You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நான் தொழுகையும் செய்வேன், விரதமும் இருப்பேன்" - 11 ஆண்டுகளாக இந்து கோயிலை பராமரிக்கும் முஸ்லிம்
- எழுதியவர், மஜித் ஜஹாங்கீர்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் ஜில்லாவில் உள்ள லகரிபூரா பகுதியில் உள்ள தனது கிராமத்தில் இந்து கோயில் ஒன்றை, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் பராமரித்து வருகிறார். அவர் பெயர் நூர் முகமது தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு, நூர் முகமது என்பவர், தனது கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்களை அழைத்து, அங்குள்ள இந்து கோயிலுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்தார்.
அந்த கோயிலின் பெயர் கீர் பவானி கோயில். இந்த கோயில் இருக்கும் இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளி, மற்றொரு சிறிய கோயில் உள்ளது. இந்த இரண்டு கோயில்களையும் நூர் முகமதுதான் கவனித்து கொள்கிறார்.
நூர் முகமது அடிப்படையில் ஒரு சமையல்காரர். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
"பண்டிட்களை சந்தித்து, கிராமத்திற்கு திரும்பும்படி அழைத்தேன்"
அவரது கிராமத்தில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறிய பிறகு, தான் பல முறை அவர்களை சந்தித்து, கிராமத்திற்கு திரும்பும்படி அழைத்தாக அவர் கூறுகிறார்.
அவர், "2011 ஆம் ஆண்டு வரை, என்னுடைய கிராமத்தில் இருந்து வெளியேறிய பண்டிட்களை அழைத்து வர, பல முறை ஜம்முவுக்கு சென்றேன். அவர்களை இங்கு திரும்பும்படி அழைத்தேன். அவர்கள் ஒவ்வொரு முறையும் இந்த கிராமத்திலுள்ள கோயில்கள் குறித்து கேட்பார்கள். அப்போது நாங்கள் அதை பார்த்துக் கொள்கிறோம் என்று கூறுவோம். அவர்களை பார்க்க நான் ஜம்மு செல்லும் போதெல்லாம், அவர்கள் எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பார்கள்", என்று தெரிவிக்கிறார்.
"ஒருமுறை, கிராமத்திற்கு வந்து கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தபோது, நாங்கள் கோயிலுக்கு வர முடிவு செய்தால், அலைபேசி மூலம் தெரிவிக்கிறோம் என்று கூறுகிறார்கள். அவ்வாறு ஒரு முறை, அவர்கள் கோயில் திருவிழாவுக்கு வருவோம் என்று தெரிவித்தனர். அதை கேட்டவுடன், நான் கோயிலை அலங்கரிக்கத் தொடங்கினேன்", என்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "பல நாட்கள் கோயிலை அலங்கரித்த பிறகு, 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி, பண்டிட்கள் கிராமத்திற்கு வந்தனர். நான் கோயிலை அழகாக அலங்கரித்திருப்பதை கண்டார்கள். அப்போது அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் கீர் பவானி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டனர். அதற்கு பல நாட்கள், அருகே உள்ள முஸ்லிம் வீடுகளில் அவர்கள் தங்கினார்கள்", என்று அவர் தெரிவிக்கிறார்.
முஸ்லிம்கள் இதை தடுத்ததில்லை
2011 ஆம் ஆண்டு முதல், அவர்தான் இந்த கோயிலை பராமரித்து வருகிறார்.
காஷ்மீரில் பயங்கரவாதம் பரவிய பிறகு, 1990களில் அங்கிருந்த பண்டிட்கள் புலம்பெயர்ந்து சென்றனர் என்பது தெரிந்த விஷயமே. அவர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றனர். அப்போது, லகரிபூராவில் காஷ்மீரி பண்டிட்களுடைய மொத்தம் 31 வீடுகள் இருந்தன.
அவரது கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள், அவர் இந்த கோயிலை பராமரிப்பதற்கு ஒரு தடையாக எப்போதும் இருந்ததில்லை.
இந்த கோயிலை பராமரிப்பதற்கு, சக முஸ்லிம்கள் எப்போதும் தனக்கு ஆதரவு அளித்ததாக அவர் தெரிவிக்கிறார்.
"இந்த கோயிலை பராமரிப்பதில் எனக்கு எந்த இடர்பாடுகளும் வந்ததில்லை முஸ்லிம்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். சொல்லப் போனால் முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து இந்த கோயிலை பாதுகாக்கிறோம். ஒரு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்துக்கொண்டு, ஏன் இந்து கோயிலை பார்த்துகொள்கிறாய் என்ற கேள்விக்கு யாரும் என்னிடம் கேட்கவில்லை" என்று தெரிவிக்கிறார்.
'கோயிலும் மசூதியும் எனக்கு ஒன்றே'
அவரை பொறுத்தவரையில், அவருக்கு கோயில், மசூதி இரண்டும் ஒன்றே என்று கூறுகிறார்.
அவர் கூறுகையில், "என்னை பொறுத்தவரையில், கோயிலுக்கு செல்வதும், மசூதிக்கு செல்வதும் ஒன்றே. இவை இரண்டும் கடவுளின் வீடு. நான் கோயிலுக்கு சென்று ஊதுபத்தி ஏற்றுவேன்; தண்ணீர் ஊற்றுவேன்; சுத்தம் செய்வேன். நான் மசூதியில் இதுபோன்று செய்வதில் இருந்து எந்த பேதமும் இல்லை. கோயிலை பராமரித்துக்கொண்டே நான் என் மதத்தையும் பின்பற்றுகிறேன்", என்று தெரிவிக்கிறார்.
"நான் தொழுகையும் செய்வேன்; விரதமும் இருப்பேன். கோயிலுக்கு செல்வதன் மூலம் என் மதத்தில் இருந்து விலகி இருக்கவில்லை. இது எனக்கு மேலும் நிம்மதியையே அளித்திருக்கிறது", என்று அவர் தெரிவிக்கிறார்.
இந்த வேலையை தான் செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு, கடவுளுக்கும், பண்டிட்களுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.
கோயிலை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டதற்கு, என் சிந்தனையில் இந்த எண்ணத்தை கடவுள் விதைத்தார். இந்த பணி செய்வது எனது கடமை", என்று தெரிவிக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்