பேரறிவாளன் விடுதலை: ஒரு நீண்ட போராட்டத்தின் கதை

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்கு பேட்டரி வாங்கித்தந்ததாகக் கூறப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் (முன்பு வேலூர் மாவட்டம்) ஜோலார்பேட்டையில் 1971 ஜூலை 30ஆம் தேதி அற்புதம் அம்மாளுக்கும் குயில்தாசனுக்கும் (ஞானசேகரன்) பிறந்தார் பேரறிவாளன்.
பள்ளிக்கூடத்தில் பேரறிவாளன் சிறப்பாகவே படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளிக்கூடத்திலேயே இரண்டாவது அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவராக இருந்தார் பேரறிவாளன். பத்தாம் வகுப்பை முடித்த பிறகு, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் படிப்பில் பட்டயப் படிப்பில் (DECE) சேர்ந்த பேரறிவாளன், அதனை முடித்தார். இயல்பிலேயே பெரியாரிய சார்பை பெற்றிருந்த அவர், பட்டயப் படிப்பை முடித்த பிறகு, சென்னை பெரியார் திடலில் உள்ள விடுதலை நாளிதழ் அலுவலகத்தின் கணினிப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில்தான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரியால் 1991 மே 21ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு கொலைசெய்யப்பட்டார்.
இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்தபோது, 1991 ஜூன் 11ஆம் தேதி இரவு பத்தரை மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். ராஜீவ்காந்தி கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை இயக்குவதற்கான 9 வால்ட் திறமுள்ள இரண்டு கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கித் தந்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.
அந்தத் தருணத்தில் பேரறிவாளனுக்கு வயது 19. கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 'மல்லிகை' என்ற கட்டடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மல்லிகையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன், அங்கு கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக தனது "தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்" நூலில் குறிப்பிடுகிறார். இங்கு நடந்த சித்ரவதை தாங்காமலேயே, விசாரணை அதிகாரிகள் அளித்த காகிதங்களில் தான் கையெழுத்திட்டதாகவும் கூறுகிறார் பேரறிவாளன்.
பல ஆண்டுகள் நடந்த விசாரணையின் முடிவில், 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டிருந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தண்டிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
அதில், 1999 மே 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், Twitter
இது பேரறிவாளனுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால், பலரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் மேல் முறையீடு செய்தனர். ஆனால், இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதே ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தூக்குக் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.
அப்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியது.
2000வது ஆண்டு ஏப்ரலில் இந்த விவகாரம் குறித்து மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்கள் மீது எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஆனால், குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் வந்த பிறகு, இந்த கருணை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. முடிவில், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக 2011 ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தார்.
இருந்தபோதும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரியிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பட மூலாதாரம், Twitter
2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக கூறியது.
இதற்கு அடுத்த நாளே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள அனைவரும் விடுவிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.
ஆனால், தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெற்ற மத்திய அரசு, சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என தீர்ப்பளித்தது. ஆனால், 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது.
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், ஆளுநர் ஏதும் தெரிவிக்காததால், இவர்கள் விடுவிக்கப்படவில்லை.
2021ல் தி.மு.க. அரசு பதவியேற்றதும் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதற்கிடையில், தன்னுடைய விடுதலை தாமதமாவதை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் பேரறிவாளன். அந்த வழக்கில்தான் தற்போது அவரை விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்த காலகட்டத்தில் கணினியில் ஆறு மாதப் படிப்பு, ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு, இரு சக்கர ஊர்தி, வானொலி - தொலைக்காட்சி தொழில்நுட்பம், பிசிஏ போன்ற படிப்புகளை முடித்திருக்கிறார் பேரறிவாளன். சிறையில் இருந்த காலகட்டத்தில், நன்னடத்தையோடு நடந்துகொள்ளவும் செய்தார்.
பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்ற சி.பி.ஐயின் முன்னாள் அதிகாரி தியாகராஜன், ஓய்வுபெற்ற பின்னர் ஒரு ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில், அவரது வாக்கு மூலம் தவறாகப் பதிவுசெய்யப்பட்டது என்று கூறினார்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் விடுவிக்க தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும், சட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாகப் போராடினார் பேரறிவாளன். இந்தப் போராட்டத்தின் பெரும்பகுதி, அவருடைய தாயார் அற்புதம்மாளால் நடத்தப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








