You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
இன்றைய (மார்ச் 30) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அளித்த விளக்கத்தை செய்தியாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.
"ரஷ்யா யுக்ரேன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இது முற்றிலும் உண்மையல்ல. கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்வு காணப்படுகிறது. சர்வதேச விலைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்படி கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
2026-ம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்கள். அப்போது, வெறும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள்தான் வெளியிடப்பட்டன. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது", என்று அவர் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
மாநில முதல்வர்களுக்கு மமதா எழுதிய கடிதம்
"நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து ஒடுக்குமுறை சக்திக்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை முன்னெடுக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, எதிர்கட்சித் தலைவர்களுக்கும், பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மமதா பானர்ஜி கூறியிருப்பது, "நமது நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பாஜக பலமுறை தாக்குதல் நடத்தி வருகிறது.
பாஜக அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து, அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட மத்திய அமைப்புகளைத் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது.
இந்த அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரின் வசதிக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப ஓர் இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்திற்கு வர வேண்டும்.
நாட்டில் தேர்தல் நெருங்கும் சமயம் எல்லாம் அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் , வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அமைப்பின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடுகின்றன.
எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்திருந்தபோது, பாஜக கொண்டு வந்த சட்டங்கள், அமலாக்க இயக்குனரகம் மற்றும் சிபிஐ தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு உதவியுள்ளது.
நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தற்போது சில பக்க சார்பான அரசியல் தலையீடுகளால் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும். நீதித்துறை, ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியவை நமது ஜனநாயகத்தின் முக்கியமானத் தூண்களாகும். இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால், மொத்த அமைப்பும் குலைந்து போகும்.
அரசாங்கம் சரியாக செயல்படுவதை உறுதி செய்வதும், எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்படுவதை எதிர்ப்பதும் எதிர்கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள பொறுப்புகளாகும்", என்று அவர் கூறியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓலா மின்சார இரு சக்கர வாகனம் தீப்பற்றிய விவகாரம், மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு
மகாராஷ்டிர மாநிலம் புனேயில், ஓலா நிறுவனத்தின் மின்சார இரு சக்கர வாகனம் தானாகவே தீப்பற்றி எரிந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புனேயில் கடந்த சனிக்கிழமை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவன தயாரிப்பு மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றியது. இதில் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இரு சக்கர வாகனம் தானாகவே திடீரென தீப்பற்றி எரிந்த காணொளி காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்துக்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், புனேயில் மின்சார இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான காரணத்தைக் கண்டறிவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்குமாறும் கூறியுள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக விளக்கமளித்த ஓலா நிறுவன இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவீஸ் அகர்வால், "வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது. அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணப்படும்" என்று கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்