You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"உபி தேர்தலில் மாயாவதியை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க முன்வந்தோம்"- ராகுல் காந்தி
இன்றைய (ஏப்ரல் 10) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
"உத்தர பிரதேச தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதியை காங்கிரஸ் கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக அறிவிக்க முன்வந்தோம்; ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா்," என ராகுல் காந்தி கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் 'தி தலித் ட்ரூத்' (The Dalit Truth) என்ற புத்தகத்தை சனிக்கிழமை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "அம்பேத்கா், மகாத்மா காந்தி காட்டிய வழியில் தலித்துகள் தங்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.
இந்தியாவின் ஆயுதமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. ஆனால், அதன் நிறுவனங்கள் இல்லையெனில், அந்த சட்டம் அா்த்தத்தை இழந்துவிடும்.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது ஆா்எஸ்எஸ்-இன் கரங்களில் இருக்கின்றன. இது ஒன்றும் புதிது அல்ல. மகாத்மா காந்தி துப்பாக்கிக் குண்டுகளால் கொல்லப்பட்ட நாளில் இருந்தே இந்தத் தாக்குதல் தொடங்கிவிட்டது," என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலின்போது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து முதல்வராகுமாறு மாயாவதிக்கு நாங்கள் ஆலோசனை கூறினோம். ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா்.
சிபிஐ, அமலாக்கத் துறை, பெகாஸஸ் மென்பொருள் ஆகியவற்றின் நெருக்கடிக்கு அஞ்சி பாஜக ஆட்சியமைக்கத் தெளிவான பாதையை மாயாவதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாா்.
இதுதான் இந்தியாவின் உண்மை நிலை. அரசியமைப்புச் சட்டம் செயலிழந்துவிட்டால் தலித்துகள், சிறுபான்மையினா், பழங்குடியினா், வேலைவாய்ப்பற்றோா், சிறு விவசாயிகள், ஏழைகள் மேலும் பாதிக்கப்பட நேரிடும்.
நாட்டின் பொருளாதாரம் எழுச்சி பெற இதுவே சரியான தருணம்", என ராகுல் காந்தி கூறியதாக தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மாறுதலுக்கேற்ப ஆட்டோவில் கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கண்டிப்பாகப் பொருத்தப்பட வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலை மாறுதலுக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அந்த மீட்டரை ஆட்டோ ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என்றும், தங்களது வசதிக்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர் கட்டாயம் பொருத்தி, அதன்படியே கட்டணம் வசூலிக்க வேண்டுமென கடந்த 2013-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, ''கடந்த 2013-ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மீட்டருடன் சேர்த்து பிரின்ட்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அது பொருத்தப்படவில்லை. ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரரான வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி, ''ஆட்டோக்களில் உள்ள மீட்டர்கள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. ஆட்டோ டிரைவர்கள் மீட்டர்களை இயக்குவதில்லை என்பதே எனது குற்றச்சாட்டு. எனவே தமிழ்நாடு முழுவதும் ஆட்டோக்களில் மீட்டர்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்'' என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், ''ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டரை கண்டிப்பாகப் பொருத்தி அதன்படியே கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், மீட்டர்களை முறையாக இயக்காத ஆட்டோ ஓட்டுநர்கள் மீது காவல்துறையினரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை மாறுதலுக்கேற்ப ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் பலன் அடையும் வகையில் ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இதற்காக நீண்ட நெடிய நடவடிக்கையை எடுக்காமல் பெட்ரோல், டீசல் விலைமாற்றத்துக்கேற்ப ஆட்டோ கட்டணமும் தானாக மாறும் வகையி்ல் மீட்டர்களில் புதிய மென்பொருளை பயன்படுத்தலாம்'' என அரசுக்கு ஆலோசனை வழங்கி வழக்கை முடித்துவைத்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மர்மநபர்கள்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கை சிறிது நேரம் முடக்கியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை நேற்று இரவு மர்ம நபர்கள் முடக்கினர்.
இது தொடர்பாக இந்திய வானிலை மையத்தின் இயக்குனர்-ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்துக்குப் பிறகு இந்திய வானிலை மையத்தின் ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது.
இதே போல் உத்தர பிரதேச முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கும் நேற்றிரவு திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்