ட்வீட்டுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ள ட்விட்டர் நிறுவனம்

ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை போட்டதற்கு பிறகு அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு வேலை நடந்து வருவதாக ட்விட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினரான பிறகு, டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டர் கணக்கில் நடத்தினார்.

ட்விட்டர் பயனர்கள் பல காலமாக ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை எதிர்பார்த்திருக்கக்கூடிய சூழலில், அதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளதால் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் வரக்கூடிய மாதங்களில் இந்த எடிட்‌ செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக ட்விட்டர் கூறியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரின் தகவல் தொடர்பு குழு ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில், "இப்போது எல்லோரும் கேட்பதால்… ஆம், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை நடைமுறைப்படுத்த நாங்கள் கடந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறோம்!"

"இந்த யோசனை, கருத்து கணிப்பு நடந்ததற்கு பின்பு தோன்றியது அல்ல"

"வரக்கூடிய மாதங்களில் ட்விட்டர் ப்ளூ(@TwitterBlue) ஆய்வகத்தில், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை சோதனை செய்ய உள்ளோம். இதன் மூலம் எதை செய்யலாம், எதை செய்ய முடியாது, எது சாத்தியமானது என்பதை நாங்கள் தெரிந்து கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

ட்விட்டரின் சந்தா சேவை தளமான, ட்விட்டர் ப்ளூவின் பயனர்களுக்குத்தான், டிவிட்டர் சோதனை செய்யும் எந்த ஒரு புது வசதியும் முதலில் கிடைக்கப்பெறும்.

இந்த வசதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ட்வீட்களில் தவறுதலாக ஏற்படும் எழுத்துப் பிழைகளை, ட்வீட்க்கு கிடைத்த லைக்குகள், பதில்கள் உள்ளிட்டவை பாதிக்காத வகையில் அவற்றில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். நிறுவனத்தின் நுகர்வோர் தயாரிப்புகளின் துணைத் தலைவர் ஜே சல்லிவன் செவ்வாயன்று ஒரு தகவலில், இந்த எடிட் வசதி "பல ஆண்டுகளாக மிகவும் கோரப்பட்ட ட்விட்டர் அம்சம்" என்று கூறினார்.

இருப்பினும், இந்த வசதியை "பாதுகாப்பான முறையில்" எவ்வாறு உருவாக்குவது என்பதை நிறுவனம் ஆராய்ந்து வந்ததாக அவர் கூறினார். "இந்த எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நேர வரம்புகள், கட்டுப்பாடுகள் மற்றும் எடிட்டை பற்றிய வெளிப்படைத்தன்மை போன்ற தகவல்கள் இடம்பெறாமல் இந்த வசதியை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் அது தவறுதலாக கையாளப்படலாம்."

மேலும் அவர் கூறுகையில், "பொதுவெளி உரையாடல்களை, உள்ளதை உள்ளவாறு பாதுகாப்பது எங்களுக்கு மிக முதன்மையான முன்னுரிமையாகும். அதனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதி தொடர்பான வேலைகளில், இவற்றையும் கணக்கில் கொள்வோம்" என்றார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி, வெளிப்படைத்தன்மை பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த வசதியை "அநேகமாக ஒருபோதும்" அறிமுகப்படுத்தமாட்டோம் என கூறினார்.

ட்விட்டரின் போட்டி சமூக ஊடக தலங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், பயனர்கள் தங்களின் பதிவுகளை எடிட் செய்யும் வசதியை வழங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலும் இந்த வசதியை வரவேற்கும் மனநிலையில்தான் உள்ளார்.

ட்விட்டரில் 9.2% பங்குகளை வைத்துள்ள ஈலோன் மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார். இந்த தகவல் பகிரப்பட்டதற்கு பிறகு, ஈலோன் மஸ்க் கடந்த திங்களன்று, ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டர் கணக்கில் நடத்தினார். இந்த கருத்து கணிப்பில் இதுவரை சுமார் 40 லட்சம் பேர் பங்கெடுத்துள்ளனர்.

கடந்த செவ்வாய் அன்று ஈலோன் மஸ்க் நிர்வாக இயக்குனர் குழுவின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எடிட் செய்யும் வசதி குறித்து ஆராய்ந்து வருவதாக ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று ட்விட்டர் கூறியது. ஆனால் அது ஏப்ரல் 1 முட்டாள்கள் தின நகைச்சுவையாகவே பரவலாக கருதப்பட்டது.

வட அமெரிக்காவின் தொழில்நுட்ப பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் கூறுவது என்ன?

ஈலோன் மஸ்க் டவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குழுவில் நியமிக்கப்படுவதற்கு முன்பே, ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் வருகைக்கு பிறகுதான் இந்த எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ட்விட்டர் கருத்துக் கணிப்புகள் அறிவியலுக்குப் புறம்பானவை. இருப்பினும் ஈலோன் மஸ்க் கருத்து கணிப்பின் அடிப்படையில், நடைமுறைப்படுத்தக்கூடிய முடிவுகள் எடுக்கும் திறன் கொண்டவர். கடந்த ஆண்டு நவம்பரில், ஈலோன் மஸ்க் தனது டெஸ்லா பங்குகளில் 10% விற்க வேண்டுமா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில், 80 லட்சம் பின்தொடர்பவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன் முடிவில் பெரும்பான்மையானவர்கள் விற்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில் அவர் அதை செய்தார்.

சமீபத்தில் ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில், ட்விட்டரின் எடிட் வசதி தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்திய நிலையில், இதை ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், "ஈலோன் மஸ்க் நடத்தும் கருத்துக்கணிப்பு மிக முக்கியமானது. அதனால் அதற்கு கவனமாக வாக்களியுங்கள்" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், நடத்தப்படும் கருத்து கணிப்பின் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் எடிட் செய்யும் வசதி தொடர்பான கொள்கை முடிவில் மாற்றத்துக்கான சாத்தியக்கூறு உள்ளது என தெரிகிறது.

ஒரே இரவில் ஈலோன் மஸ்க் ட்விட்டரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் அவர், முடிவுகளை எடுப்பதற்கான நிலைப்பாட்டை, அவரை பின் தொடர்பவர்களியிடம் விட்டுவிடுகிறார் போல தெரிகிறது.

இவையெல்லாம் அவரது முதல் நாளில் நடந்தவை, இனி வரும் நாட்களில் பல முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. அப்படியான முக்கியமான இடத்தில் அவர் உள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: