You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரலாறு: வாஸ்கோட காமாவுக்கு முன்பே இந்தியா வந்த ரஷ்யர் மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டது ஏன்?
- எழுதியவர், ஜான்வி முலே
- பதவி, பிபிசி மராட்டி சேவை
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் ஆழமானதாகவும் நட்புடனும் இருப்பதாக அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் இந்த நட்பு எவ்வளவு பழைமையானது? இரு நாடுகளுக்கு இடையே மக்கள் போக்குவரத்து செயல்முறை எப்போது தொடங்கியது?
இந்த கேள்விகளுக்கான பதில் வரலாற்று புத்தகங்களில் காணப்படுகிறது.
இந்தியாவில் முகலாயப் பேரரசு தன் தடத்தை பதிக்காத காலகட்டத்தின் கதை இது. பாபர் இன்னும் பிறக்கவில்லை. லோடி வம்சத்தினரின் ஆட்சி டெல்லியில் தொடங்கியிருந்தது. விஜயநகர பேரரசும் பஹ்மனி சுல்தான்களும் தக்காணத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.
வாஸ்கோடகாமா பிறந்து சிறிது காலம் ஆகியிருந்தது. அவர் இந்தியா வர இன்னும் 30 ஆண்டுகள் இருந்தன.
1469 ஆம் ஆண்டு, ரஷ்ய பயணி அஃப்னாசி நிகிடின் ஒரு குதிரை மற்றும் நாட்குறிப்புடன் இந்தியாவுக்கு வந்தார்.
இந்தக் காலகட்டத்தில் இந்தியா எப்படி இருந்தது? நிகிடின் இந்தக் காலகட்ட இந்தியாவைப் பார்த்தது மட்டுமின்றி அதைப் பற்றி விரிவாக எழுதியும் உள்ளார்.
டியூ மற்றும் குஜராத் வழியாக, அவர் மகாராஷ்டிராவில் உள்ள கடற்கரை கிராமமான செளல் கிராமத்தை அடைந்தார் . டெக்கான் கிராமப்புறங்கள் வழியாக இன்றைய தெலங்கானாவை அடைந்தார்.
வோல்காவிலிருந்து குண்டலிகா வரை பயணம்
அஃப்னாசி நிகிடின் ஒரு ரஷ்ய பயணி மற்றும் வணிகர் என்று ரஷ்ய ஆவணங்கள் கூறுகின்றன. அவர் 1433 இல் ரஷ்ய நகரமான த்வெரில் பிறந்தார்.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பான அவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் 'த்வெர்' வர்த்தகர்களின் கோட்டையாகக் கருதப்பட்டது. வோல்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள த்வெர் நகரம், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கு பயணம் செய்த சாகச வணிகர்களுக்குப் பிரபலமானது.
இதேபோன்ற வணிக பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்த நிகிடினும் 1466 இல் த்வெரை விட்டு வெளியேறினார்.
இந்தியாவில் நல்ல இன குதிரைகளுக்குப் பஞ்சம் இருப்பதாக யாரோ அவரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர் தன்னுடன் ஒரு குதிரையை அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
இடைக்கால இந்தியாவின் வர்த்தகப் பாதைகள் பற்றிய தகவல்களைத் தரும் இந்தப் பயணத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நிகிடின்.
வோல்கா நதியிலிருந்து காஸ்பியன் கடலுக்கு அவர் எவ்வாறு பயணம் செய்தார் என்ற விவரத்தை நிகிடின் கூறியுள்ளார்.
இந்த பயணத்தின்போது அவரிடமிருந்த பொருட்கள் இரண்டு முறை திருடுபோயுள்ளது. இதற்குப் பிறகு அவர் பெர்சியாவிற்குள் (இன்றைய இரான்) நுழைந்து ஹோர்முஸ்ஸை அடைந்தார். அங்கிருந்து அரபிக் கடல் வழியாக இந்தியாவை அடைந்தார்.
நிகிடினின் படகு முதலில் டியூவை அடைந்தது. அதன் பிறகு அவர் குஜராத்தில் உள்ள கம்பாட்டை அடைந்தார். துறைமுகத்தை அடைந்த பிறகு அவர் இண்டிகோ அதாவது நீலம் செய்யப்பட்ட பருத்தி பற்றி எழுதினார். இண்டிகோ ரஷ்யாவில் மிகவும் விலை உயர்ந்த பொருளாகும்.
இதற்குப் பிறகு அவர் மகாராஷ்டிராவில் குண்டலிகா நதியின் முகப்பில் அமைந்துள்ள சௌல் துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார்.
அஃப்னாசி நிகிடின் இந்திய மண்ணில் முதன்முறையாக செளலில்தான் கால் பதித்ததாக ரஷ்ய வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.
நிகிடின் தக்காணத்தில் என்ன பார்த்தார்?
மும்பையில் இருந்து 110 கிமீ தொலைவில் மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் நகரின் தெற்கில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் செளல்.
தென்னை, பனை உட்பட மற்ற அனைத்து வெப்பமண்டல காலநிலை மரங்களால் சூழப்பட்ட செளல் வழக்கமான கடலோர கிராமம் போலவே இருக்கிறது.
ஆனால் இந்த எளிய கடற்கரை கிராமம், இரண்டாயிரம் வருட வரலாற்றைக் கொண்டது.
பல வரலாற்று ஆவணங்கள் இந்த துறைமுகத்தை சம்பாவதி, ச்யூல் மற்றும் சிவ்லி போன்ற பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன.
இடைக்காலத்தில், செளல் ஒரு பெரிய துறைமுக நகரமாக இருந்தது. அங்கு தொலைதூர நாடுகளில் இருந்து வணிகர்கள் வந்தனர். அவர்கள் குண்டலிகா நதியிலிருந்து துறைமுகத்திற்குள் நுழைந்து ஓர் இடத்தை அடைவார்கள். அது தற்போதைய ரேவண்டாவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது.
அஃப்னாசி நிகிடின் இந்த வணிகர்களில் ஒருவர். 1469 ஆம் ஆண்டு இங்கு வந்த அவர் தனது நாட்குறிப்பில் இங்குள்ள மக்களைப் பற்றி எழுதினார்.
"இங்கே எல்லோரும் நிர்வாணமாக இருக்கிறார்கள். அவர்கள் தலையை மறைப்பதில்லை. அவர்கள் வெறுங்காலுடன் நடக்கிறார்கள். இங்கே பெண்கள் தலை முடியை கொண்டை போல முடிந்து கொள்கிறார்கள். பணக்காரர்கள் தலையை மூடுகிறார்கள். அவர்கள் தோளில் ஒரு துணியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஒரு துணியை இடுப்பில் கட்டிக் கொள்கிறார்கள்.
பெண்கள் இடுப்பில் துணி கட்டியுள்ளனர். மார்பகங்கள் மூடப்படாமல் இருக்கும். இங்கு பெண்கள் மற்றும் ஆண்களின் தோலின் நிறம் கருமையாக இருக்கிறது. நான் எங்கு சென்றாலும், மக்கள் என் பளபளப்பான சருமத்தால் கவரப்படுகிறார்கள்."
நிகிடின் சௌலில் இருந்து பாலிக்கு சென்று அங்கிருந்து ஜுன்னாரை அடைந்தார். "தொடர்ந்து நான்கு மாதங்கள் இரவும் பகலும் மழை பெய்து எங்கும் சேறும் சகதியுமாக இருந்தது" என்று அவர் எழுதுகிறார்.
இந்த நாட்களில் மக்கள் தங்கள் வயல்களில் வேலை செய்து கிச்சடி சாப்பிடுவதைப் பற்றி அவர் எழுதுகிறார்.
அவரது மத நம்பிக்கை சவாலுக்கு உள்ளாகும் விதமாக ஜுன்னாரில் நிகிடினுக்கு ஒரு சம்பவம் நடந்தது.
ஆஸத் கான் என்ற உள்ளூர் தலைவர் நிகிடினின் குதிரையைப் பறித்துக்கொண்டு, கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கை கொண்ட நிகிடின், இஸ்லாத்திற்கு மாற வேண்டும் அல்லது குதிரையை விடுவித்து அழைத்துச் செல்ல பெரும் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது நிகிடினுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர் முகமது கோர்சன் இந்த விஷயத்தில் நிகிடினுக்கு உதவ முன் வந்தார்.
கோர்சன், ஆஸத் கானை கடிந்துகொண்டார். நிகிடினை இஸ்லாத்தை ஏற்குமாறு அழுத்தம் கொடுக்க மறுத்தார். இதற்குப் பிறகு நிகிடினின் குதிரையைத் திரும்ப கொடுக்கச் செய்தார். இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.
பாஹ்மனி மற்றும் விஜயநகரம்
இதற்குப் பிறகு நிகிடின், பாஹ்மனி சுல்தானேட்டின் தலைநகரான பிதரை அடைந்தார். அங்கு அவர் தனது குதிரையை விற்பதில் வெற்றி பெற்றார். அதற்கு ஈடாக கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு விஜயநகர பேரரசை நோக்கிச் சென்றார்.
நிகிடின் இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையிலான போட்டியைப் பற்றியும் எழுதினார். அவர் ஸ்ரீசைலத்திற்கு ஒரு சமய பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் 'யானை தலை' மற்றும் 'குரங்கு முகம்' கொண்ட தெய்வங்களின் சிலைகளைக் கண்டு வியந்தார். கோயிலில் நடைபெறும் பிரசாத விநியோகம் பற்றியும் அவர் எழுதியுள்ளார்.
நிகிடின் ரம்ஜான் நோன்பையும் கடைப்பிடித்தார். அவர் குல்பர்காவை அடைந்து ராய்ச்சூர் மற்றும் கோல்கொண்டாவில் உள்ள வைர சுரங்கங்களை பார்க்கச் சென்றார்.
அந்த நேரத்தில் அவர் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்தியாவில் இருந்தார். இப்போது தாயகம் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது.
செளலில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள தபோல் துறைமுகத்தில் இருந்து அவர் தாயகம் திரும்பும் பயணத்தைத் தொடங்கினார்.
எகிப்து, அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து குதிரைகள் உள்ளிட்ட பிற பொருட்கள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக அவர் எழுதியுள்ளார்.
தபோலில் இருந்து நிகிடின் எத்தியோப்பியா சென்று அங்கிருந்து இரான் சென்றடைந்தார். இதற்குப் பிறகு அவர் க்ரைமியா மற்றும் கீயவ் (இன்றைய யுக்ரேன்) ஆகியவற்றிலிருந்து சாலை வழியாக தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆனால் 1472 ஆம் ஆண்டில் நிகிடின் தனது சொந்த ஊரான த்வெரை அடைவதற்கு முன்பு ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்கில் காலமானார்.
பாலிவுட் திரைப்படம் மற்றும் செளலில் நினைவுச்சின்னம்
நிகிடின் இறந்த பிறகு , பல பேரரசுகளும் ஆட்சியாளர்களும் ரஷ்யாவில் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவிலும் சோவியத் யூனியனிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் அடையாளமாக நிகிடின் காணப்பட்டார்.
இது மட்டுமின்றி, இந்திய, ரஷ்ய திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரது வாழ்க்கையை மையமாகக்கொண்ட 'பர்தேசி' திரைப்படத்தை 1957 ஆம் ஆண்டு தயாரித்தனர்.
இந்தத் திரைப்படம் ரஷ்ய மொழியிலும் (வண்ணப்படம்) ஹிந்தியிலும் (கருப்பு மற்றும் வெள்ளை) வெளியானது.
நர்கீஸ், பிருத்விராஜ் கபூர், பல்ராஜ் சாஹ்னி, பத்மினி போன்ற பெரிய கலைஞர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரஷ்ய நடிகர் ஒலெக் ஸ்ட்ரீஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
2002 ஆம் ஆண்டில், ரஷ்ய தூதரகத்தின் உதவியுடன் சௌலில் ஒரு நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் ரஷ்ய மக்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் அடிக்கடி வரும் எஸ்.ஆர்.டி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளது.
இதனுடன் கூடவே அவரது நினைவுச் சின்னங்கள் க்ரைமியாவின் ஃபியோடோசியா மற்றும் த்வெர் ஆகிய இடங்களிலும் உள்ளன.
நிகிடினின் நாட்குறிப்பு ஏன் முக்கியமானது?
நிகிடின் தனது வாழ்க்கையின் கடைசி நாட்கள் வரை தொடர்ந்து ஒரு நாட்குறிப்பு எழுதினார். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது நாட்குறிப்பு உலகத்தின் பார்வைக்கு வந்து, தற்போது ஒரு மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்குறிப்பு "கோஜ்னியே ஜா திரி மோரியா" அதாவது 'மூன்று கடல் தாண்டிய பயணம்' என்று அழைக்கப்படுகிறது. நிகிடின் காஸ்பியன் கடல், அரபிக் கடல் மற்றும் கருங்கடல் ஆகிய மூன்று கடல்களைக் கடந்தார்.
இந்த நாட்குறிப்பு ரஷ்ய மொழியில் இந்தியாவைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த ஒரே ஐரோப்பிய பயணி நிகிடின் மட்டும் அல்ல. ஆனால் அவர் பார்த்ததும் எழுதியதும்தான் அவரை வேறுபடுத்துகிறது.
"அவர் பல சிரமங்களை எதிர்கொண்டு இந்தியா வந்தவர். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் கிராமப்புற இந்தியாவை அடைந்து அதைப்பற்றி எழுதினார். அவரது பயணம் வித்தியாசமானது, அவர் சாதாரண மக்களுடன் கலந்து உள்ளூர் கலாச்சாரம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்டார். அதைப்பற்றி எழுதினார்," என்று கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மொழிகள் துறையில் கற்பிக்கும் டாக்டர் மேகா பன்சாரே கூறினார்.
எதை எழுதினாலும் ரஷ்ய கண்ணோட்டத்தில் அவர் எழுதினார். அவர் பெண்களைப் பற்றி பேசும்போது, பெண்கள் எப்படி தங்கள் தலைமுடியை மறைக்கவில்லை என்று எழுதுகிறார். ஏனெனில் அவரது நாடான ரஷ்யாவில் பெண்கள் எப்போதும் தலைமுடியை மூடி வைத்திருப்பார்கள்.
அவரது சகாப்தத்தின் மற்ற பயணிகளைப்போல நிகிடினுக்கு அரச ஆதரவு இல்லை. ஆனாலும் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவர் இந்த நாட்டின் மீது எவ்வளவு ஈர்ப்பு கொண்டிருந்தார் என்பதை இது காட்டுகிறது.
நிகிடின் தனது நாட்குறிப்பில் அப்போதைய இந்திய சமூகத்தையும் விவரித்துள்ளார். பல முஸ்லிம்களும் இந்துக்களும் நட்புறவு பேணியிருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் குதிரைகளை விட மாடுகளுக்கும் எருதுகளுக்கும் எப்படி முன்னுரிமை அளித்தார்கள் என்பதை அவர் எழுதியுள்ளார். இதனுடன், சமூகங்களுக்கிடையில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஆழமான இடைவெளியை குறிப்பிட்டார். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு சமூகத்தில் திருமணம் செய்து உணவு உண்பதில்லை என்பதையும் எழுதியுள்ளார்.
"வரலாற்றின் குறைவான ஆதாரங்களே நம்மிடம் உள்ளன. இந்த டைரி மிகவும் நம்பகமான ஆதாரங்களில் ஒன்றாகும். அவரது நாட்குறிப்பு ஆரோக்கியமான மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட பாரம்பரியத்தைப் பற்றி பேசுகிறது என்று நான் நினைக்கிறேன்," என்று மேகா குறிப்பிட்டார்.
"இக்காலத்தில் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருந்ததையும், அவர்களில் பலர் நல்லவர்களாகவும் இருந்ததைக் காணலாம். நிகிடின் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் சக வாழ்வைப் பற்றி பேசுகிறார். இன்றைய காலகட்டத்தில் இதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது" என்றார் அவர்.
"நிகிடின் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர். அவரை மதம் மாற்றும்படி கேட்டபோது, அவர் வருத்தப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அவர், 'நீங்கள் இங்கு வர விரும்பினால், உங்கள் நம்பிக்கையையும் மதத்தையும் விட்டு விட்டு வாருங்கள்' என்று எழுதுகிறார். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் இங்கு வாழ்ந்தபோது தனது மதத்தை அவரால் கடைப்பிடிக்க முடிந்தது."
டாக்டர் மேகா பன்சாரே போன்ற வல்லுநர்கள் நிகிடினின் கதையை நடப்பு காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.
ரஷ்யாவில் ஆக்கிரமிப்பு படையினரை எதிர்க்க யுக்ரேனிய பெண்கள் வெடிகுண்டு தயாரிக்கும் காணொளி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்