You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு என்பது 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வில் கண்டறியப்பட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், 'இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து தொடங்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்து உலகுக்கு அறிவிக்கும் வகையில், தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளை மாமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள். கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட பூம்புகார், கொற்கை உள்ளிட்ட சங்ககால துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த ரோமானிய நாணயங்கள், மெருகூட்டப்பட்ட மண் பாண்டங்கள், அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த அயலக பொருள்களை முன்னிறுத்தி, கடல் வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பதை நம்மால் நிரூபிக்க முடிந்தது.
அதேபோல், அங்கு கிடைத்த ஒளிர்மிகு நீலமணிகள் ஆகியவற்றைக் கொண்டு கங்கைச் சமவெளி மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளுடன் தமிழர்கள் உள்நாட்டு வணிகம் மேற்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது' என்றார்.
கீழடி அகழாய்வு
தொடர்ந்து கீழடி அகழாய்வு குறித்துப் பேசிய முதல்வர், ' கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம், தொல்பொருள்களின் செய்நேர்த்தி, பொறியியல் நுணுக்கம் ஆகியவற்றை ஆராய்ந்ததில் சங்ககால தமிழகத்தில் நன்கு முதிர்ச்சியடைந்த நகர பண்பாடு செழித்து வளர்ந்ததை உலகுக்கு அறிவிக்க முடிந்தது.
கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழி எழுத்துகளின் காலம் என்பது கி.மு ஆறாம் நூற்றாண்டு என அறிவியல் அடிப்படையில் கண்டறியப்பட்டது. அதாவது, 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே பரவலாக எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்தது என்பது நமக்குப் பெருமையளிக்கக் கூடிய ஒன்றாகும்.
மேலும், கடந்த ஆண்டு சிவகளை பகுதியில் கிடைத்த நெல்மணிகளை அகழாய்வு செய்தபோது பொருநை நாகரிகம் என்பது 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறியப்பட்டது. அகழாய்வைப் பொறுத்தவரையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தொல்லியல் துறை பயன்படுத்தி வருகிறது.
அதேபோல் அகழாய்வில் கிடைத்த பொருள்களை தொல் தாவிரவியல், தொல் விலங்கியல், தொல் மரபணு ஆய்வு, சூழல் தொல்லியல், மண் பகுப்பாய்வு, கடல் சார் ஆய்வு எனப் பல்துறை வல்லுநர்கள் இணைந்து பணியாற்றும் வகையில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது'' என்றார்.
நெல் சாகுபடி
'' கீழடியில் உள்ள அகரத்தில் நடந்த ஆய்வில் நெல் பயிர் செய்யப்பட்டிருப்பதும் தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டதும் ஆய்வு முடிவும் தெரியவந்துள்ளது'' எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையில் நடைபெற்ற அகழாய்வை விவரித்தார்.
மேலும், '' கடந்த ஆண்டு தொல்லியல் துறையால் மயிலாடுபாறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிய கற்கால கருவிகள், ஓவியங்கள் கண்டறியப்பட்டன. அங்கு 104 செ.மீ, 130 செ.மீ ஆழங்களில் கிடைத்த கரிம மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றின் காலம் என்பது கி.மு 1015 எனக் காலக்கெடு செய்யப்பட்டுள்ளது.
4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு
அங்கு இரும்பின் பயன்பாடு 4,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்ததும் கண்டறியப்பட்டது. இரும்பின் பயனை கண்டறிந்த பின்னர்தான் வேளாண்மை செய்யும் போக்கு தொடங்கியுள்ளது. இந்தியாவின் இரும்புப் பயன்பாடு குறித்து கங்கை சமவெளி உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கிட்ட ஆய்வுகளைப் பார்க்கும்போது மயிலாடும்பாறையில் கிடைத்த 4,200 ஆண்டுகள் என்பவை காலத்தால் முற்பட்டவை என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கக் கூடிய விஷயமாகும்'' என்றார்.
'' அதேபோன்று கருப்பு, சிவப்பு பானை வகைகள் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தலைசிறந்த வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர். தொல்லியல் துறையின் முயற்சிகள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. இந்த ஆண்டு கேரளாவின் பட்டணம், கர்நாடகவின் தலைக்காடு, ஆந்திராவின் வேங்கி, ஒரிஷாவின் பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழ் நிரப்பில் இருந்து இந்தியாவின் வரலாறு
அதேபோல், சங்ககால துறைமுகமான கொற்கையில் முன்கள ஆய்வு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் சிந்துசமவெளி எழுத்துக்களுமான உறவை ஒப்பீடு செய்து ஆய்வு செய்யும் பணிகளை இந்த ஆண்டு முதல் தொல்லியல் துறை மேற்கொள்ளப்படும். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படும் என சான்றுகளின் அடிப்படையில் நிறுவுவது என்பது அரசின் தலையாய கடமை'' என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்