ஆர்ஆர்ஆர் திரைப்பட இயக்குநர் ராஜமெளலியின் வெற்றிப்பயணம் - கதை கேட்கும் முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்

    • எழுதியவர், சிட்டத்தூர் ஹரிகிருஷ்ணா
    • பதவி, பிபிசி தெலுங்கு

கடந்த 20 ஆண்டுகளில், 7 வெவ்வேறு கதாநாயகர்களுடன் 12 படங்களை இதுவரை எடுத்துள்ளார். எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியவை. இதுதான் இயக்குநர் ராஜமௌலியின் அடையாளம்.

அந்த வரிசையில் ராஜமெளலியின் அடுத்த படமான ஆர் ஆர் ஆர் இன்று (மார்ச் 25) திரைக்கு வருகிறது.

படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநரான ராஜமௌலியின் முழுப்பெயர் கோடுரி ஸ்ரீசால ராஜமௌலி. சின்னத்திரை தொடர்களின் இயக்குநராகத் தொடங்கி, இன்று திரையுலகில் பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியிருக்கும் ராஜமௌலியின் பயணம் அவ்வளவு எளிமையானது அல்ல.

இயக்குநராகத் தொடங்கியதிலிருந்து 20 ஆண்டுகளுக்குள், தெலுங்கு சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்ற ராஜமௌலி, தெலுங்கு சினிமாத்துறையைக் கடந்து, இந்திய சினிமாத்துறையில், தன் தொடர் வெற்றிகளால் முத்திரை பதித்து கொண்டிருக்கிறார்.

எடிட்டர் ராஜமௌலி

இடைநிலைக்கல்வி முடித்த ராஜமௌலியிடம் நீ என்ன ஆகப்போகிறாய் என்று கேட்டால், நான் சினிமா இயக்குநர் ஆகப்போகிறேன் என்றுதான் பதில் சொல்வாராம். இதற்காக, ராஜமௌலியின் அப்பா அளித்த அறிவுரையை ஏற்று, சினிமாத்துறையின் பிற பிரதான வேலைகளையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அப்படித்தான் எடிட்டிங் அவருக்கு அறிமுகமானது.

இயக்குநர் கே. ராகவேந்திர ராவிடம் உதவி இயக்குநராக சேரும்போது சினிமாவின் பல்வேறு துறைகள் குறித்தும் கற்றிருந்தார் ராஜமெளலி.

கே. ராகவேந்திர ராவின் வழிகாட்டுதலில் சில விளம்பரப்படங்களை இயக்கிய பிறகு, சாந்தி நிவாஸம் என்ற தொலைக்காட்சித் தொடரை ஈ-டிவிக்காக இயக்கினார்.

ஆனால் சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் நிறைவேறியது. ராஜமெளலியின் குருவான ராகவேந்திர ராவ் படத்திற்கு திரைக்கதை எழுதினார். மேலும் தன் குருவின் மேற்பார்வையில் படத்தை இயக்கி முடித்தார் ராஜமெளலி.

தனது யமஹா பைக்கில் தினமும் ராகவேந்திர ராவ் வீட்டுக்குப் போய், அன்றைய தினம் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காண்பித்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்வார்.

ஸ்டூடண்ட் நம்பர்1 என்ற இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்.டி.,ஆர் கதாநாயகனாக நடித்தார், அந்த படம் ராஜமெளலி, ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்குமான வாய்ப்பாக இருந்தது.

தொடர்ந்து இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ராஜமௌலியை ஒரு வெற்றிபெற்ற இயக்குநராக அடையாளம் காட்டியது சிம்ஹாத்ரி (2003) படம்தான்.

இரண்டு வருடத்திற்கு பிறகு தனது இரண்டாவது படத்திற்கான பணியை தொடங்கினார். இதிலும் ஜூனியர் என் டி ஆர்தான் ஹீரோ. ஆனால் அதற்குள் ஆடி என்ற படத்தில் நடித்து அது பெரும் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த படத்தையும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்க வேண்டிய அழுத்தம் ராஜமெளலிக்கு இருந்தது. அதேபோல அவர் இரண்டாவதாக இயக்கிய சிம்ஹாத்ரி படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதற்கு பிறகு அவருக்கு கிடைத்தது எல்லாமே வெற்றிதான்.

அந்தவரிசையில் அவர் இயக்கிய பரபரப்புக்குப் பஞ்சமில்லாத போலிஸ் கதையான விக்ரமர்குடு மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்து அது ராஜமௌலியின் இடத்தை இந்திய சினிமாவில் உறுதி செய்தது.

சாதனைகள்

பாகுபலி திரைப்படத்துக்கு முன்பாக மகதீரா (மாவீரன்) திரைப்படம் மூலம் பெரும் ரசிகர்களை பெற்றிருந்தார் ராஜமெளலி. தன் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதிய கதையிலிருந்து உருவான அந்தப் படத்துக்காக (மாவீரன்) 15 ஆண்டுகள் காத்திருந்ததாக ராஜமௌலி தெரிவித்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக நடித்த ராம் சரண் தேஜாவும் அதன்பிறகு பெரும் வெளிச்சத்தை அடைந்தார்.

மகதீரா படத்திற்கு பிறகு ராஜமெளலி என்ன படத்தை இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் 'நான் ஈ' படத்தை எடுத்தார் ராஜமெளலி. தனது படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஈயை கதை நாயகனாக கொண்டும் கூட என்னால் வெல்ல முடியும் என்று நிரூபித்த படம் அது. ஆனால், "அது உண்மையில்லை. கதை சிறப்பாக இருந்தால் யாரும் எதிலும் வெற்றி பெறலாம்" என்று ராஜமௌலி தன் நேர்காணல்களில் கூறுவார். இது பாகுபலியை காட்டிலும் கடினமாக ஒரு படமாகதான் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகுபலி

இதுவரை ராஜமெளலி எடுத்த படங்களில் அதிக வருவாய் ஈட்டியது பாகுபலி திரைப்படம்தான். இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது பாகுபலி. கட்டப்பாவை கொன்றது யார்? என்ற கேள்வி இந்தியா முழுவதும் கேட்கப்பட்டது. இது சர்வதேச அளவில் பெயர் பெற்றது. அது ஒரு சூப்பர் ஹீரோ படமாக உலகிற்கு அறிமுகமானது.

பாகுபலி சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்றிருந்தாலும் அதில் உள்ள உருக்கமான காட்சிகள் மேலும் சிறப்பாக இயக்கப்பட்டிருக்கலாம் என்று ராஜமெளலி பலமுறை தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். பாகுபலி ஒரு துணிச்சலான முயற்சி என்று பலரும் தெரிவித்தாலும் அதை மறுக்கும் ராஜமெளலி அனைவரும் வாழைப்பழம் விற்ற ஒரு இடத்தில் தான் மாம்பழம் விற்றதே தனது விளம்பர யுக்தி என்பார்.

வாழ்நாள் குறிக்கோள்

ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறும் என்று அவர் நம்புகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை.

300 - 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கான டிக்கெட்களை விலை உயர்த்தி விற்பனை செய்ய தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.

ஆனால், இப்படியான வெற்றிப்படங்களைக் கடந்து, தன் வாழ்நாள் குறிக்கோள் என்பது மகாபாரதத்தை இயக்குவதுதான் என்கிறார் ராஜமௌலி. பலமுறை பொதுவெளிகளிலும், நேர்காணல்களிலும் இதை மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார். காரணம், சிறுவயது முதலே இவர் கேட்டு வளர்ந்த மகாபாரதக் கதைகள்தான் இன்னும் இவரது மூளையில், பிரமாண்ட படங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதை அப்படியே படமாக எடுத்தால் நிச்சயம் பெருவெற்றி கிடைக்கும் என்றும் சொல்கிறார் ராஜமௌலி.

கனவிலும் கற்பனையிலும் இருக்கும் கதைகளை காட்சிக்கு கொண்டுவரும் தன் கலையால் கிடைத்த தொடர் வெற்றிகளாலும் குவியும் ரசிகர்களின் ஆதரவாலும் இந்திய சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.

ராஜமெளலி மீது வைக்கப்படும் விமர்சனங்கள்

ராஜமெளலி பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவரின் படங்களில் அதீத வன்முறை காட்சிகள் வைக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களை வடிவமைக்கும்போது சினிமாவில் உள்ள வரைமுறை சுதந்திரத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்கிறார் என்ற ஒரு விமர்சனமும் உண்டு.

அவரது ரசிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, அவர் படங்களுக்கு இடையே அதிக இடைவெளி எடுத்து கொள்கிறார் என்பது. இதனால் பல சமயங்களில் நடிகர்கள் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: