பவளப் பாறைகளை 'ராமர் பாலம் கட்டிய கல்' என்று கூறி ஆன்லைனில் விற்பனை செய்யும் தளம்

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அரிய வகை கடல் வாழ் உயிரினமான பவளப்பாறைகளை 'ராமர் பாலம் கட்டிய கல்' என்ற பெயரில் 20 கிராம் ரூ. 5 ஆயிரத்திற்கு ஆன்லைனில் விற்பனை செய்ய விளம்பரம் செய்திருந்தது ஒரு வணிக இணைய தளம். பவளப் பாறைகளை எடுப்பது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டிருப்பதால், இந்த ஆன்லைன் விற்பனை குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம். இங்கு மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் காணப்படுகிறது.
கடலில் உள்ள பவளப்பாறைகளை சார்ந்து கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் பசு, கடல் தாமரை, டால்பின் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
பவளப்பாறைகள் விற்பனைக்காக வெட்டி எடுப்பது, அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது, பவளப்பாறைகள் இயற்கையாகவே சேதமடைதல் போன்ற காரணங்களால் மீன்களின் முக்கிய வாழ்விடமான அரிய வகை பவளப்பாறைகள் அழியத் தொடங்கியுள்ளன.
அழிந்து வரும் பவளப்பாறைகளைப் பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை உயர்த்தவும், செயற்கை பவளப் பாறைகள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.
பவளப் பாறையால் ஆனதா'ராமர் பாலம்'?

ராமேஸ்வரம் மிக முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலம் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான தமிழகம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மீகப் பயணமாக ராமேஸ்வரத்திற்கு வந்து செல்கின்றனர்.
ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பின் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அப்படி சுற்றுலா செல்லும் வட மாநில பக்தர்களிடம் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்ட பவளப்பாறைகளை ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என்று கூறி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட பவளப் பாறைகளை 'ராமர் பாலம் கட்டிய கல்' என்கிற பெயரில் ஆன்லைனில் 20 கிராம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் ஆன்லைனில் தடை செய்யப்பட்ட பவளப் பாறைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"ஆன்லைனில் தடை செய்யப்பட்ட பொருட்களை பொது மக்கள் வாங்க வேண்டாம்"
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் வனச்சரகர் வெங்கடேஷ், ஆன்லைன் மூலம் விற்கப்படும் பவளப்பாறைகள், எடுக்கவும், விற்கவும் தடைசெய்யப்பட்டவை. இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது வன உயிரின தடுப்பு சட்டம் 1972-ன் கீழ் வழக்குத் தொடுக்கலாம். இந்த சட்டத்தின் கீழ் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் முதல் அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் பவளப்பாறைகள் மற்றும் கடலில் வாழும் உயிருள்ள பவளப்பாறைகள் இரண்டுமே பாதுகாக்க கூடியவை. எனவே அவற்றை விற்பனை செய்வது சட்டவிரோதம்.
தற்போது ஆன்லைனில் பவளப்பாறைகள் விற்கப்படுவதாக ராமநாதபுரம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தை சோதனை செய்த போது, அதில் பவளப்பாறை புகைப்படத்திற்கு கீழ் 'ராமர் பாலம் கட்டிய கல்' 20 கிராம் 4,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து உடனடியாக வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் காவல் துறையின் கீழ் இயங்கி வரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளோம்.

வனத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் பவளப்பாறைகளை விற்பனை செய்யும் நிறுவனம் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் பவளப்பாறைகளை விற்பனை செய்யும் நிறுவனம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட வன காப்பாளர். விரைவில் கொல்கத்தா வனத்துறை விசாரணையை தொடங்க உள்ளது.
ஆன்லைனில் பவளப்பாறைகள் மட்டுமல்லாமல் பாதுகாக்கப்பட்ட தேசிய பறவைகள், வெளிநாட்டு பறவைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அது சம்பந்தமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் வர்த்தகங்களில் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினரிடம் பொது மக்கள் புகார் அளிக்கலாம்.
மக்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை ஆன்லைனில் வாங்க வேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்வதாக வனச்சரகர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தேசிய அளவில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை

பவளப்பாறைகள் அழிவதால், கடலில் ஏற்படும் பாதிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானி பேட்டர்சன் எட்வர்ட், ஒரு சிலர் தாங்கள் வளர்க்கும் வண்ண மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும், மீன்களை வளர்க்கவும், இறந்த பவளப்பாறைகள் பயன்படுத்தி வருகின்றனர். புதிய பவளப்பாறைகள் உருவாகுவதற்கு இறந்த பவளப்பாறைகள் அடித்தளமாக அமைகின்றன. எனவே இறந்த பவளப்பாறைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
பவளப்பாறைகளை கடலில் இருந்து வெட்டி எடுக்கும் போது பவளப்பாறைகளை சார்ந்துள்ள தாவரங்கள், மீன்கள் உள்ளிட்டவைகள் நிச்சயம் பாதிக்கப்படும். அதற்கான விழிப்புணர்வு தேசிய அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசு, புவி வெப்பமடைதல், கால நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பவளப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வர்த்தக ரீதியாக சிலர் வேட்டையாடி பவளப்பாறைகளை மேலும் அழித்து வருகின்றனர்.
பவளப்பாறைகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் எவ்வாறு பயனுள்ளதாக உள்ளது என்பது குறித்து பொது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

குறிப்பாக வட மாநில மக்களுக்கு பவளப்பாறைகள் குறித்து தெரிய வாய்ப்பில்லை. காரணம் ஆந்திரா, லட்சத்தீவு, தமிழகம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் மட்டுமே பவளப்பாறைகள் அதிகம் உள்ளன.
எனவே மக்களின் அறியாமையை பயன்படுத்தி அதில் ஆன்மீகத்தை சேர்த்து சில மாஃபியா கும்பல்கள் தடை செய்யப்பட்ட அரிய வகை பவளப்பாறைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
வட மாநிலங்களில் இருந்து செயல்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு ராமேஸ்வரம் போன்ற கடற்கரை நகரங்களில் இருந்து சப்ளை செய்து வரும் உள்ளூர் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானி பேட்டர்சன் எட்வர்ட்.
ஆன்லைனில் விற்கப்படுவது உண்மையான பவளப்பாறையா?
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகன் ஜெகதீஷ் சுதாகர், ஆன்லைன் நிறுவனம் ஒன்று ராமர் பாலம் கட்டிய கல் என பவளப்பாறை ஒன்றின் புகைப்படத்தை குறிப்பிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் உள்ளது பவளப்பாறை என்றாலும் அவர்கள் விற்பனை செய்வது உண்மையான பவளப்பாறையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது . விசாரணைக்கு பின் இது குறித்து முழுமையான தகவல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












