You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: மேலும் 4 பேர் கைது
சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலிலேயே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை சிபிசிஐடி கைதுசெய்துள்ளது.
ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் குமார், ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் என நான்கு பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை செய்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
13 இடங்களில் கடுமையான காயம்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக முன்தினம், விக்னேஷின் உடலுக்குச் செய்யப்பட்ட உடற்கூறு ஆய்வின் அறிக்கை ஊடகங்களில் வெளியானது. அதில் அவரது உடலில் 13 இடங்களில் கடுமையான காயம் இருப்பது பதிவுசெய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி எழுப்பினார். விக்னேஷின் மரணத்தில் மிகப் பெரிய சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொல்லப்பட்ட இளைஞர் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் எழுத்தரான முனாஃப், முதல் நிலைக் காவலரான பவுன்ராஜ் ஆகியோர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்குத் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்கள்
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் வழிமறிக்கப்பட்டு தலைமைச் செயலக காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இதற்குப் பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார். இந்த நிகழ்வில், விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்த விவகாரம் குறித்து காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, விக்னேஷின் உறவினர்கள், இந்த நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்களை வெளியிட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த விக்னேஷின் உடற்கூறாய்வு அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அடித்ததால் தலையில் ஏற்பட்ட காயம், இடது கண்ணிற்கு மேல் காயம், இடது கண்ணத்தில் காயம், வீக்கம், வலது கையின் முன் புறமும் பின் புறமும் பலத்த காயம், இடது தோள்பட்டையில் வீக்கம், இடது தோள்பட்டையில் காயம், பின்புறத்தில் பெரிய அளவில் தோல் உரிந்திருந்தது உள்ளிட்ட காயங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இது தவிர, வலது தொடையில் பெரிய அளவில் வீக்கம் இருந்தது. அதனை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது, எலும்பு உடைந்திருப்பது தெரியவந்தது. இடது காலிலும் கடுமையாக அடிபட்டிருந்தோடு, வீக்கமும் தோல் சிவந்தும் காணப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்