ஆந்திரா: ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அதிக பணம் கேட்டதால் 10 வயது மகனின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை

பட மூலாதாரம், Getty Images
(இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.)
ஆந்திர மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அதிக பணம் கேட்டதால், 10 வயது மகனின் சடலத்தை அச்சிறுவனின் தந்தை பைக்கில் கொண்டு சென்றதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், சிட்வேல் கிராமத்தைச் சேர்ந்த ஜோஷ்வா (10) இரைப்பை மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார். இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜோஷ்வா நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மகனின் சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினர் ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இலவச ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். ஆனால், அந்த ஆம்புலன்ஸை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் திருப்பி அனுப்பினர்.
இதனால் பணமின்றி தவித்த ஜோஷ்வாவின் தந்தை, உறவினரின் பைக்கில் அமர்ந்து, மகனின் சடலத்தை தோளில் சாய்த்துக்கொண்டு 90 கி.மீ தூரம் பயணம் செய்து தனது சொந்த கிராமத்துக்கு சென்றதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பானது.
இதனை அறிந்த தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினரையும், மருத்துவமனை அதிகாரிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாரத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆர்.எம்.ஓ சரஸ்வதி தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 4 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா: ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் மாநில ஆளுநரே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்து வந்தார்.
இந்நிலையில், குஜராத் மற்றும் தெலங்கானாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து, சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டத்துறையில் இருந்து இந்த மசோதா முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் தலைமைச்செயலாளரின் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னர், இந்த மசோதா ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசு தலைவருக்கு அனுப்பி அனுமதி பெற்ற பின்னரே, இந்த சட்ட மசோதா இறுதி வடிவம் பெறும் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கை நிறைவுசெய்துவிட்டு ஊட்டியில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிற 30-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
கருணாநிதி குறித்த கருத்து - வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கு அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்தது குறித்து, 'தினமணி' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை, அரசு விழா ஆகிய அறிவிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சியினர் நேற்று பேசினர். அப்போது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், "20 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுக்கு மாற்றாக தேசிய அளவில் 5 ஆண்டுகளுக்கு எந்தக் கட்சிகளும் அரசாங்கத்தை நடத்த முடியாது என்ற கருத்தியல் இருந்து வந்தது. அந்த சூழ்நிலையில், கமலாலய தலைவர்களுடன் கூட்டணி வைத்து, அத்தனை தலைவர்களையும் அரவணைத்து ஆட்சியை 5 ஆண்டுகாலம் வெற்றிகரமாக நடத்திச் செல்ல உறுதுணையாக இருந்த தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி" என பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
வானதி சீனிவாசன் பேச்சுக்கு, தனது உரையின் போது அவை முன்னவர் துரைமுருகன் பதிலளித்தார். அப்போது, "குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் அவர்களை (பாஜகவினர்) வரவைத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. செயல்திட்டத்துக்குள் வாஜ்பாய் உள்ளிட்டோரைக் கொண்டு வந்து ஆட்சியை நடத்தினோம். கண்ணை மூடிக்கொண்டு பாஜக தலைவர்களை வாழ்க, வாழ்க என்று கூறவில்லை. சுயமரியாதையின் உச்சகட்டத்துடன் இருக்கக்கூடிய தலைவர் கருணாநிதி" என்றார்.
இலங்கையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19 மற்றும் 20 ஆவது திருத்தங்களிலுள்ள சிறந்த காரணிகளை உள்ளடக்கிய 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கமைய 19 மற்றும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தங்களிலுள்ள சாதகமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தி பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் கிட்டும் வகையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படைச் சட்டமூலத்தை துரிதமாக தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டவாறு தயாரிக்கப்படும் அடிப்படைச் சட்டமூலம் மற்றும் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தொடர்பாகக் கலந்துரையாடி பொது உடன்பாடுகளுடன் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு பிரதமருக்கு அதிகாரமளிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது" என்றார்.
"கோட்டாவின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கையில்லை"

பட மூலாதாரம், Getty Images
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதிகள் மீது நம்பிக்கையில்லை என, வடக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அமெரிக்க தூதுவரிடத்தில் தெரிவித்துள்ளதாக 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கையில்லை எனவும், தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு இந்த அரசாங்கத்தால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனத் தாம் நம்பவில்லை எனவும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அமெரிக்க தூதுவரிடத்தில் தெரிவித்துள்ளனர்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












