சைவ உணவு சர்ச்சை: போக்குவரத்துக் கழக அறிவிப்பின் நோக்கம் என்ன?

உணவகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டில் தொலைதூரப் பேருந்துகளை சாலையோர ஓட்டல்களில் நிறுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது. இதில் சைவ உணவை மட்டுமே தயாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சைவம் என்ற வார்த்தையை மட்டும் நீக்கம் செய்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை வாபஸ் பெறுவதற்கான காரணம் என்ன?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் அவ்வப்போது உணவுக்காக சாலையோரத்தில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. இந்த உணவகங்களில் வழங்கப்படும் இட்லி, தோசை, தேநீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்பட பலவும் தரமற்றவையாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இதனால், தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு கெடுதலை விளைவிப்பது மட்டுமல்லாமல், சாலையோர ஓட்டல்களை நடத்துகிறவர்களின் செயல்பாடுகளும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாமண்டூரில் உள்ள சாலையோர ஓட்டல் கடை ஒன்றில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் உணவுப் பொருள்கள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ` உயர்தர சைவ உணவகங்களுக்கு இணையான உணவை பயணிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்வோம்' என்றார். இந்நிலையில், தொலைதூர பயணம் செல்லும் பேருந்துகளை உணவகங்களில் நிறுத்தம் செய்வதற்கு ஓர் ஆண்டுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டன. இந்த ஒப்பந்தப் படிவத்தை வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சாலையோர உணவகங்களுக்கு முப்பது நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், உணவு வகைகள் தரம் மற்றும் சுவையுள்ளதாக இருக்க வேண்டும். சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்; கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும், அவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும். உணவகத்தில் இருந்து பேருந்து வெளியே வரும்போது நெடுஞ்சாலையில் வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும் வகையில் இடம் இருக்க வேண்டும்; பேருந்துகள் நின்று செல்வதற்கு போதிய இடவசதிகள் இருக்க வேண்டும், பேருந்துகளை நிறுத்தும் இடத்தில் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் போடப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' எனப் பல்வேறு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், ` உணவகத்தில் உணவுப் பொருள்களின் விலைப்பட்டியலை பயணிகளுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும். அனைத்துப் பொருள்களும் நியாயமான சில்லறை விலையைவிட அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதில், `சைவ உணவு மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும்' என்ற வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகளில் இருந்து `சைவம்' என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டனர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு அமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பட்டியலிட்டார். `` சைவ உணவகம் எனக் குறிப்பிட்டது தேவையற்ற சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. `போக்குவரத்துக் கழகத்துக்குள் பா.ஜ.க ஊடுருவிவிட்டதா?' எனப் பலரும் கேள்வியெழுப்பவே நிபந்தனைகளை தளர்த்தியுள்ளனர்'' என்கிறார்.

மேலும், "கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், தங்கள் உணவகங்களில் பேருந்துகள் நிற்பதற்கு உதவி செய்யுமாறு ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று போக்குவரத்துக் கழகத்தில் இருந்து சுற்றறிக்கை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்தன. அவ்வாறு செய்தால் போக்குவரத்துக் கழகத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என அதிகாரிகள் கூறியதால், `ஓட்டல்களில் நிறுத்துவதற்கு போக்குவரத்துக் கழகத்துக்கு பணம் செலுத்த வேண்டும்' எனக் கூறி ஒரு வாகனத்துக்கு நாற்பது ரூபாய் என நிர்ணயம் செய்தனர். இதன்மூலம் போக்குவரத்துக்குக் கழகத்துக்கு வருமானத்தை ஏற்படுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். முன்னதாக, அரசுப் போக்குவரத்துக் கழகமே நடத்தி வந்த சாலையோர உணவகங்களால் லாபமில்லை எனக் கூறி அவற்றைத் தனியாருக்கு கொடுத்துவிட்டனர். அதனை மீண்டும் திறப்பதற்கான வேலையை அரசு செய்யுமா?" என்றார்.

women

பட மூலாதாரம், Getty Images

அதேபோல`` உணவகங்களுக்கு மினிமம் விலை என்ன என்பதைக் குறிப்பிட வேண்டும். சிறிய கடைகளில் உணவருந்தினால் ஜி.எஸ்.டி என்பது கிடையாது. முன்பெல்லாம் உணவகங்களில் இட்லி, தோசை விலை என்ன என்ற விலைப்பட்டியல் இருந்தது. தற்போது அதிகபட்ச சில்லறை விலையைக் குறிப்பிட வேண்டும் என ஒப்பந்தத்துக்கான நிபந்தனையில் குறிப்பிடடுள்ளனர். அதற்கான அளவுகோல் என்ன? அதைப் பற்றி அமைச்சர் விளக்குவாரா?'' என கேள்வி எழுப்புகிறார்.

சைவ உணவு திணிப்பா?

இதுதொடர்பாக, ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் இட்லி இனியவனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ``தொலைதூரங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது சைவ உணவாக இருந்தால் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காது என்ற நோக்கத்தில் அப்படியொரு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கலாம். அதேநேரம், எந்த உணவை தேர்வு செய்ய வேண்டும் என்பது பயணிகளின் விருப்பமாகத்தான் இருக்க வேண்டும். சைவம்தான் சாப்பிட வேண்டும் எனத் திணிப்பது சரியல்ல' என்கிறார்.

போக்குவரத்துக் கழகம் சொல்வது என்ன?

போக்குவரத்துக் கழகம் மீதான சர்ச்சைகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவிடம் பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கேட்டோம். ``மக்களுக்கு சுகாதாரமான நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சைவம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுவிடும். ஆண்டுதோறும் ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போதுதான் இதனைப் பெரிதுபடுத்துகின்றனர். உணவுகளின் விலைப்பட்டியல் தொடர்பாக அரசிடம் கேட்டுள்ளோம்'' என்றார்.

சைவ உணவு என்ற நிபந்தனையை தளர்த்தினாலும் ஏழை எளிய மக்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையில் தரமான உணவு வழங்கப்படுவதை போக்குவரத்துக் கழகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: