ஜப்பான் பிரதமருக்கு நரேந்திர மோதி வழங்கிய சந்தன கட்டை பரிசுப்பொருட்கள்

ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா

பட மூலாதாரம், Twitter/@narendramodi

படக்குறிப்பு, ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா

இன்று (21.03.2022) வெளியான நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே சுருக்கமாக வழங்குகிறோம்.

இந்தியா-ஜப்பான் இடையிலான 14வது வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா.

இவருக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கப்படும், நுண்ணிய வேலைப்பாடுள்ள கலைப்பொருளான கிருஷ்ண பங்கியை இந்திய பிரதமர் மோதி நினைவுப்பரிசாக வழங்கினார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தன மரத்தாலான இந்த கிருஷ்ண பங்கியில் கிருஷ்ணரின் உருவச்சிலைகள், கையால் செதுக்கப்பட்ட மயில் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: ராஜஸ்தானின் சுருவில் உள்ள தலைசிறந்த கைவினைஞர்களால் சந்தன மரத்தை துல்லிமயாகச் செதுக்கி இந்த பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கலைஞர்கள் ஏற்கெனவே சந்தன கலைப்பொருளை அழகிய மற்றும் நேர்த்தியான கலைப்படைப்பாக செதுக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். ஜப்பான் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள கலைப்பொருள் தூய சந்தனத்தால் ஆனது. இந்த சந்தன மரம், முக்கியமாக இந்தியாவின் தென் பகுதி காடுகளில் அதிகம் வளரும். இந்தியாவில், சந்தனம் ஒரு வழிபாட்டுப் பொருளாகவும் அதன் மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தல்: 3 ஆண்டுக்குப் பின் முடிவுகள்

நடிகர் சங்கத் தேர்தல்

3 ஆண்டுகால இழுபறிக்குப் பின்னர், தமிழ்நாடு நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றதாக தினத்தந்தி நாளிதழ் தெரிவித்துள்ளது.

நாசர் தலைமையிலான இந்தப் பாண்டவர் அணியானது, தங்களை எதிர்த்து ஐசரி கனேஷ் தலைமையில் போட்டியிட்ட சங்கரதாஸ் சுவாமிகள் அணியை வீழ்த்தி முக்கியப் பொறுப்புகள் ஐந்தையும் கைப்பற்றின.

அந்தமானில் உருவாகும் புதிய புயல்

இந்திய வானிலை ஆய்வு மையம்

பட மூலாதாரம், IMD

அந்தமான் கடல் பகுதியில் இன்று `அசானி` என்ற புயல் உருவாகிறது என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது அந்தமான்-நிக்கோபர் தீவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் வருகை காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் முதல்வராக பீரேன் சிங்

பீரோன் சிங்

மணிப்பூர் முதல்வராக பீரோன் சிங் தேர்வானதாக தி ஹிந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் இம்பாலில் நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக கட்சியின் மேலிட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில், பீரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சியமைக்க பிரேன் சிங் உரிமை கோர உள்ளார். விரைவில், பீரேன் சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். கோவாவிலும் ஆட்சியமைக்க பாஜக இன்று உரிமை கோர உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றிவிட்டோம்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்
படக்குறிப்பு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு அமைச்சர்

கடந்த வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியாவதற்குள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக,. வேளாண் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, விவசாயிகளை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டு சென்ற எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமியோ, திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு என்று ஒரு பச்சைப் பொய்யை அறிக்கையாக, பேட்டியாக கொடுத்திருக்கிறாா். அதற்கு முதலில் எனது கடும் கண்டனம் என்று தொடங்கும் அந்த அறிக்கை, சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் அளித்த அறிவிப்புகளை, இந்த வேளாண் நிதி நிலை அறிக்கைக்குள் நிறைவேற்றியுள்ளது திமுக அரசு என்று கூறி முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :