இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே பற்றி அதிகம் அறியாத சில தகவல்கள்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்பிரதாய நடைமுறைப்படி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து மனோஜ் பாண்டே ராணுவ ஜெனரலுக்கான பேட்டனை பெற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். முன்னதாக, பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் நரவனேவுக்கு ராணுவ வீரர்கள் பிரியாவிடை அணிவகுப்பும், புதிய ஜெனரலுக்கு மரியாதையும் செலுத்தினர். அவரைப் பற்றிய 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்திய ராணுவத்தின் 29ஆவது தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெனரல் மனோஜ் பாண்டே, ராணுவத்தின் இஞ்சினியரிங் கார்ப்ஸ் எனப்படும் பொறியாளர் பிரிவை அடிப்படையாகக் கொண்டவர். இதுவரை போர்க்கள படைப்பிரிவை அடிப்படை சேவையாகக் கொண்டவர்களே ராணுவ ஜெனரல் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதாரணமாக, ஜெனரல் முகுந்த் நரவனே சீக்கிய லைட் படையணியை அடிப்படை சேவையாகக் கொண்டவர். அங்கிருந்துதான் அவர் சீக்கியர் படையணிகளையும் அசாம் ரைஃபிள்ஸ், இலங்கையில் இந்திய அமைதி காப்புப்படை, ராணுவ அதிரடிப்படை போன்றவற்றையும் வழிநடத்தினார். அவருக்கு முன்னதாக ராணுவ ஜெனரலாக இருந்த மறைந்த பிபின் ராவத், தல்பீர் சிங் சுஹாக் ஆகியோர் கோர்க்கா ரைஃபில்ஸ் படைப்பிரிவை அடிப்படை சேவையாகக் கொண்டவர்கள். அந்த வகையில் இப்போதுதான் முதல் முறையாக ராணுவ பொறியாளர் பிரிவை அடிப்படை சேவையாகக் கொண்ட ஒருவர் ராணுவ ஜெனரல் ஆகியிருக்கிறார்.

இந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பேற்கும் முன்பு ராணுவ துணை தலைமைத் தளபதியாக லெப்டிணன்ட் ஜெனரல் அந்தஸ்தில் இருந்தார் மனோஜ் பாண்டே. அந்த பதவியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதிதான் இவர் ஏற்றார். வழக்கமாக ராணுவ தலைமை தளபதி பணிக்கு நியமிக்கப்படும்போது பணி மூப்பு, படைத்திறன் அனுபவம் ஆகியவற்றை விட தகுதி அடிப்படையில்தான் ஒருவரை ராணுவ உயரதிகாரியாக நியமிக்கும் வழக்கத்தை உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், இம்முறை பணி அனுபவம் அடிப்படையில் ஜெனரல் முகுந்த் நரவனேவுக்கு அடுத்த நிலையில் இருந்த மனோஜ் பாண்டேவை இந்திய அரசு ராணுவ ஜெனரல் ஆக நியமித்திருக்கிறது.

கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் படித்தவர் மனோஜ் பாண்டே.1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார்ப்ஸ் ஆஃப் இஞ்சினியர்ஸ் என இப்போது அழைக்கப்படும் பாம்பே இஞ்சினியர் குரூப் படைப்பிரிவில் ராணுவ சேவையை செகன்ட் லெப்டிணன்ட் பதவியில் இருந்து தொடங்கினார். இந்திய ராணுவத்தில் இந்த படைப்பிரிவை பாம்பே சாப்பர்ஸ் என்று அழைப்பதுண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பாம்பே மாகாண ராணுவத்தின் அங்கமாக இந்த பாம்பே சாப்பர்ஸ் இருந்ததால் அந்தப் பெயரிலேயே கார்ப்ஸ் ஆஃப் இஞ்சினியர்ஸ் அழைக்கப்படுவதுண்டு.

ராணுவ பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் லெப்டிணன்ட், அடுத்த மூன்று ஆண்டுகளில் கேப்டன், பிறகு ஆறு ஆண்டுகளில் மேஜர் பதவிகளை வகித்தார் மனோஜ் பாண்டே.

இந்திய ராணுவத்தில் லெப்டிணன்ட் கர்னல் பதவி உயர்வு பெற்ற பிறகு, எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் படையின் தலைமைப் பொறியாளராக மனோஜ் பாண்டே பணியாற்றினார். ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (LOC) பகுதியில் அமைந்துள்ள 117ஆவது பொறியாளர் படைப்பிரிவுக்குக் கட்டளை அதிகாரியாக மனோஜ் பாண்டே பணியாற்றினார்.

2001ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் மீது பயங்கரவாத தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு எதிரான மறைமுக போரை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. அப்போது பாகிஸ்தானுக்கு எதிர்வினையாற்றுவதற்காக மிகப்பெரிய அளவில் சுமார் ஐந்து லட்சம் ராணுவ வீரர்கள் பல்வேறு முகாம்களில் இருந்து எல்லை நோக்கி நகர்த்தப்பட்டனர். அதுவே ஆப்பரேஷன் பராக்கிரமம் என்று அழைக்கப்பட்டது. எனினும், 2002ஆம் ஆண்டில் அந்த ராணுவ நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் மோவில் உள்ள ராணுவ போர்ப்பயிற்சிக் கல்லூரியில் உயரதிகாரிகளுக்கான ராணுவ பயிற்சியை முடித்த மனோஜ் பா்டே, மலையேற்ற போர்ப்படைப்பிரிவின் எட்டாவது படையணி தலைமையகத்தில் கர்னல் ஆக பணியாற்றினார். பிறகு மேஜர் ஜெனரல் ஆக பதவி உயர்வு பெற்று மேற்கு லடாக் பிராந்தியத்தில் பணியாற்றினார். அப்போது லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த மலையேற்ற படைப்பிரிவு, 1940களில் இராக், சிரியா, பெர்ஷியா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடந்த போர் நடவடிக்கையில் பிரிட்டிஷ் படையின் அங்கமாக சென்றுள்ளது. இதன் வீரர்கள் 1999இல் கார்கில் போரில் பங்கேற்பதற்காக காஷ்மீருக்குச் சென்றனர்.

பிறகு இந்திய ராணுவ தலைமையகத்தில் ராணுவ நடவடிக்கைகள் இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ஆக மனோஜ் பாண்டே பணியாற்றினார். ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் ஆக பதவி உயர்வு பெற்ற அவர் தெற்கு பிராந்திய தளபதியாக பணியாற்றினார். 2018இல் தேஜ்பூரில் உள்ள படைப்பிரிவின் தளபதி பொறுப்பை ஏற்றார் மனோஜ் பாண்டே. இந்த காலகட்டத்தில் அவரது படையினர் வடகிழக்கு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றனர். ஒன்றரை வருடம் அங்கு பணியாற்றிய பிறகு மீண்டும் டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், ராணுவ ஒழுங்கு, நலன்கள் மற்றும் சம்பிரதாய நிகழ்வுகள் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் ஆக பணியாற்றினார்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் அந்தமான் நிகோபார் படைப்பிரிவின் தலைமை கட்டளைத் தளபதி ஆக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு கிழக்கு பிராந்திய தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கு ஏழு மாதங்கள் பணியாற்றிய நிலையில், டெல்லிக்கு மீண்டும் அழைத்துக் கொள்ளப்பட்டார். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராணுவத்தின் துணைத் தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த மனோஜ் பாண்டேவின் தந்தை சி.ஜி. பாண்டே நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மன நல பிரிவு டீன் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமீபத்தில்தான் அவர் இறந்து போனார். அவரது தாயார் பிரேமா பாண்டே அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி வாசிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அறிவியல் பட்டப்படிப்பு முடித்து என்டிஏவில் தேர்ச்சி பெற்ற பிறகு புனேவில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் பிரிவில் பிடெக் பட்டம் முடித்தார் மனோஜ் பாண்டே. இவரது மனைவி அர்ச்சனா சால்பேக்கர், பல் மருத்துவ நிபுணர். இப்போது ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான சங்கத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இந்திய ராணுவத்தில் மிக உயரிய சேவைக்காக வழங்கப்படும் பரம் விஷிஷ்ட் சேவை பதக்கம், அதி விஷிஷ்ட் சேவை பதக்கம், விசிஷ்ட் சேவை பதக்கம், ராணுவ பணியாளர்கள் தலைமை அதிகாரியின் பாராட்டுப்பத்திரம் மற்றும் பிராந்திய தளபதியின் பாராட்டுப் பத்திரங்களை பெற்றுள்ளார் மனோஜ் பாண்டே.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :