இந்தியாவில் பொது வேலை நிறுத்தம் ஏன்? நாளை பேருந்துகள் இயக்கப்படுமா?

பட மூலாதாரம், ANI
இந்தியா முழுவதும் மார்ச் 28, 29 தேதிகளில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. மற்ற மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம், ரயில் மறியில் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தத்தால், தமிழ்நாட்டில் காலை வரை சுமார் 32 சதவீதம் வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இதையடுத்து, படிப்படியாக அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏன் இந்த போராட்டம் ?

பட மூலாதாரம், ANI
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது. மத்திய அரசு அலுவலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும்.
தொழிலாளர் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தொழிற் சங்க கூட்டுக்குழுவின் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
பொதுவான 14 அம்ச கோரிக்கைகள் மட்டுமின்றி ரயில்வே, வங்கி, பி.எஸ்.என்.எல், துறைமுகங்கள், காப்பீடு, தபால் என இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் துறைசார்ந்த கூடுதல் கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராடும் சங்கங்கள்
அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் சிஐடியுசி, ஏஐடியுசி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான 10 தொழிற்சங்கங்கள். தொமுச உள்ளிட்ட மாநில அளவிலான தொழிற்சங்கங்கள், எஸ்.ஆர்.எம்.யு உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் என பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இதில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள்நாடு முழுவதும் சுமார் 25 கோடி பேர் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்படும் சேவைகள்

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் பொன்மலை ரயில்வே பணிமனை, ரயில்வே சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இந்த பணிகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் துறைமுக தீயணைப்பு துறையினரும் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து துறைமுக ஊழியர்கள் 3 பேர் கடலில் குதித்து போராட்டம் நடத்தினர்.
திங்கள் கிழமையான இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்வு கூட்டங்களுக்கு பொது மக்கள் அதிகம் வரவில்லை. திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து நிலையம் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கேரளாவில் முழுமையாக பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான பாறசாலை பகுதியில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.
வங்கி சேவை பெரும் பாதிப்பு

பட மூலாதாரம், ANI
பொதுவான 12 அம்ச கோரிக்கைகளுடன் வாராக் கடன் வசூல், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாமைக்க அபராதம் விதிப்பதை நிறுத்தக் கோருவது ஆகியவற்றை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பெரும்பான்மையாக ஈடுபட்டனர்.
இதனால், இந்த வாரத்தில் வங்கிப் பணிகளில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் 28, 29 தேதிகளில் வேலை நிறுத்தம். ஏப்ரல் 1ம் தேதி ஆண்டுக் கணக்கு தொடக்கம். ஏப்ரல் 2ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு. இதைத் தொடர்ந்து வார விடுமுறை தினம் என வருகிறது. ஆகையால், மார்ச் 30, 31 தேதிகள் என 2 நாட்கள் மட்டுமே வங்கிகளின் பணி நாட்களாக உள்ளன.
நாளையும் பாதிப்பு தொடருமா?
போராட்டம் மார்ச் 29ம் தேதி (நாளையும்) தொடரும். பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தொழிற்சங்க தலைவர்களுடன், செய்தியாளர்களைச் சந்தித்த தொமுச நிர்வாகி நடராஜன் கூறுகையில், ''பொதுமக்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (மார்ச் 29) 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும். தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். மற்ற தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் செல்வார்கள்'' என்றார்.
வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றால், ''பணியில்லா நாளுக்கு சம்பளமில்லை'' என்ற கொள்கை அடிப்படையில், அந்த நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













