இந்திய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனியுரிமைக்கு எதிரானதா? ஓர் அலசல்

பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்டோரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது
    • எழுதியவர், ஜோயா மடீன் மற்றும் மெரில் செபாஸ்டியன்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது - இது தனியுரிமை குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள், அவர்களின் கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன் போன்ற முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து கொள்வதை கட்டாயமாக்குகிறது. 75 ஆண்டுகள் வரை காவல்துறை இந்தத் தரவை வைத்திருக்க முடியும்.

இந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

எதிர்கட்சித் தலைவர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இது கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது என்று கூறினர்.

பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கமோ, இந்த சட்டமசோதா, காவல்துறையை நவீனமயமாக்குவதாகவும், குற்றங்களை விரைவாகத் தீர்க்க உதவுவதாகவும், இது தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் என்றும் வாதிடுகிறது.

ஆனால் விமர்சகர்கள் இது நாட்டு மக்களைத் தொடர் கண்காணிப்பில் இருக்கச் செய்யும் என்று அஞ்சுகின்றனர்.

சர்ச்சைக்குள்ளாகக் காரணம்

இது அதிகமான தனிப்பட்ட தரவை அரசிடம் ஒப்படைக்கிறது என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயமாகிறது.

இந்தியாவில் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை, எனவே விமர்சகர்கள் இது அரசாங்கத்தின் கையில் ஒரு ஆபத்தான உளவு ஆயுதத்தை வழங்குவதற்குச் சமம் என்று கூறுகிறார்கள் - இது எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒன்று.

"சேகரிக்கக்கூடிய தரவுகளின் ஆழம் மிகவும் தீவிரமானது மற்றும் தன்னிச்சையான சேகரிப்பு அல்லது தரவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான எந்தப் பாதுகாப்பும் மசோதாவில் இல்லாததால், தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமாக உள்ளன" என்று தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வாளர் ஆதித்யா சர்மா கூறுகிறார்.

காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டவிரோதக் கண்காணிப்பு இந்தச் சட்டம் வழிவகுக்கும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம், குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமையைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு மற்றும் 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு ஒன்றுக்கு எதிரானது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உச்ச நீதிமன்றம் - 547 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான தீர்ப்பில், "அரசியலமைப்பில் மனித கண்ணியத்தின் மையப்புள்ளி" எனத் தனியுரிமையைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், எந்த விதமான அரசு கண்காணிப்பும் சரியான விகிதத்திலும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய சிறைச் சட்டமான - கைதிகளை அடையாளம் காணும் சட்டம், 1920 - புகைப்படங்கள், கைரேகை மற்றும் கால்தடம் பதிவுகளை மட்டுமே சேகரிக்க காவல்துறை அனுமதிக்கிறது. ஆனால் இது குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள், பிணையில் வெளியில் இருப்பவர்கள் அல்லது ஒரு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் கூடிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால், இந்தப் புதிய சட்டம், கைரேகைகள், விழித்திரை ஸ்கேன்கள், கையெழுத்து மற்றும் பிற "உயிரியல் மாதிரிகள்" போன்ற முக்கியத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில் விரிவு படுத்துகிறது.

இந்த "உயிரியல் மாதிரிகள்" என்ன என்பதைக் குறிப்பிடவில்லை, ஆனால் வல்லுநர்கள் இது மரபணு மற்றும் இரத்த மாதிரிகளைக் குறிக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த மாதிரிகளைச் சேகரிக்கத் தற்போது காவல்துறைக்கு வாரண்ட் தேவைப்படுகிறது.

இப்போது கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எவருக்கும் இது பொருந்தும். நீதிமன்றமோ அல்லது மாஜிஸ்திரேட்டுகளோ குற்றம் நிரூபிக்கப்படாதவர்கள், அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படாதவர்களின் பதிவுகளையும் தக்கவைத்துக் கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவிடலாம்.

"இதனால் இந்தியாவில் குற்றப்பட்டியலில் இருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகப்போவது தான் இதனால் ஏற்படப்போகும் பலன்" என்று டிஜிட்டல் உரிமை ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கோடாலி கூறுகிறார்.

காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

தேசியக் குற்ற ஆவணக்காப்பகம், 75 ஆண்டுகளுக்கு இந்தத் தரவுகளை வைத்திருக்கும், ஆனால் அது எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை சட்டம் விளக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"காவல்துறையினருக்குச் சிறைகளில் அதிகம் பேரை அடைக்கும் நோக்கமில்லை. அந்த அளவு சிறைகளில் இடமும் இல்லை. ஆனால் அவர்கள் உங்களைக் கண்காணிப்பில் வைத்திருந்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றிய தகவலைப் பெறுவது தான் நோக்கம்," என்கிறார் கோடாலி.

இந்த மசோதா, இப்போது இந்த அதிகாரத்தை "தெருவில் ரோந்து செல்லும் ஒவ்வொரு காவலருக்கும்" வழங்குகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவர் விக்ரம் சிங், நாட்டின் குற்றவியல் தரவுத்தளம் மற்றும் புலனாய்வுக் இயந்திரத்தை மேம்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட சட்டம் ஒரு "சிறந்த கருவி," என்று கூறுகிறார்.

ஆனால் அது கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கவலைப்படுகிறார்: " மாதிரிகள் சேகரிப்பின் நோக்கத்தை மேம்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை பொறிமுறையை தரமிறக்கியிருக்கிறது"

மற்ற நாடுகளில் இத்தகைய சட்டங்கள் உள்ளனவா?

புலனாய்வு அமைப்புகள், தனி நபர் தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்துவது புதிதன்று. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள், கைது செய்யப்பட்ட அல்லது தண்டனை பெற்ற நபர்களின் முக அம்சங்கள், கைரேகைகள் அல்லது விழித்திரை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் அடையாளங்களைச் சேகரிக்கின்றன.

ஆனால், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் போலல்லாமல், காவல்துறையின் தவறான நடத்தையை விசாரிப்பதற்கான வலுவான அமைப்புகள் இந்தியாவிடம் இல்லை என்று கோடாலி கூறுகிறார்.

அரசாங்கங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தால் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அதிகரித்து வருவது உலகம் முழுவதும் சர்ச்சைக்குரிய பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, குடிமக்களைக் கண்காணிக்க தரவுகளைப் பயன்படுத்தக்கூடிய சர்வாதிகார ஆட்சிகளில் இது உண்மை.

இது ஹாங்காங்கில் ஜனநாயக சார்புப் போராட்டங்களின் போது நடந்தது, அங்கு சீன கண்காணிப்பு அமைப்பு, ஆர்ப்பாட்டங்களைக் கடுமையாக ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் முகங்களை மூடிக்கொண்டனர், பாதுகாப்பு கேமராக்களை சீர்குலைத்தனர், அடையாளச் சான்று தேவைப்படும் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்தனர்.

இத்தகைய தரவுகள் பயனுள்ளதாகவும் உள்ளன.

அமெரிக்காவின் காவல்துறை, குற்றவாளிகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய முக அங்கீகாரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியது, ஆனால் அல்காரிதங்களில் உள்ள சில ஒரு பக்கச் சார்புகள், இதில் தவறு ஏற்படவும் வழிவகுத்தன.

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் இத்தகைய சட்டம் ஏன் ஆபத்தானது?

இந்தியாவில் ஏற்கனவே 2009இல் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு உள்ளது, இது ஆயிரக்கணக்கான காவல் நிலையங்களில் உள்ள குற்றப் பதிவுகளை ஒருங்கிணைக்கிறது.

மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்படும் மோடியின் அரசாங்கத்தின் கீழ் இந்தத் தனியுரிமை மீறல் எதைக் குறிக்கிறது என்ற அச்சம் பரவலாக உள்ளது. பல ஆர்வலர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சமீபத்திய ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீன் பெறப் போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"சட்ட அமலாக்கத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது தவறன்று. ஆனால் இந்திய அரசாங்கம், குற்றவாளிகளை விடுத்து, குடிமக்களின் தனியுரிமையைத் தவறாகப் பயன்படுத்துவதிலும், எதிரிகளைக் குறிவைக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் பெயர் பெற்றது" என்று சர்மா கூறுகிறார்.

கடந்த பல ஆண்டுகளாகக் கண்காணிப்பு நுட்பங்களை அரசு "பெருமளவு ஆர்வத்துடன் பயன்படுத்தியுள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

மோடியின் அரசாங்கம் அரசியல் தலைவர்களைக் குறிவைத்து, இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகாசஸைப் பயன்படுத்தியதாக அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன - அதை அரசு மறுத்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது கூட, உத்திரபிரதேசத்தில் காவல்துறை, சதிகாரர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட எதிர்ப்பாளர்களை அடையாளம் காண முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது.

நேர்மையற்ற தரவுக் கசிவுகள் மற்றும் ஊடுருவல்களின் யுகத்தில், தரவைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் திறன் குறித்தும் ஒரு குறிப்பிட்ட அச்சம் உள்ளது. உண்மையில், உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் ஐடி தரவுத்தள திட்டமான ஆதார் மூலம் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட தரவுக் கசிவுகள் கடந்த காலங்களில் பரவலாகப் புகாரளிக்கப்பட்டன.

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அவர்களை சிறையில் அடைப்பதாக மோதி அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது

"தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எவரிடமிருந்தும் சட்ட அமலாக்க அமைப்புகள், அதிக அளவு தரவுகளைச் சேகரிக்க இந்த மசோதா அனுமதிப்பதால், அமைதியான போராட்டக்காரர் ஒருவரைக் காவலில் வைப்பதையும், பின்னர் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த அவர்களின் தரவுகளை சேகரிப்பதையும் தடுக்கும் எதுவும் இதில் இல்லை." சர்மா கூறுகிறார்.

"இந்தியாவில் தரவு-பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள ஆழமான பற்றாக்குறை" காரணமாக தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்று அவர் மேலும் கூறுகிறார்.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா 2018 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் கிடப்பில் கிடக்கிறது. அது இன்னும் காத்திருக்கிறது. இருப்பினும் இதன் தற்போதைய பதிப்பு கணிசமாக நீர்த்துப்போயுள்ளது என்றும் முக்கியமான தரவுகளை அணுகுவதில் இருந்து அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

"தனி நபர் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சியை மேற்கொள்ளும் வடிவத்தில் தரவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் வரை, குடிமக்களைக் குறிவைக்கத் தனக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது," என்று சர்மா கூறுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :