உள்துறை அமைச்சர் அமித் ஷா: "ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்"

உள்துறை அமைச்சர் அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய நாளில் (08.04.2022) பல்வேறு நாளிதழ்கள் மற்றும் செய்தி தளங்களில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.

"ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி"

உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" என்று அவர் பேசியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

101 ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யத் தடை

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Rajnath Singh Twitter

பாதுகாப்பு துறையில் உள்நாட்டு தற்சார்பை அதிகரிக்க, மேலும் 101 ராணுவ உபகரணங்களுக்கு இறக்குமதிக்கான தடைவிதித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டியல் வெளியிட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு துறையில் 'தற்சார்பை' விரைவுபடுத்த மேலும் 101 ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை உள்நாட்டில் உருவாக்குவதற்கான முக்கிய கொள்கை முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த முக்கிய உபகரணங்கள் மற்றும் தளங்கள் அடங்கிய 101 பொருட்களின் மூன்றாவது பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்கள் துறை மூலம் அறிவிக்கப்பட்ட இந்தப் பட்டியல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதியான ஆர்டர்களை பெறும் வகையில் உருவாக்கப்படும்

பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2020-ன் விதிகளின்படி, உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து இந்த 101 பொருட்கள் வாங்கப்படும். முன்னதாக, ஆகஸ்ட் 21, 2020 அன்று முதல் பட்டியலும் (101), மே 31, 2021 அன்று இரண்டாவது பட்டியலும் (108) வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாவது பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆயுதங்கள், வெடிபொருட்கள், கடற்படை ஏவுகணைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெண் தொழில்முனைவோர்- முன்னணியில் தமிழகம்

பெண் தொழில்முனைவோர்கள்

பட மூலாதாரம், Getty Images

பெண் தொழில்முனைவோர்கள் புதிய வரலாறை எழுதிக்கொண்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய புள்ளியியல் துறை, தேசிய புள்ளியியல் அலுவலகம் இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில், பெண் தொழில்முனைவோர்களின் செயல்பாடு விவகாரங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 10.87 லட்சம் பேரிடம் நடத்தபட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, , பெண்களால் நடத்தப்படுகிற நிறுவனங்களை,தொழில்களை அதிகமாக கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிறு குறு வர்த்தக நிறுவனங்கள் மட்டுமன்றி, சுய உதவிக்குழுக்களால் இயங்கும் குடிசைத்தொழில்களாகவும் பெண்கள் சுயதொழில் செய்வது தமிழகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

நாடு முழுக்க இருக்கும் இதுபோன்ற நிறுவனனககளில் தமிழகம் ஒரு மாநிலம் மட்டும் 13.5% பங்கு வகிக்கிறது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றவழக்கு

ஐபிஎஸ்

பட மூலாதாரம், IPS Assciation facebook

இந்தியாவில் 22 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது குற்றவழக்குகள் உள்ளன என்று மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மீதான வழக்குகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.

அந்த பதிலில், "தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 22 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் போலீசாரிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்த நித்யானந்த் ராய், உத்தரபிரதேசத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளதகவும் கூறினார்.

காணொளிக் குறிப்பு, பொழுதுபோக்காகத் தொடங்கி வருவாய் ஆதாரமான மயில் பண்ணை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: