நரேந்திர மோதி ஜம்மு பயணம்: கார்பன் சமநிலை அடையப் போகும் பள்ளி ஊராட்சி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Twitter/BJP4India

படக்குறிப்பு, நரேந்திர மோதி
    • எழுதியவர், மோஹித் கந்தாரி
    • பதவி, பள்ளி, சம்பாவில் இருந்து பிபிசி ஹிந்திக்காக

ஏப்ரல் 24ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி என்ற ஊராட்சியின் பெயர் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட உள்ளது. சுமார், 500 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி பள்ளி பஞ்சாயத்து மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் கார்பன் சமநிலை எய்திய ஊர் என்ற பெருமையை இந்த கிராமம் பெறும். இங்குள்ள உள்ளூர் மின்நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு கார்பன் உமிழ்வற்ற முறையில் தயாரிக்கப்பட்ட மின்சாரம் வழங்கப்படும்.

37 ஏக்கர் பந்தல் முதல், வெளியாட்களுக்கு விதிக்கப்பட்ட தடை வரை என, பிரதமரின் ஜம்மு பயணம் குறித்த எல்லா அம்சங்களையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.

1. சூரிய சக்தி மின்னாலை

சுமார் 2.75 கோடி ரூபாய் செலவில், இங்குள்ள 340 வீடுகளுக்கும் சூரியசக்தி மின்சாரம் வழங்கும் வகையில் 20 நாட்களில் இந்த ஆலையை மத்திய அரசு அமைத்துள்ளது.

25 முதல் 30 தொழிலாளர்கள், தளப் பொறியாளர்கள் மற்றும் இதர வல்லுநர்கள் கொண்ட குழு, 20 நாட்களில் இந்த ஆலையை இயக்கி வெற்றி பெற்றுள்ளனர் என்று சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தளப் பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் முகமது யாசின் தெரிவித்தார்.

முகமது யாசின்

பட மூலாதாரம், Mohit Kandhari/BBC

படக்குறிப்பு, முகமது யாசின்

2. வெறும் 20 நாட்களில் முடிந்த பணி

திட்டத்தை முடிக்க குழு, தினமும் 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்தது. சாதாரண சூழ்நிலையில் இப்பணியை முடிக்க 90 நாட்கள் ஆகியிருக்கும்.

முகமது யாசின் உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிரதமர் அலுவலக உறுப்பினர்களின் ஊக்கத்திற்கு நன்றி தெரிவித்தார். அவர்களின் உதவி இல்லாமல் இந்த வேலையை செய்துமுடிப்பது கடினமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

20 நாட்களில் இப்பணியை முடிக்க முடிந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என்றார் அவர். 6,408 சதுர மீட்டர் பரப்பளவில் 500 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆலையின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதியன்று திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்..

3. பள்ளி கிராமம் சொல்வது என்ன?

சூரிய மின் நிலையம் நிறுவப்பட்டதால் பள்ளி கிராம மக்களுக்கு மின்வெட்டுகளில் இருந்து பெரிய நிவாரணம் கிடைக்கும் என்று பள்ளி ஊராட்சித் தலைவரான ரந்தீர் ஷர்மா, பிபிசியிடம் தெரிவித்தார்.

சூரிய மின் நிலையம்

பட மூலாதாரம், Mohit Kandhari/BBC

படக்குறிப்பு, சூரிய மின் நிலையம்

"முன்பெல்லாம் 6 முதல் 8 மணி நேரம் மின்வெட்டை எதிர்கொண்டோம். ஆனால் இந்த ஆலையால் மின்வெட்டு தவிர்க்கப்படும். சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்தினால் கிராம மக்களின் மின்கட்டணமும் குறையும்" என்றார் அவர்.

4. வருகைக்காக நடந்த ஏற்பாடுகள்

பிரதமர் மோதியின் வருகையை முன்னிட்டு, பள்ளி ஊராட்சி புத்துயிர் பெற்றுள்ளது. பள்ளி ஊராட்சிக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

தனது கிராமத்தை நேரடியாக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை முன்பு மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், ஆனால் பிரதமரின் வருகையால் கிராமத்தை இணைக்கும் எல்லா சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர்வாசியான ரூப் குமார், பிபிசியிடம் கூறினார்.

​​"சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு புதிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுக் கழிப்பறைகள் முதல் பஞ்சாயத்து கூடம், கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் வரை, அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் குறித்த சுவரொட்டிகள் மற்றும் வாசகங்கள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன,"என்று ரூப் குமார் தெரிவித்தார்.

ஊராட்சித் தலைவர் ரந்தீர் ஷர்மாவும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

பள்ளி கிராமம், வளர்ச்சியடைந்த ஊராட்சியாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இனி இந்த பஞ்சாயத்து மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக காட்டப்படும். மேலும் இங்குள்ள ஊராட்சி பிரதிநிதிகள் அரசு திட்டங்களை பயன்படுத்தி தங்கள் பஞ்சாயத்தை எப்படி வளர்த்துள்ளனர் என்பது குறித்தும் கூறப்படும்.

5. உள்கட்டமைப்பு மேம்பாடு

கடந்த வாரம் கிராமத்தை நேரடியாக ஜம்மு மாவட்டத்துடன் இணைக்கும் மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

"பல வீடுகளுக்கு சோலார் அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தண்ணீர் வீணாகாமல் இருக்க கிராமத்தில் கசிவுப் பள்ளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் மட்கும், மட்காத கழிவுகளுக்கு தனித்தனி கொட்டகைகளும் கட்டப்படுகின்றன."என்று ரந்தீர் ஷர்மா சுட்டிக்காட்டினார்.

பள்ளி ஊராட்சியில் இந்திய அரசு நடத்தும் அனைத்து திட்டங்களும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் கணக்குகளுக்கு நேரடியாக நிதியுதவி செல்கிறது என்றும் ரந்தீர் ஷர்மா கூறினார். மேலும், "இந்திய அரசின் திட்டங்களால் விவசாயிகள் முதல் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பயனடைந்து வருகின்றனர்" என்றும் தெரிவித்தார்

6. 37 ஏக்கர் பந்தல்

பிரதமர் தனது பயணத்தின் போது, ​​ஜம்மு பிராந்தியத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்தில் 30 ஆயிரம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உட்பட ஒரு லட்சம் மக்களிடையே உரையாற்றுகிறார். பேரணியை சிறப்பாக நடத்துவதற்காக சுமார் 37 ஏக்கர் நிலப்பரப்பில் குளிரூட்டப்பட்ட பந்தல் கட்டப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர் கமல்ஜீத் தனது ஊழியர்களுடன்

பட மூலாதாரம், Mohit Kandhari/BBC

படக்குறிப்பு, பள்ளி முதல்வர் கமல்ஜீத் தனது ஊழியர்களுடன்

மேலும், நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆன்லைனில் இணைவார்கள். சம்பா மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க செல்வார்கள். பள்ளியின் சுவர்கள் வெவ்வேறு கருப்பொருள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

"பிரதமரை வரவேற்கும் வகையில் எங்கள் பள்ளி வளாகத்தை முழுமையாக சீரமைத்து வருகிறோம். பிரதமரை சந்திப்பதில் மாணவர்களும் உற்சாகமாக உள்ளனர்" என்றார் பள்ளி முதல்வர் கமல்ஜீத்.

நாங்கள் அங்குள்ள பள்ளியை அடைந்தபோது, ​​தாழ்வாரத்தில் பல மாணவர்கள் ஓவிய ஆசிரியர் ரவீந்தர் சிங் ஜாம்வாலின் வழிகாட்டுதலின் கீழ் வெவ்வேறு சுவர்களில் ஓவியம் தீட்டுவதில் மும்முரமாக காணப்பட்டனர்.

7. சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடு

சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்முவில் பிரதமர் மோதி நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். இதன் போது, ​​ ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான களத்தை தயார்படுத்தவும் அவர் முயற்சி செய்வார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 3 பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம், பிரதமரின் வருகைக்குப் பிறகு அதன் இறுதி அறிக்கையை விரைவில் அளிக்கலாம். இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கு பிறகு, மாநிலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் பேச்சு ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

பிரதமரின் வருகை குறித்து ஜம்மு காஷ்மீர் பாஜக பிரிவு தலைவர்களும் உற்சாகமாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் களத்திலும் பரபரப்பு நிலவுகிறது.

இந்த கூட்டத்தை வெற்றியடையச் செய்ய பாஜக தலைவர்கள் வீடு வீடாக அழைப்பிதழ்களை விநியோகித்தும், வெற்றி பெறச்செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர்.

8. விமர்சனங்கள்

பிரதமரின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ், தேசிய மாநாடு, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

ஓவிய ஆசிரியர் ரவீந்திர சிங் ஜாம்வால்

பட மூலாதாரம், Mohit Kandhari/BBC

படக்குறிப்பு, ஓவிய ஆசிரியர் ரவீந்திர சிங் ஜாம்வால்

2018 ஜூன் மாதம் முதல் இங்கு ஆளுநர் ஆட்சி நடக்கிறது. இந்த நேரத்தில் சாமானியர்களின் சிரமங்கள் அதிகரித்து வருகின்றன, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது, ஆனால் இதில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று இந்த தலைவர்கள் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்களிடம் பிரதமர் மோதி பேச உள்ளார். ஆனால் ஜம்மு காஷ்மீரில் இந்த அமைப்பு இதுவரை பலப்படுத்தப்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரவீந்தர் ஷர்மா குறிப்பிட்டார்.

பிரதமர் மோதியின் பேரணிக்குப் பிறகு, மே 8 ஆம் தேதி ஜம்முவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா POJK சங்கல்ப் பேரணியை நடத்துவார். இந்தப் பேரணியில், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்படக்கூடும். ஆனால், இந்தப் பேரணி தொடர்பாக இதுவரை உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஏற்பாட்டாளர்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பேரணிக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்ய உள்ளது. இந்த பேரணியில், 1965 மற்றும் 1971 இந்திய-பாகிஸ்தான் போர்களின் போது வந்த அகதிகள் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இருந்து வரும் அகதிகளின் தியாகங்கள் நினைவுகூரப்படும்.

9. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள்

வேலையில்லாத இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்காகவும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையிலும், 38,082 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறை மேம்பாட்டு திட்டங்களுக்கு, நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரபல தொழிலதிபர்கள் முன்னிலையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோதி, அடுத்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க , 850 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் 540 மெகாவாட் நீர்மின் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர்

பட மூலாதாரம், Mohit Kandhari/BBC

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர்

இது தவிர, ஐந்து அதிவேக நெடுஞ்சாலைகளின் அடிக்கல் மற்றும் பனிஹால்-காசிகுண்ட் இணைப்பு சாலை திறந்து வைக்கப்படும். 100 மக்கள் மருந்தகங்களும் திறக்கப்படும்.

10. கிராமத்திற்குள் வந்துசெல்ல தடை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் நிகழ்ச்சியின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இடம் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ளதால், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, எல்லைப் பகுதியில் தனி பாதுகாப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இடையூறு செய்பவர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்கும் வகையில் சுமார் 1,000 பாதுகாப்புப் பணியாளர்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் அதைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வெடிகுண்டை செயலிழக்கச்செய்யும் படைகள் நிறுத்தப்படுவதோடு, ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கிராமத்திற்குள் வெளியாட்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, இலங்கையில் போராட்ட களத்தில் ஆடல், பாடல். டெஸ்ட் போட்டி போல் நிலைத்த போராட்டத்திற்காக

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :