோசமான சுகாதாரம் கொண்ட மூங்கில் குடிசைகளில் வசிப்பதாக கூறுகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் கூலி மிகவும்சொர்ப்பமாக இருப்பதால், அவர்களது குடும்பங்கள் அடிக்கடி பட்டினியில் வாடுகின்றன. மேலும் சமீபகாலமாக காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

"அதனால்தான் நாங்கள் எது கிடைத்தாலும், அதனை பறித்து உண்கிறோம்," என்கிறார் காரியா. ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர். அவர் ஒரு நாளைக்கு 130 ரூபாய் சம்பாதிக்கிறார்.

"எனது மகள் இறந்த பிறகு, எங்களை அரசு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் விஷத்தன்மை கொண்ட காளான்களை சாப்பிட வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். எங்களுக்கு எல்லாமே மிகவும் விலை உயர்ந்தது. கிடைத்ததைக் கொண்டு நாங்கள் வாழ வேண்டும்," என்கிறார் அவர்.

"மக்கள் நலத்திட்டங்கள் மூலம் விலைவாசி உயர்வு பிரச்னையை சமாளிக்க முயற்சி செய்ததாக மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். "பொது விநியோக முறையின் கீழ் அவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்," என்று திப்ருகர் துணை ஆணையர் பிஸ்வஜித் பெகு கூறுகிறார்.

ஆனால், தங்களுக்கு எந்த விதமான உணவுத்தானியங்களும் இலவசமாக கிடைக்கவில்லை என்று கூறி, காரியா இதை மறுக்கிறார். "சில நாட்களில் சாப்பிட எங்களுக்கு எதுவும் இருக்காது. ஆனால், யாரும் உதவிக்கும் வரமாட்டார்கள்," என்கிறார் அவர்.

அமானிதா ஃபாலோயிட்ஸ் அல்லது "டெத் கேப்" (Death Cap) எனப்படும் நச்சுத்தன்மைக்கொண்ட மந்தமான பச்சை அல்லது வெள்ளை காளான்களை - உள்ளூர்வாசிகள் சாப்பிடும்போது மிகவும் கடுமையான நோய்கள் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அவை அதன் சுவைக்காகவும் அறியப்படுகிறது.

குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஆகியவை அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்.

"பல நேரங்களில், நோயாளிகள் நோய்வாய்ப்பட்ட பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு வருவதில்லை. இது சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற பெரிய உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது என்று அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (Assam Medical College and Hospital) கண்காணிப்பாளர் பிரசாந்த் டிஹிங்கியா கூறுகிறார். "அவர்கள் சிகிச்சை பெறும் நேரத்தில், அது மிகவும் தாமதமான நிலையை அடைந்திருக்கும்.".

"எந்த காளான்கள் நச்சுத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி", என்று அவர் மேலும் கூறுகிறார். "அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பாரம்பரிய உணவை உண்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் நீங்கள் அவர்களுக்கு பாதுகாப்பான நடைமுறைகளை கற்பிக்கலாம்."

மேலும், பெகு கூறுகையில், "ஒவ்வொரு நபரையும் சென்று சந்திப்பது சாத்தியமில்லை என்றாலும், உண்ணக்கூடிய காளான்களிலிருந்து நச்சுத்தன்மையுள்ள காளான்களை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை மக்களுக்குக் கற்பிக்க அதிகாரிகள் அடிமட்ட அளவில் விழுப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். "எங்கள் சுகாதார தன்னார்வலர்கள் தொடர்ந்து கிராமங்களுக்குச் செல்கிறார்கள். நாங்கள் பிரச்னையை தீவிரமாக கருதுகிறோம்.

ஆனால், சப்தோலி மக்கள் இதை நம்ப தயாராக இல்லை."நாங்கள் தனியாகவே இதை எதிர்கொள்கிறோம். . எங்களில் ஒருவர் இறந்தால் மட்டுமே அதிகாரிகள் வருகிறார்கள்," என்று கவலையுடன் கூறுகிறார் காரியா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: