தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலையங்களில் கோடிகளில் முறைகேடு: சிக்கும் ஊழியர்கள் - விவசாயிகள் எதிர்வினை

- எழுதியவர், சே.பிரசன்ன வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 8 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக வியாபாரிகள் உள்ளிட்ட 4 பேரை தமிழ்நாடு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு (சிபிசிஐடி) போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், நெல் கொள்முதல் செய்ததில் தொடர்ச்சியாக முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, கடந்த 4ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முதற்கட்டமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், "நிலம் மற்றும் ஆவணங்கள்" இன்றி ரூபாய் 8 கோடி அளவிற்கு, நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். அதிகாரிகள் சிலரின் உதவியுடன் விவசாயிகளின் பெயரில் வியாபாரிகள் நெல் விற்பனை செய்துள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் ஊக்கத் தொகையை விவசாயி அல்லாத வியாபாரிகளும், அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலம் கிராமத்தை சேர்ந்த வியாபாரி சிவக்குமார், தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன், மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் விவசாயி அல்லாத வியாபாரி உரிய ஆவணங்களின்றி ரூ. 58 லட்சம் அளவிற்கு நெல் விற்பனை செய்ததுள்ளதும் இங்கும் அதிகாரிகளின் உதவியுடன், முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஏ.கே. படவேட்டை சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாவட்டங்களில் சுமார் ரூ8.58 கோடிக்கு அரசு அதிகாரிகள் துணையுடன், ஊழல் நடைபெற்று இருப்பதை சிபிசிஐடி போலீசார் தனது விசாரணையில் உறுதி செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள். இச்சம்பவம் விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?

கடந்த ஆண்டு திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
அப்போது பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் தனியார் பணியாளர்கள் பெரும்பாலானோர் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ. 3,500 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
வட்டார அளவில் இருக்கக்கூடிய அலுவலர்கள், பத்துக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மேற்பார்வையிடும் நிலை இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள், வியாபாரிகள் நிலம், ஆவணம் எதுவும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், உள்ளூர் விவசாயிகளிடம் இருந்தும் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
50 சென்ட் நிலத்திற்கு ரூ. 50 லட்சம்
குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறும் 50 சென்ட் நிலத்திற்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் பணம் பெற்றுள்ளனர். இது எப்படி வழங்கப்பட்டது? என்கிற கேள்வியின் அடிப்படையில் தான் சிபிசிஐடி போலீசார் மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விசாரணையை தொடங்கினர்.
தற்போது இடைத்தரகர்கள், வியாபாரிகள் என நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு துணை போனதாக சந்தேகிக்கப்படும் அரசு அதிகாரிகள் தொடர்பான விசாரணையை புலனாய்வாளர்கள் தொடங்கியுள்ளனர்.
வியாபாரிகள் எப்படி முறைகேடு?
இடைத்தரகர்கள் ஒரு கிலோ நெல்லை வெளி மாநில விவசாயிகளிடமிருந்து 8 ரூபாய்க்கு வாங்கி, இங்கே உள்ள கொள்முதல் நிலையத்தில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அப்போது, கூடுதலான கமிஷன் கிடைக்கிறது என்கிற காரணத்தினால் அதிகாரிகளே இத்தகைய முறைகேட்டுக்கு துணை போகிறார்கள் என்கிறார், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்.
சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், இது மாதிரியான முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணம் "கொள்முதல் கொள்கையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் உள்ள இணைப்பற்ற நிலைதான். மத்திய அரசாங்கத்தின், முகவராகத்தான் தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்கிறது. மத்திய அரசின் கொள்முதல் கொள்கை சட்டத்தின் அடிப்படையில், "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி" வரை விளையும் பொருட்களை, விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும்.
இந்த நிலையில் இதில் எது வியாபாரிகள் நெல்? எது விவசாயிகளின் நெல்? என்பதை எப்படி பகுத்துப் பார்க்க முடியும்? வெளியிலிருந்து உள்ளே வரக் கூடிய வியாபாரிகளின் தரமற்ற நெல்லை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசாங்கத்திடம் உள்ளது.
எனவே இதுபோன்ற ஊழலை களைய மாவட்ட, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை செய்ய வேண்டும். வெளியிலிருந்து வரும் வியாபாரிகளின் தரமற்ற நெல்லை தடுக்க வேண்டும்,'' என்கிறார்.
அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லை
மேலும், ''தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி குறித்து வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, வருவாய் துறை என ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லை. சரியான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாத, உரிய சட்டதிட்டங்கள் இல்லாத நிலை உள்ளது. இதுவே இடைத்தரகர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது,'' என்கிறார்.
மேலும் அவர், கொள்முதல் நிலைய பணியாளர்களும் உள்ளூர் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. இடைத்தரகர்களிடம் இருந்து 50 ரூபாயிலிருந்து,150 ரூபாய் வரை ஒரு மூட்டைக்கு கமிஷனாக பெறுகிறார்கள். இதனால், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்ட, வட்ட அளவில் இருக்கக்கூடிய அலுவலர்கள் தான் இதற்கு துணை போகிறார்கள்.
பிரச்னை என்று வந்தால், கொள்முதல் நிலையத்தில் இருக்கக்கூடிய தற்காலிக பணியாளர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிடுகிறார்கள். எனவே ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் ஆண்டுதோறும் பரிதவித்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்கிறார்.
ஊழியர்களுக்கு சம்பளம் குறைவு

பட மூலாதாரம், TNCSC
கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, உரிய சம்பளம் வழங்காததும் இதற்கு ஒரு காரணம் என்கிறார், காஞ்சிபுரம் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் நேரு, அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் கிளர்க், வாட்ச்மேன்,எடை போடுபவர் உள்ளிட்ட தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் கூட ஊதியமில்லை.
இதுவே காரணமாகவே பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதற்கு வழிவகுக்கிறது. முறையான சம்பளம் ஊழியர்களுக்குவழங்கினால் முறைகேடு களையப்படும் வாய்ப்புள்ளது. மேலும் நுகர்பொருள் வாணிப கழகம், வேளாண் துறை, விவசாயிகள் ஒருங்கிணைந்த விவசாய சங்கம் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.''என்கிறார்.
கிராம நிர்வாக அலுவலர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்
கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணியை முறையாக செய்தாலே பாதி முறைகேடு களையப்படும் என்றார் விவசாயி நேரு. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடன் கேட்டதற்கு, ''கிராம நிர்வாக அலுவலர்கள், நேரடியாக பயிர் செய்யும் இடத்திற்குச் சென்று, கள ஆய்வு மேற்கொண்டு, அதன் பிறகுதான் அடங்கல் வழங்க வேண்டும்.'' என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பலவகையான மோசடிகள் நடைபெற்றிருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. வெறும் 50 சென்ட் இடத்தில் பயிர் வைத்ததாக கூறி, சுமார் 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
முதல் கட்டமாக 3 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டிற்கு துணை போன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பெரும்பாலும் தற்காலிக தனியார் பணியாளர்களே பணி புரிந்திருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இம்முறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தனியார் பணியாளர்கள் யாரும் பணியமர்த்தப்பட வில்லை,'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













