ஆஸ்கர் விருதை வென்ற படத்திற்கு பின்னணியில் இருந்த இந்தியர். யார் இவர்?

ஆஸ்கர்

பட மூலாதாரம், DNEG

    • எழுதியவர், ஆண்ட்ரூ கிளாரன்ஸ்
    • பதவி, பிபிசி செய்தி, டெல்லி

ட்யூன்(Dune) படம் பார்த்த சில நிமிடங்களில், அதன் விஷுவல் எஃபெக்ட்டுகளுக்காக (Visual effects) ஏன் ஆஸ்கார் விருதை வென்றது என்பது தெரிந்துவிடும்.

ஃபிராங்க் ஹெர்பெர்ட்டின் 1965ஆம் ஆண்டு வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, டெனிஸ் வில்லெனுவ் இந்த படத்தை இயக்கியுள்ளார். பரந்து விரிந்த ஒரு பாலைவனத்தின் காட்சி மிக பிரமாண்டமாக இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படம் தொடர்பாக விமர்சகர்கள், "பிரமாண்டமான காட்சி" அமைப்புடன் "அர்த்தமுள்ள, கண்களை பறிக்கும் வகையில்" வடிவமைப்பு கொண்டுள்ளது எனக் கூறுகின்றனர்.

ஆனால் பலருக்கு தெரியாத ஒரு உண்மை, இந்த திரைப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்டில் ஈடுபட்ட நிறுவனத்தின், 46 வயது மிக்க தலைமை நிர்வாக இயக்குனரான நமித் மல்ஹோத்ரா, தனது பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளார், குறிப்பாக பாலிவுட்டில் இருந்து.

ட்யூன் திரைப்படத்தில், அராக்கிஸ் பாலைவன கிரகம் காட்டப்பட்டுள்ளது- இங்கு தான் காதல் மற்றும் போர் உருவாகிறது- இந்த இடத்தை, லண்டனை தளமாகக் கொண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் நிறுவனமான டிஎன்இஜி (DNEG), பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள் குழு, ட்யூன் படத்தின் மொத்த 1,700 விஷுவல் எஃபெக்ட்களில், 1,200 விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, இந்த நிறுவனத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்கள், பிபிசி கிளிக்கிடம் கூறுகையில், திரைப்பட இயக்குனரின் கற்பனையை தத்ரூபமாக காட்சிப்படுத்த வேலை செய்யப்பட்டது என்றனர்.

இது தொடர்பாக லண்டனில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் பேசிய நமித் மல்ஹோத்ரா, "உண்மையில் பார்வையாளர்கள் அனுபவித்த அனுபவம், தயாரிப்பு வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு மற்றும் பல விஷயங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த உலகத்தை உருவாக்கியது" என்று கூறினார்.

இந்தியாவின் நிதி மையமான மும்பையில்,1995ஆம் ஆண்டு வணிகத்தை தொடங்கியதிலிருந்து தனது நீண்ட நெடும் பயணத்தை தொடங்கினார் நமித் மல்ஹோத்ரா. தற்போது, ​​ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்ற உலகளாவிய நிறுவனத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார்.

அவர் எப்போதும் திரைப்பட உலகத்துடன் இணைந்திருப்பார் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார். காரணம், அவரது தாத்தா ஒரு பாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆவார், அவரின் தாத்தா 1953இல் இந்தியாவின் முதல் வண்ணத் திரைப்படங்களில் ஒன்றான ஜான்சி கி ராணியில்(Jhansi Ki Rani) பணியாற்றினார். 1988ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ஷாஹேன்ஷா (Shahenshah) உள்ளிட்ட முக்கிய பாலிவுட் திரைப்படங்களை அவரது தந்தை தயாரித்துள்ளார்.

நமித் மல்ஹோத்ரா தனது 18 வயதை எட்டிய பிறகு, தனது தந்தையிடம் தான் இயக்குனர் ஆக விரும்புவதாக கூறினார். ஆனால், திரைப்பட வணிகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கவனித்த அவரது தந்தை, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்படங்கள் தயாரிப்பைப் பற்றி கற்றுக்கொள்ள அவரை ஊக்குவித்தார்.

ஆஸ்கர்

பட மூலாதாரம், DNEG

நமித் மல்ஹோத்ராவால் "எப்போது வேண்டுமானாலும் திரைப்படங்களை இயக்க முடியும்" ஆனால் ஒரு திரைப்படத்தில் தொழில்நுட்பம் தான் முக்கிய பங்கினை வகிக்கிறது என்று அவர் தந்தை கூறியதாக கூறினார்.

எனவே, மல்ஹோத்ரா திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எடிட்டிங் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு ஒரு ஆண்டு கழித்து, 1995 இல், அவர் ப்ரைம் ஃபோகஸ் (Prime Focus) என்று நிறுவனத்தை நிறுவினார், பிறகு இந்த நிறுவனம் திரைப்படத் தயாரிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப வேலைகளில் (post production) ஈடுபடும் நிறுவனமாக விரிவடைந்தது.

"இந்த நிறுவனத்தை தொடங்கிய போது, ​​தொடர்ந்து பல புதுமையான விஷயங்களை உருவாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் செய்த அனைத்தும் இந்தியாவில் முதல் முறை அறிமுகமானவைகளாக இருந்தது" என்று நமித் மல்ஹோத்ரா கூறுகிறார்.

குறிப்பாக 2004ஆம் ஆண்டில், ஒரு மோஷன் கண்ட்ரோல் ரிக்கை (motion-control rig)- விஷ்வல் எஃபெக்ட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு ரோபோடிக் கிரேன்(robotic crane)- இந்தியாவில் முதல் முறையாக நாங்கள் பயன்படுத்தினோம். "அது ஒரு சிக்கலான கருவி. அக்கருவியை ஒருங்கிணைக்க நான்கு மணி நேரம் ஆகும். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், 'இது என்ன?' என்று எங்களை கேட்பார்கள்" என்று நினைவு கூர்ந்தார்.

அப்போது, இந்தியர்கள் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் (Lord of the Rings) போன்ற ஹாலிவுட் திரைப்படங்களை பார்க்கத் தொடங்கியிருந்தனர், இது டிஜிட்டல் இன்டர்மீடியட் செயல்முறை போன்ற வண்ணம் மற்றும் பட பண்புகளை மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. "எங்களாலும் அதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிந்தது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் எங்கள் நிறுவனமான ப்ரைம் ஃபோகஸ் பல்வேறு புதுமைகளை கொண்டு வளர்ந்த சூழலில், இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களால் வேகமாக அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"திரைப்பட வணிகத்தில் மாற்றம் என்பது மிகவும் கடினமானது. திரைப்படத்தை இயக்குபவர்கள் தங்கள் பாணியில் திரைப்படங்களை தயாரிப்பதையே விரும்புகின்றனர். புதிய தொழில்நுட்பத்திற்கு அனைவரையும் மாற்றுவது என்பது ஒரு போராட்டமாக இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

அந்தத் தருணத்தில்தான் அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினார்.

"இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு விலையில் இதைச் செய்ய முடிகிறது. எனவே, இதையே பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளுக்கு இதை கொண்டு செல்லலாமே என்ற எண்ணம் எனக்கு நம்பிக்கையை அளித்தது"

ஆஸ்கர்

பட மூலாதாரம், DNEG

ப்ரைம் ஃபோகஸ் - இது 2006 இல் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது - சிறிய போஸ்ட் புரொடக்ஷன் (post production) நிறுவனங்களை கையகப்படுத்தியதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் மிக விரைவில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியது. 2010 ஆம் ஆண்டில், ஒரு முழு ஹாலிவுட் திரைப்படத்தை - 'க்ளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ்'( Clash of the Titans) - 2D இலிருந்து 3D க்கு மாற்றிய முதல் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனைச் சேர்ந்த டபுள் நெகடிவ் நிறுவனத்தை வாங்கியது, இது ஏற்கனவே கிறிஸ்டோபர் நோலனின் 'இன்செப்ஷன்' (Inception) திரைப்படத்திற்கான விஷுவல் எஃபெக்ட்டுக்காக ஆஸ்கார் விருதை வென்றிருந்தது.

அதன் பின்னர், மேலும் ஆறு ஆஸ்கார் விருதுகளை விஷுவல் எஃபெக்ட்டுக்காக இந்நிறுவனம் வென்றுள்ளது, இதில் 'டெனெட்' (Tenet) மற்றும் 'இன்டர்ஸ்டெல்லர்' (Interstellar) திரைப்படங்களும் அடங்கும்.

மல்ஹோத்ராவுக்கு இப்பொழுதும் இந்திய திரையுலகில் ஆர்வம் உள்ளது. மேலும், வரவிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'பிரம்மாஸ்திரா'வின் (Brahmastra) தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். "எல்லோருக்கும் ஒரு காட்சி பிடிக்கும். அனைவருக்கும் ஸ்பைடர்மேன் பிடிக்கும். அனைவருக்கும் அவதார் பிடிக்கும்," என்று அவர் கூறுகிறார்.

மேலும் இந்திய திரைப்படங்கள் விஷுவல் எஃபெக்ட்டுகளுக்காக அதிகம் செலவழிக்கத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார், இதற்கு உதாரணமாக தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின், மிகப்பெரிய வசூலை ஈட்டிய, கண்கவர் வரலாற்று படங்களான, பாகுபலி மற்றும் இப்போது வெளியான, ​​ஆர்ஆர்ஆர் ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறார்.

ஆஸ்கர்

பட மூலாதாரம், WARNER BROS / CHIA BELLA JAMES

"விஷுவல் எஃபெக்ட்களுக்கு செலவழிப்பது அதிகரித்து வருகிறது. வரலாற்றுப் படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்கள் மூலம் ஒரு ஆச்சரியமான அனுபவத்தை கொடுப்பது போன்ற முயற்சிகளை நாம் இதுவரை காணாததால், இந்த திரைப்படங்கள் நமக்கு புதுமையாக தெரிகின்றன", என்று அவர் கூறுகிறார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கிய இந்தியாவால், ஏன் 'அவதார்' அல்லது 'இன்டர்ஸ்டெல்லர்' போன்ற படங்களைத் தயாரிக்க முடியவில்லை?

" இந்தியாவிலுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சினிமாவுக்கு வித்தியாசமான முன்மாதிரிகளை வைத்திருக்கின்றனர்," என்று மல்ஹோத்ரா கூறுகிறார் - உதாரணமாக, நோலன், ஸ்டான்லி குப்ரிக்கின் அறிவியல் புனைகதை காவியமான '2001: எ ஸ்பேஸ் ஒடிஸி'யை (2001: A Space Odyssey) திரைப்படத் தயாரிப்பின் அளவுகோலாகக் கருதுகிறார்.

"எனவே, நோலன் ஒரு இண்டர்ஸ்டெல்லரை உருவாக்க விரும்பும்போது, ​​1968இல் வந்த அந்த முன்மாதிரி திரைப்படத்தின் திரைப்படத் தயாரிப்பு மற்றும் கதை சொல்லும் விதத்தைவிட ஒரு படி மேலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்," என்று அவர் கூறுகிறார். மறுபுறம், இந்திய இயக்குனர்கள் தங்கள் நாட்டில் முன்பு வெளிவந்த திரைப்படங்களை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.

"உதாரணமாக, 50கள் மற்றும் 60களின் இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூர் ஒரு குறிப்பிட்ட வகையான திரைப்படத் தயாரிப்பில் மிகவும் பிரபலமாக இருந்திருந்தால், மேலும் நீங்கள் அவருடைய படங்களை முன்மாதிரியாகக் கொண்டு இருந்தால், அம்மாதிரியான படங்களே நிறைய வருமே தவிர, உங்களுக்கு ஸ்டார் வார்ஸ் அல்லது ஸ்பேஸ் ஒடிஸி கிடைக்காது."

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: