You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவண்ணாமலை சிறையில் இறந்த பழங்குடி மலைக்குறவர் இனத்தை சேர்ந்த தங்கமணி உடலில் எலும்பு முறிவு, காயம்: உடற்கூராய்வு
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டாரணை கிராமத்தை சேர்ந்த பழங்குடி மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த கே.தங்கமணி என்பவர் சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது இறப்புக்கான காரணங்கள் உடல்கூராய்வில் விவரிக்கப்பட்டுள்ளது.
தங்கமணியின் சந்தேக மரணத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் அவரது உறவினர்களும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது போலீசார் அடித்ததால்தான் தங்கமணி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்தப் புகார்களை போலீசார் மறுக்கின்றனர். இந்த நிலையில், அவரது உடல்கூராய்வு விவரங்கள் பிபிசி தமிழுக்கு கிடைத்துள்ளன.
விலா எலும்பில் முறிவு
அந்த அறிக்கையில் தங்கமணியின் உடலின் இடது புற அக்குளுக்கு கீழே 3-வது மற்றும் 4-வது விலா எலும்புகளில் முழுமையடையாத எலும்பு முறிவு (Irregular, linear incomplete fracture) காணப்பட்டதாக குறிப்பு உள்ளது. அது, அவருக்கு மூச்சை மீண்டும் கொண்டுவருவதற்காக நெஞ்சப் பகுதியில் அழுத்தியதால் ஏற்பட்டதாக இருக்குமோ என்ற கேள்விக்குறியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத ஒரு தடயவியல் பேராசிரியர், ரெசசிடேஷன் என்னும் மீள உயிர்ப்பித்தல் சிகிச்சைக்காக நெஞ்சக்கூட்டை அழுத்தும்போது எலும்பு முறிந்தால் நெஞ்சின் மையப் பகுதியில்தான் முறிவு ஏற்படும். அவருக்கு உண்மையில் எத்தகைய மீள உயிர்ப்பித்தல் சிகிச்சை எவ்வளவு நேரம் அளிக்கப்பட்டது என்பவற்றைப் பார்க்கவேண்டும் என்றாலும், இத்தகைய சிகிச்சையால் ஆக்சிலரி ரீஜின் எனப்படும் அக்குளுக்கு கீழ்ப் பகுதியில் இப்படி முறிவு ஏற்படும் வாய்ப்பு இருக்காது என்றார்.
காயம், சிராய்ப்பு
அவரது கைகளில் 4 சிராய்ப்புக் காயங்கள் இருந்தன என்றும், அவை இறப்பதற்கு 12 முதல் 24 மணி நேரத்துக்கு முன்பு ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும், இடது கையில் பின்புறத்தில் சுண்டு விரல் அருகே 4 சென்டி மீட்டருக்கு 3 சென்டி மீட்டர் அகலத்துக்கு எலும்பு ஆழத்துக்கு சிவந்த காயம் ஒன்று இருந்ததாகவும் இது இறப்பதற்கு 0 முதல் 6 மணி நேரத்துக்கு முன்பான நேரத்தில் நிகழ்ந்திருக்கும் என்றும் உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடற்கூராய்வுக்கு 12 முதல் 24 மணி நேரம் முன்பாக அவர் இறந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள இந்த உடற்கூராய்வு அறிக்கை, இறப்புக்கான காரணம் என்ற பகுதியில், மேற்கொண்டு வரவேண்டிய சில வேதியியல், திசுப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக குறிப்பிடுகிறது.
ஏப்ரல் 28-ம் தேதி பிற்பகல் 3.10க்கு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் எஸ்.ராஜசேகரன் என்பவர் மூலம் சடலம் கொண்டுவரப் பட்டதாகவும் அன்று பிற்பகல் 3.55 மணிக்குத் தொடங்கி 5.30 மணிக்கு உடற்கூராய்வு முடிவடைந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பின்னணி
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இரவு 9 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு காவல்துறையினரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த மரணம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அலுவலக கதவுகளை காவல்துறையினர் மூடியதாகவும் தங்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாகவும் தங்கமணியின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான விரிவான செய்தி: மலைக்குறவர் சமூக விசாரணை கைதி மரணம்: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி போராட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்