பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு: முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு

பட மூலாதாரம், ANI
சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவொன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக வெளியிட்ட சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் ஆளுநர் ரவி, தமது வரம்பை மீறி பொதுவெளியில் அரசியல்வாதி போல கருத்துக்களை வெளியிடுவதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
என்ன பேசினார் ஆளுநர்?
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய The Lurking Hydra: South Asia's Terror Travail" என்ற புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக நாட்டில் வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் தான். அவர்களின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
தீவிரவாதத்தை ஒழித்த மோதி அரசு

மேலும் அவர், முந்தைய காலங்களில் கடும்போக்காளர்கள் மக்களை கொல்வார்கள். பிறகு பேச்சுவார்த்தை நடத்த அரசிடம் நேரம் கேட்பார்கள், அரசும் பேச்சுவார்த்தை நடத்தும். அத்தகைய ஒரு காலத்தில்தான் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. ஆனால், மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி 2014ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த பிறகு இந்த விஷயத்தில் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
அதன் காரணமாக தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காஷ்மீருக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
'இந்த புத்தக்கம் ஒரு முக்கியமான ஆவணம். தீவிரவாதத்திற்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது. ஜெனரல் மித்ரன் ஒரு புத்திசாலி மட்டும் இல்லை, அவர் ஒரு நல்ல ராணுவ வீரரும் கூட. ஒரு பிரச்னையின் ஆழத்தை நுணுக்கமாக ஆராய்ந்தவர். இந்திய ராணுவத்துக்கு தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பல அனுபவங்கள் உள்ளன. அந்த வகையில் இந்த புத்தகத்துக்காக லெப்டிணன்ட் ஜெனரல் மித்ராவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,' என்று ஆளுநர் ரவி கூறினார்.
ஆளுநர் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Indian Army
"இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பர்மாவின் (இப்போது மியான்மர்) புரட்சிகர கம்யூனிசத்தின் (சீன செல்வாக்கு) பரவலைக் கட்டுப்படுத்த, மேற்கத்திய சக்திகள் ஒரு கிறிஸ்தவ பிரதேசத்தை உருவாக்க விரும்பின. மேற்கு முன்னரங்கில் (ஆப்கானிஸ்தான்), ரஷ்ய கம்யூனிசத்தை எதிர்கொள்ள அவர்கள் தீவிர இஸ்லாத்துடன் அதையே முயற்சித்தனர்," என்றார் ஆர்.என். ரவி.
இந்தியாவில் பயங்கரவாதம் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டு, உறுதுணையாக இருந்தது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். பல நாடுகள் இந்த கொடூர விளையாட்டை இந்தியா மீது விளையாடின, என்றும் ஆர்.என். ரவி கூறினார்.
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்அந்த அமைப்பினர் மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் பல முகமூடிகளை அணிந்து கொண்டு இந்தியாவில் இயங்கி வருகிறார்கள். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளுக்கு தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் அது உள்ளது என்று ஆளுநர் குற்றச்சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண், தெற்கு பிராந்திய தளபதி ஆக பணியாற்றுகிறார், லெப்டினன்ட் ஜெனரல் (லேட்) சுப்ரோதோ மித்ரா சென்னையில் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வறிக்கை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை சமர்ப்பித்துள்ளார். இருப்பினும், அவர் தனது வேலையை முழுமைப்படுத்தும் முன்பே இறந்துவிட்டார். அவருடைய அந்த ஆய்வுதான் ஒன்றாக இணைக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்றார் லெப்டினன்ட் ஜெனரல் அருண்.
"சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக, மரணத்திற்குப் பின் முனைவர் பட்டம் மறைந்த சுப்ரோதோ மித்ராவுக்கு வழங்கப்படுகிறது. அவரது புத்தகம் தெற்காசிய சூழலில் பயங்கரவாதம் மற்றும் அதன் தர்க்கரீதியான முடிவுக்கான பாதையைக் காட்டுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மறைந்த லெப்டினன்ட் ஜெனரலின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
திருமாவளவன் கருத்து
தீவிரவாத அமைப்பு என்றும் ஐஎஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆள்பிடித்து தருகிற அமைப்பு என்பது போல பாப்புலர் ஃபின்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பற்றி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்வர்கள் பேசுவதை போல மாநில ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள். வன்முறைக்கு வித்திடுகிறார்கள். மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த பேச்சு ஒரு சான்றாக இருக்கிறது. ஜனநாயக சக்திகள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












