You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவை எதிர்த்துப் போராட யுக்ரேன் துணை ராணுவத்தில் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர் சாய் நிகேஷ்
கோவையிலிருந்து யுக்ரைனுக்கு பொறியியல் படிக்கச் சென்ற சாய் நிகேஷ் என்கிற நான்காம் ஆண்டு மாணவர் ரஷ்யாவுக்கு எதிராக போரிட யுக்ரேன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூர் சுப்ரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாய் நிகேஷ். கடந்த 2018-ம் ஆண்டு கோவை வித்யா விகாஷினி பள்ளியில் படிப்பை முடித்தவர். இந்திய ராணுவத்தில் சேர இரண்டு முறை முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அது சாத்தியப்படாத நிலையில் அமெரிக்க இராணுவத்தில் இணைய முடியுமா என்று அமெரிக்க தூதரகத்திலும் விசாரித்துள்ளார். சாய் நிகேஷின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் யுக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள தேசிய விண்வெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் யுக்ரேனில் போர் தொடங்கிய பிறகு இந்திய மாணவர்கள் வெளியேறிய நிலையில் சாய் நிகேஷ் கார்கிவ் நகரை விட்டு வெளியேற மறுத்துள்ளார். நாடு திரும்ப அவரின் பெற்றோர் வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை என்கிறார்கள் சாய் நிகேஷின் உறவினர்கள். சாய் நிகேஷுக்கு தம்பி ஒருவர் உள்ளார்.
சாய் நிகேஷின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டபோது அவர்கள், தாங்கள் தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை எனத் தெரிவித்துவிட்டனர்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சாய் நிகேஷின் உறவினர், "சாய் நிகேஷுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் இந்தியாவில் அவர் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தான் பொறியியல் படிப்பை மேற்கொள்ள அவரின் பெற்றோர்கள் யுக்ரேனில் அவரைச் சேர்த்துள்ளனர். ஆனால் ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற அவரின் ஆர்வம் மட்டும் குறையவில்லை.
ஒரு கேமிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பதாக குடும்பத்திடம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருடைய ராணுவத்தின் மீதான ஆர்வம் குறையாமல் இருந்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. இந்தியர்கள் எவ்வளவோ நாடுகளின் ராணுவத்தில் பணிபுரிகின்றனர்.
ஆனால் தற்போது யுக்ரேனில் நிலவுவதைப் போன்ற உள்நாட்டு போர் நடைபெறும் சூழலில் சாய் நிகேஷ் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை. உளவுத்துறை மூலமாகத்தான் இந்த தகவல் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. அதன் பின்னர் உளவுத்துறை தொடங்கி பாதுகாப்பு துறையினர் வரை தொடர்ந்து அவர் குடும்பத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவரது குடும்பத்தினரும் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். இதனால்தான் ஊடகங்களிடம் பேசுவதை தவிர்த்து வருகின்றனர். சாய் நிகேஷிடம் அடிக்கடி அழைத்து பேச வேண்டாம் என அவர்களிடம் கூறியுள்ளேன். தற்போதைய சூழலில் இருந்து அவரை எப்படி வெளிக்கொண்டு வர முடியும் என்பது எங்கள் யாருக்கும் தெரியவில்லை.
ஊடகங்களில் செய்தி வந்த பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பதற்றம் அடைய வேண்டாம், எதுவென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஆறுதல் சொல்லும் விதமாக வாட்சாப்பில் வாய்ஸ் நோட் மட்டும் அனுப்பியுள்ளேன். சாய் நிகேஷ் பாதுகாப்பாக திரும்பி வந்துவிட வேண்டும். எங்களின் தற்போதைய தேவை அது ஒன்று மட்டும் தான்," என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக காவல்துறையின் உளவுப் பிரிவில் விசாரித்தபோது, "ஊடகங்களில் வந்த தகவல்களை தாண்டி எங்களிடம் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவர் அவருடைய சொந்த முடிவில்தான் இணைந்துள்ளதாக தெரிகிறது. மாணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அங்கு என்ன நிலை என்று தெரியவில்லை. மேலதிக தகவல்களை திரட்டி வருகிறோம்" என்றனர்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஹரிஹரன், "யுக்ரைனில் போர் முடிவில்லாமல் நடைபெற்று வருகிற நிலையில் ராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்களும் போரிட வர வேண்டும் என ஸெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இது சரியா, தவறா என்று விவாதிக்க தேவையில்லை. போர் என்பதே தவறான ஒன்று தான்.
ஸெலன்ஸ்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து யுக்ரேனில் பல்வேறு நகரங்களில் பொதுமக்களிடம் சண்டையிட ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவும் இதே முறையில் பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்கி போரிட்ட வரலாறு உண்டு. அதே போல் ஐரோப்பிய நாடுகளிடமும் ஸெலன்ஸ்கி ஆதரவு கோரியிருந்தார்.
பல ஐரோப்பிய நாடுகள் யுக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கின. அண்டை நாடுகளிலிருந்து தன்னார்வலர்களும் யுக்ரைனுக்கு ஆதரவாக போரிட வந்தனர். அவ்வாறு ஜார்ஜியாவில் இருந்து வந்த ஒரு தன்னார்வலர் படையுடன் இந்த மாணவர் இணைந்துள்ளார். அவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இது அவரின் தனிப்பட்ட முடிவாகத் தான் பார்க்க முடியும்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்