கோவை நீட் தேர்வு பயிற்சி மைய மாணவி மரணம் - சந்தேகம் எழுப்பும் பெற்றோர்

மாணவி தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்த 18 வயது மாணவி நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் அவரது பெற்றோர் அதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். என்ன நடந்தது?

கோவை மாவட்டம் கருமலைசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழிலாளியான பெருமாளின் மகள் ஸ்வேதா கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த ஐந்து மாதங்களாக தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஸ்வேதா நேற்று வகுப்பிற்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கியுள்ளார். நேற்று மாலை சக மாணவிகள் வகுப்பு முடித்துவிட்டு விடுதிக்கு திரும்பியபோது ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஸ்வேதா இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பாளையம் காவல்துறையினர் ஸ்வேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

ஆனால் ஸ்வேதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் தந்தை பெருமாள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், ' ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 8:15 மணிக்கு அகாடெமி வார்டன் சந்திரசேகர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது மகள் ஸ்வேதா உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து விட்டார் என்றும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் கூறி அழைத்தார். நானும் என் மனைவியும் இரவு 9 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது எனது மகள் இறந்து கிடந்தார். எனது மகள் யோகேஸ்வரன் என்கிற மாணவருடன் ஏற்பட்ட மனமுறிவால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கிறார்கள். எனது மகள் ஸ்வேதாவின் சாவில் மர்மம் இருப்பதாக உணர்கிறேன். காவல்துறை 8:15 மணிக்கு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் ஐந்து மணி நேரம் தாமதமாக தகவல் தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே குற்றம்சாட்டப்பட்டுள்ள யோகேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வாரி மெடிக்கல் அகாடெமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை வழக்காக பதிவு செய்ய வேண்டும்' என பெருமாள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வேதா படித்து வந்த அதே பயிற்சி மையத்தில் தான் யோகேஸ்வரன் என்கிற மாணவர் படித்துள்ளார். இருவருக்கும் ஒருவர் மீது விருப்பம் இருந்துள்ள நிலையில் அந்த தகவல் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் யோகேஸ்வரனை அவருடைய பெற்றோர் இடைநிறுத்தம் செய்துவிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் யோகேஸ்வரனை காண முடியாத மன வருத்தத்தில் ஸ்வேதா தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், 'மாணவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது விருப்பம் இருந்துள்ளது அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் கூட அவர்களுடைய வீட்டில் பேசியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவாகியுள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள முடியும்,' என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :