இலங்கை நெருக்கடி: எந்த தேர்தலையும் நடத்தும் சூழல் தற்போது இல்லை - அரசாங்கம் அறிவிப்பு

(இன்றைய (மே 4) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர், "நாட்டில் தற்போது தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை. காரணம் முன்னொருபோதும் இல்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம்.

இவற்றிலிருந்து மீள்வதற்கான வழி தொடர்பிலேயே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

அத்தோடு மக்கள் தற்போது தேர்தலைக் கோரவில்லை. அவர்கள் தமது வாழ்வாதார பிரச்னைகளுக்கான தீர்வினையும், அத்தியாவசிய பொருட்களையுமே கோருகின்றனர்.

எதிர்தரப்பிலும் பெரும்பாலானோர் இது தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணமல்ல என்று தெரிவித்துள்ளனர்" என்றார்.

'மஹிந்தவை பிரதமராக பரிந்துரைப்போம்'

பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என, பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் யாரை அடுத்த பிரதமர் பதவிக்கு பரிந்துரைப்பது என்ற கேள்வியை கட்சி உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேறு எவரதும் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது. மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரையே பரிந்துரைக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் என்ற வாக்குறுதியை கொடுத்தே மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார். எனவே, மக்கள் ஆணைக்கு மாறாக செயற்பட முடியாது" என்றார்.

பஷில் ராஜபக்ஷவின் கருத்துடன் ஒரு சிலர் உடன்பட்டுள்ள போதிலும் பிறிதொரு தரப்பினர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் 33 லட்சம் குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்துக்கு விசேட நிவாரணமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மூத்த பிரஜைகள், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணமொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் அதற்காக 13,364 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செயற்திட்டத்தின் கீழ் அசாங்கத்திடமிருந்து கொடுப்பனவை பெற்றுவரும் மூத்த பிரஜைகளுக்கு 3,000 ரூபா மேலதிக கொடுப்பனவும், மூத்த குடிமக்களுக்கு 2,500 ரூபாய் மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மேலும் 2,500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் கணவரை விட்டு தர மாட்டார்கள் - அலகாபாத் உயர் நீதிமன்றம்

இந்தியப் பெண் கணவர் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் என அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு வழக்கின் விசாரணையின் போது கூறியுள்ளது என, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த சுசில் குமார் என்பவர், இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்து உள்ளார். இது தெரியவந்ததும், இரண்டாவது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்து விட்டு, விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக, அவர் அளித்த புகாரில், இரண்டு குழந்தைகளுடன் தன்னை நிர்கதியாக விட்டு விட்டு, கணவர் வேறு ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் சுசில் குமாரை, போலீசார் கைது செய்தனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து சுசில் குமார் தாக்கல் செய்த மனு, விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுசில் குமார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "இந்தியப் பெண்கள், கணவர் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தில் உள்ளனர். இரண்டாவது மனைவியாக இருந்தாலும் இதே எண்ணம் இருக்கும். மனுதாரர் ரகசியமாக மூன்றாவது திருமணம் செய்ததால், மனைவி மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். இதற்கு மனுதாரர் காரணம் என்பதால், கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

குற்ற வழக்கில் கைதானவர்களிடம் இரவு நேரத்தில் விசாரணை நடத்தக் கூடாது: டிஜிபி உத்தரவு

விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட போலீசாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பில் வாகன சோதனையின்போது கஞ்சா மற்றும் கத்தியுடன் பிடிபட்ட விக்னேஷ் என்ற இளைஞரை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கமணி என்பவரும் உயிரிழந்தார்.

இந்த 2 பேரின் உயிரிழப்புக்கும் போலீசார்தான் காரணம் என்று அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இந்த 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ''விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது. குற்றம் உறுதி செய்யப்பட்டால், கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்'' என்று அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: